full screen background image

அடுத்தது பேரறிவாளன்-அற்புதம் அம்மாள் கதைதான்..! – இயக்குநர் ராம் பேச்சு..!

அடுத்தது பேரறிவாளன்-அற்புதம் அம்மாள் கதைதான்..! – இயக்குநர் ராம் பேச்சு..!

2 வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து அதன் பின்பும் வெளியாகாமல் பல பிரச்சினைகளைச் சந்தித்து கடைசியாக  ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் மூலமாக திரைக்கு வந்து தமிழக ரசிகர்களின் மனதைத் தொட்ட ‘தங்கமீன்கள்’ திரைப்படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினைப் பெற்று வந்த கையோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ‘தங்கமீன்கள்’ இயக்குநர் ராம்.

Thanga Meengal Tream Thanks Media (8)

முதலிலேயே ஒன்றைத் தெளிவாக்கிவிட்டார் ராம். “தங்கமீன்கள் படத்தை முதலில் தயாரித்தது கெளதம் ஸார்தான். ஆனால் அதன் பின்பு அவர் ஜெ.சதீஷ்குமாருக்கு சென்சார் சர்பிடிகேட் உட்பட அனைத்து உரிமைகளையும் விற்றுவிட்டதால்தான் இந்த விருதை சதீஷ்குமார் டெல்லி வந்து பெற்றுக் கொண்டார்..” என்றார். ஓகே ஒரு பெரிய சந்தேகம் தீர்ந்தது..!

ராம் தன்னுடைய பேச்சின் துவக்கத்திலேயே தேசிய விருதுகளின் ஜூரி சிஸ்டத்தை பற்றி நிறையவே பேசினார். “இந்த தேசிய விருது ஒன்றுதான் இந்தியா என்ற கூட்டமைப்பை நினைவுப்படுத்தும் நிகழ்வு. அதில் இந்த வருடம் நான் பங்கெடுத்துக் கொண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த முறை ஜூரிகளில் எந்த பிரச்சினையும் இல்லை. லாபி பாயிண்ட்டெல்லாம் கிடையவே கிடையாது. தமிழில் இருந்து தங்கர்பச்சான் மட்டுமே இதில் இருந்தார். அனைத்து நீதிபதிகளும் குழு மனப்பான்மையோடுதான் படங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரேயொரு படம் அனைத்து விருதுகளையும் பெறும். இந்த முறை அப்படியில்லாமல் நாட்டின் பல பகுதிகளுக்கும் விருதுகள் பகிர்ந்து தரப்பட்டுள்ளன… ஜூரிகளாக யார் வேண்டுமானாலும் இடம் பெறலாம். இதற்கான விண்ணப்ப மனுக்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன. அதற்கான தகுதிகள் உங்களுக்கு இருந்தால் நீங்களே அடுத்த வருஷம் ஜூரியாக போகலாம்..” என்று பத்திரிகையாளர்களையே தூண்டிவிட்டார்.

பேச்சு அப்படியே பொண்ணு சாதனா பக்கம் திரும்பியது. “இந்தப் பொண்ணுதான் பாவம்.. 4 வருஷத்துக்கு முன்னாடி சின்னப் பொண்ணா இருந்தப்போ நடிச்சது.. அப்பவே நிறைய பேரு.. ‘என்னம்மா ஏதோ படத்துல நடிச்சியாமே.. படம் வருமா? வராதா?’ன்னு கேட்டு நிறைய டார்ச்சர் செஞ்சிருக்காங்க.. அதையெல்லா்ம் கேட்டுட்டு பதில் சொல்லத் தெரியாம கண்ணு கலங்கியிருக்கு. நான் அதுக்கப்புறம் கூப்பிட்டபோதெல்லாம் ஓடி வந்து எல்லா நிகழ்ச்சிலேயும் கலந்துக்குச்சு.. இந்த விருது நிச்சயமா அந்தப் பொண்ணுக்குக் கிடைக்கும்ன்னு நான் உறுதியா நம்புனேன்.. அதுக்குக் காரணம் அந்தப் பொண்ணு காட்டின நடிப்பு.. இதுக்கு விருது கிடைக்கலைன்னா நான் என்னோட டைரக்சன்ல் ஏதோ தப்பு பண்ணியிருக்கேன்னு நீங்கெல்லாம் நினைச்சிருக்கணும்..” என்றார்.

அவருடைய குருநாதர் பாலுமகேந்திரா பற்றிய பேசியபோது கண்களில் மின்னலடிக்க சோகத்தை மறைத்துக் கொண்டார் ராம்.

“இந்த விருதுகளெல்லாமே பாலுமகேந்திரா ஸாருக்கு சமர்ப்பணம்தான். அவரில்லாமல் நாங்களில்லை.. இந்தப் படத்தைப் பார்த்திட்டு ‘இந்தப் படத்துக்கு தேசிய விருது நிச்சயம்டா… அதை நான் பார்க்கணும்டா’ன்னு ரொம்ப ஆசையா சொல்லியிருந்தார்.. பட். அது நடக்காம போயிருச்சேன்ற வருத்தமும் எங்களுக்குள்ள நிறையவே இருக்கு..” என்றார்.

கடைசியாக அவர் சொல்லியதுதான் இந்தப் பதிவின் தலைப்புச் செய்தி. இந்தத் ‘தங்கமீன்கள்’ அப்பா-மகள் உறவைப் பற்றிச் சொல்லியது. அடுத்து இ்பபோ நான் எடுத்துக்கிட்டிருக்குற ‘தரமணி’ படத்துக்கப்புறம் அம்மா-மகன் உறவை மையமா வைச்சு எடுக்கப் போறேன். பேரறிவாளன் அவரது தாய் அற்புதம்மாளின் வாழ்க்கைக் கதையா அந்தப் படம் இருக்கும். அது நிச்சயம் இதேபோல பேசப்படும் படமா இருக்கும்..” என்று உறுதியாகச் சொன்னார்..

இங்கே இருக்கிற அரசியல் தில்லுமுல்லுகள்.. சித்து விளையாட்டுக்களையெல்லாம் தாண்டி அண்ணன் ராம், இந்த படத்தை எடுத்துக் காண்பித்து தமிழ்ச் சினிமாவை உயர்த்த வேண்டுமாய் வாழ்த்துகிறோம்..!

Our Score