“விஷால் ஒரு பொறுக்கிப் பயல்…” – கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்..!

“விஷால் ஒரு பொறுக்கிப் பயல்…” – கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்..!

‘துப்பறிவாளன்-2’ படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் மிஷ்கின் நிறைய நிபந்தனைகளை தயாரிப்பாளர் விஷாலுக்கு விதித்ததாகவும், அதனாலேயே மிஷ்கின் அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இப்போது விஷாலே அந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனை விஷால் மறுக்கவில்லை. மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் அடங்கி செய்தியையே வெளியிட்டு பரபரப்பாக்கிய கையோடு.. தானே துப்பறிவாளன்-2 படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின் இது தொடர்பாக பல செய்திகளை வெளியிட்டதோடு விஷால் தன் தாயை தரக்குறைவாகப் பேசியதாகவும், தன்னுடைய தம்பியை அடித்ததாகவும் புகார் சொல்லி ஆவேசப்பட்டார்.

மிஷ்கின் பேசும்போது, “ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் விஷாலை மோசமாக பேசியபோதும், பார்த்தபோதும் அவரை என் தோளில் போட்டு என் சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம்கூட விஷால் அளவுக்கு அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காகத்தான் ‘துப்பறிவாளன்’ படத்தின் கதையை எழுதினேன்.

ஒரு வருடமாக அந்தக் கதையை யோசித்து எழுதினேன். என்னுடைய ஒவ்வொரு கதையின் க்ளைமாக்ஸ் காட்சியையும் 10 நாட்கள் எழுதுவேன். ‘துப்பறிவாளன்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியையும் அப்படித்தான் எழுதினேன்.

2018-ல் ‘துப்பறிவாளன்’ வெளியானது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது திடீரென்று ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அப்போது 3 உதவியாளர்களுடன் க்ளைமாக்ஸ் காட்சியை நான் மட்டும் ஷுட் செய்தேன். கடைசியில் எங்களுக்கு பணமில்லை. 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டை காட்சியை, 6 மணி நேரத்தில் எடுத்துக் கொடுத்தேன். படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அது அனைவருக்கும் தெரியும்.

அதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு ப்ளாப். ‘துப்பறிவாளன்’ மட்டும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய்.

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அடுத்தப் படத்திற்கான கதையை எழுதச் சொன்னார் விஷால். நானும் எழுதினேன். ‘எனக்கு நிறைய கடன் இருக்கு. அதனால் தமிழ்ல மட்டும்ன்னு இல்லாமல் அனைத்து இந்திய மொழிகளில் டப்பிங் செய்யும் அளவுக்கு கதை பண்ணுங்க…’ என்றார்.

அவர் சொன்னதுக்காகவே ‘கோகினூர் வைரத்தை மையமாக வைத்து கதை எழுதுகிறேன். ‘இந்தக் கதையைப் படமாக்கினால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து மொழிகளிலும் டப்பிங் பண்ணலாம்’ எனச் சொன்னேன்.

அந்தக் கதையை எழுதி முடித்தவுடன், அதைக் கேட்டுவிட்டு பாபி என்ற தயாரிப்பாளர் பிடித்துப் போய் எனக்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார். அதற்குப் பிறகு அந்தக் கதையைக் கேட்டு விஷாலுக்கு பிடித்துப் போய் என்னை கட்டிப் பிடித்து அழுதார்.

‘இந்தக் கதை எனக்கு போதும். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன்’ என்றார். கூடவே, ‘அந்த பாபி தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன்’ என்றார். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி.

நான் அப்போதே சொன்னேன். ‘தம்பி ஏற்கெனவே உனக்கு நிறைய கடன் இருக்கு. இப்போ இந்தப் படம் பல்வேறு நாடுகள்ல ஷூட் பண்ண வேண்டிய கதை.. இதுக்கே நிச்சயமாக 19 கோடி முதல் 20 கோடி ரூபாய்வரை செலவாகும்.. நீ தாங்க மாட்ட..  நீ இப்பவே கடனாளியாக இருக்கிறாய். ‘ஆக்‌ஷன்’ படம் வேறு வெளியாகவுள்ளது. ஒரு வேளை அந்தப் படம் சரியாக போகவில்லை என்றால், உன் மீது அதிகமான பாரம் வரும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே..’ என்று அப்போதே எச்சரித்தேன்.  ‘இல்லை சார், இந்தப் படத்தை நான்தான் தயாரிப்பேன். இது எனக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும்’ என்று பிடிவாதமாய் சொன்னார்.

