இயக்குநர் பார்த்திபனின் கோரி்க்கை – செயல்படுத்துமா தயாரிப்பாளர் சங்கம்..?

இயக்குநர் பார்த்திபனின் கோரி்க்கை – செயல்படுத்துமா தயாரிப்பாளர் சங்கம்..?

நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன் தான் இயக்கியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, திரைப்படங்களின் வெளியீட்டில், தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். பண்டிகை நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவர் இது குறித்து பேசும்போது, “பண்டிகை நாட்களில் ஏன் பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட வேண்டும்..? அவர்கள் படங்கள் எந்த நாளில் வெளியானாலும் கூட்டம் தானாகவே சேர்ந்துவிடும். இன்னும் சொல்லப் போனால் அவர்களது படங்கள் வெளியாகும் நாள்தான் தமிழகத்தில் பண்டிகை நாளாகவே மாறுகிறது. நானே அஜீத் படமென்றால் முதல் நாள், முதல் ஷோவிலேயே படத்தைப் பார்த்துவிடுவேன். அப்படியொரு ரசிகன் நான். நானே இப்படியென்றால் மற்ற ரசிகர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்..?

பண்டிகை நாட்களில் தயவு செய்து சின்ன பட்ஜெட் படங்களை மட்டும் ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வரும். பண்டிகை நாட்களில் அதிகப்படியான பணப்புழக்கம், விடுமுறை, கேளிக்கை, கொண்டாட்டமான மன நிலையில் இருக்கும் ரசிகர்கள் நிச்சயமாக சின்ன பட்ஜெட் படங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். அதனால் சின்ன படங்கள் வாழும். இதை தயாரிப்பாளர் சங்கம் மனதில் வைத்து செயல்பட வேண்டும்..” என்று கோரிக்கை வைத்தார்.

அண்ணன் பார்த்திபன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. பண்டிகை நாட்களில்தான் படம் பற்றிய விமர்சனங்களை கேட்காமல், படிக்காமல், பார்க்காமல்.. இன்னிக்கு ஒரு சினிமாவுக்கு போகணும்.. ஜாலியா இருக்கணும் என்கிற நினைப்பில் பலரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வருவார்கள். அந்தக் கூட்டத்தின் வருகையினால் நிச்சயமாக சின்ன பட்ஜெட் படங்கள் வாழும்.. இந்த நடைமுறையை தமிழ்த் திரையுலகத்தினர் ஏற்றுக் கொண்டால் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தினர் மனம் வைப்பார்களா..?




error: Content is protected !!