“தமிழ்ச் சினிமாவில் திறமையுள்ளவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை..” – நடிகர் பார்த்திபனின் வருத்தம்..!

“தமிழ்ச் சினிமாவில் திறமையுள்ளவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை..” – நடிகர் பார்த்திபனின் வருத்தம்..!

“தமிழ்ச் சினிமாவில் திறமையுள்ளவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை..” என்று நடிகர் பார்த்திபன் பெரிதும் வருத்தப்பட்டிருக்கிறார். இன்றைய ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில் இது பற்றி தெரிவித்திருக்கிறார்.

“இந்தாண்டுக்கான தேசிய விருது பட்டியலில் இடம் கிடைக்காததினால் உங்களுக்கு கோபம் இல்லியா..?” என்கிற கேள்விக்கு, பார்த்திபன் அளித்த பதிலில் அவரது வருத்தம் தெரிந்தது.

பார்த்திபன் தனது பதிலில், “இதுக்கு நாம தகுதியானவன் இல்லைன்னு நாமளே ஒதுங்கிப் போக ஆரம்பிச்சோம்னு வைச்சுக்குங்க. அப்ப நம்ம மேலே நமக்கே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமாகிடும்.

நான் குறைஞ்சது நாலு வருஷமா காத்துக்கிட்டிருக்கேன். என் மலையாளப் படம் ‘மேல்விலாசம்’ வந்தப்ப ‘மதியம் மூணு மணிக்கு அறிவிப்பு வரும். உங்களுக்குத்தான் அவார்டு’ன்னு பலர் அடிச்சு கருத்து சொன்னாங்க. அறிவிப்பு வந்த பிறகு எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.

அதேபோல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு நிச்சயம் நமக்கு விருது கன்பார்ம்ன்னு நானே நம்பினேன். திரும்பவும் ஏமாற்றம். இந்த முறை என் ‘திரைக்கதை வசன’த்துக்குக் கிடைக்கும் என்று நம்பினேன்.

நான் எல்லா படத்துக்கும் விருது கிடைக்கும்னு எதிர்பார்ப்பதில்லை. ஏதோ ஒரு சில படங்களுக்குத்தான் எதிர்பார்ப்பேன்.  அப்படி விருதினை எதிர்பார்த்து எடுத்த படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.

இந்தப் படத்தை பாரதிராஜாவே பல முறை புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் வாழ்த்தும்போதெல்லாம் நான் ஆனந்தக் கண்ணீரோடு அதை எதிர் கொண்டிருக்கிறேன். அவர்தான் இம்முறை தேர்வுக் குழுத் தலைவராக இருந்தார். குழுவில் என் குருநாதர் பாக்யராஜூம் இருந்தார். இதனால் எனக்குள் லேசான நம்பிக்கை இருந்தது.

இங்கே ஒரு நல்ல படத்திற்காக குரல் கொடுக்க ஆட்கள் வேணுங்க. அப்பத்தான் அது கவனிக்கப்படும். மலையாளத்தில் அப்படி குரல் கொடுக்கிறார்கள். அவர்களின் மாநிலத்திற்கு விருதுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். இங்கே திறமையிருப்பவர்களுக்கு எல்லாம் விருது கிடைப்பதில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.

பார்த்திபன் அண்ணன் எந்தப் பிரிவில் தனது படத்திற்கு விருதினை எதிர்பார்த்தார் என்று தெரியவில்லை..! இது தெரியாமல் நாமளும் கருத்து சொல்ல முடியாது..! 




error: Content is protected !!