நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் நலன் குமாரசாமி

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் நலன் குமாரசாமி

சிபிராஜுக்கு இது அவரது கேரியரின் பொற்காலம் என்றால் மிகையில்லை. 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியின் மூலம் முன்னணி ஹீரோக்களுக்கான வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

'நாய்கள் ஜாக்கிரதை' வெற்றி இளைஞர்களிடம் மட்டுமல்லாது குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து சிபிராஜை அனைவருக்குமான ஹீரோவாக மாற்றிவிட்டது.

இதனால் சிபிராஜ் தனது அடுத்தடுத்த படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமும் அக்கறையும் காட்டுவதால் வரவிருப்பதெல்லாம் வெற்றிப் படங்களாகவே அமையப் போகின்றன என்பது உறுதி.

அந்த வரிசையில் சிபிராஜ் நடிப்பில் அடுத்து வரவிருப்பது இயக்குநர் அறிவழகனிடம் அசோஸியட் இயக்குநராக அனுபவம் பெற்ற, மணி செய்யோன் இயக்கும் கமர்ஷியல் படமாகும்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிபிராஜ், மட்டுமல்லாது ஐஸ்வர்யா, காளி வெங்கட், யோகி பாபு, லிவிங்ஸ்டன், மைம் கோபி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

கலை – தேவா, ஒளிப்பதிவு – ஆனந்த் ஜீவா, இசை – சமிர் சந்தோஷ், எடிட்டிங் – சூர்யா, இயக்கம் – மணி செய்யோன்.

இந்தப் படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரவிருக்கிறது.

இந்தப் படத்தின் பெரிய சிறப்பு என்னவெனில், ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என வித்தியாசமான அதே நேரத்தில் சூப்பர் ஹிட் படங்களை நமக்கு தந்து சினிமாவுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாய் விளங்கும் இயக்குநர் நலன் குமாரசாமி இந்த படத்தில் நடித்திருப்பதுதான்.

படத்தில் மீன் மருத்துவராக நலன் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும். கதையை கேட்டவுடனேயே நலன் நடிக்க ஒப்புக் கொண்டதோடு தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்தும் முடித்துவிட்டார். ஆனால் இதனை இந்த நிமிடம்வரை சஸ்பென்ஸாக வைத்திருந்து நமக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது படக் குழு.

சிபிராஜின் இந்தப் படத்திற்கு நல்ல பெயரை வைக்க இப்போது மும்முரமாக தலைப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள் படக் குழுவினர்.