அப்போ ‘துப்பறிவாளன்-‘ மூன்றாம் பாகமாக இதைப் பண்ணலாம். 2-ம் பாகமாக சென்னையில் நடப்பது மாதிரி வேற ஒரு கதையை 10 கோடி ரூபாய்ல முடிக்கிற மாதிரி எழுதித் தருகிறேன்’ என்று சொன்னேன். அப்போதும்.. ‘இல்லை.. இல்லை.. இந்தக் கதையைத்தான் பண்ண வேண்டும்’ என்று சொன்னார்.

நான் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இங்கிலாந்திற்கு சென்றது கிடையாது. இந்தக் கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் வெறும் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும்தான்.

ஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக சொல்கிறார் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஒரு கதை எழுதுவதற்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்கிறான் என்றால், அவன் இயக்குநராவதற்கே தகுதியற்றவன் என்று சொல்வேன். விஷால் சொன்னதை அப்படியே எழுதிய அனைவரும் ‘அதற்கான ஆதாரம் எங்கே..?’ என்று அவரிடம் கேட்க வேண்டும்.

அதற்குப் பிறகு ‘இதுவரைக்கும் படப்பிடிப்புக்காக மட்டும் 13 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறேன்…’ என்று சொல்லியிருக்கிறார் விஷால். இதுவும் பொய். ‘இதுவரையிலும் மொத்தம் 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன்’ என்று விஷால் தெரிவித்துள்ளார். அதன்படி பார்த்தாலும், 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய்தான் வருகிறது. அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால்கூட 10 கோடி ரூபாய் வரைதான் வந்துள்ளது. மீதி 3 கோடிக்கு கணக்கு எங்கே..?

அந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு போய் படம் பண்ண வேண்டும் என்றால் உங்களுடைய கம்பெனியில் இருந்து பண்ண முடியாது. அங்கு ஒரு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘புட்லூர் அம்மன் நிறுவனம்’. அந்த நிறுவனத்துக்கு விஷால் நிறுவனத்திலிருந்து எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்று கேட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் தயாரிப்புப் பணியின்போது ஒவ்வொரு இடத்திலும் நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் தாயை அசிங்கமாக திட்டினார். விஷாலுக்கு நான் என்ன துரோகம் செய்தேன். நான் செய்த ஒரே துரோகம், அவனிடம் அறத்தோடு இருந்ததுதான். அவன் தப்பு பண்ணும் போதெல்லாம், ‘தப்பு பண்ணாதடா’ என்று சொன்னதுதான். அவனுக்காக நல்ல கதை எழுதிக் கொடுத்தது என் தவறு.

‘எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது’ என்று சொல்கிறான். என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும். நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று..? ‘பிசாசு’ படத்தில் ஒரு பேயை தேவதை ஆக்கியவன் நான். ‘சைக்கோ’ படத்தில் 14 கொலைகள் பண்ணியவனையும் மன்னிக்கலாம் என்று சொன்னவன் நான். என்னுடைய கதைகளில் இருக்கிறது அறம். நீ என்னை சொல்ல வேண்டாம் நான் கெட்டவன் என்று…!

இவ்வளவு நாள் கழித்து ஏன் இப்போது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் என்று கேட்டீர்களா…? 10 நாட்களாக என் அலுவலகத்துக்கு அலைந்து ‘கதையைக் கொடு’, ‘NOC கொடு’ என்று என் உயிரை எடுத்து வாங்கிச் சென்றார்கள். அப்போது என் தம்பி, ‘எடுத்துக் கொடுத்துவிடுங்கள் அண்ணா’ என்று சொன்னான்.

நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கத்துக்கோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா…? 8 மாதங்கள் உட்கார்ந்து கதை எழுதி, 32 நாட்கள் ஷுட் செய்து, NOC கொடுத்த பின்பு என்னைப் பற்றி தவறாக பேசுகிறார் விஷால். உன்னால் ஒரு கதையாவது எழுத முடியுமா…? ‘சக்ரா’ படத்தின் கதைக்குக்கூட நான் உதவியிருக்கிறேன். இவனெல்லாம் என்னை மாதிரி படித்திருக்கிறானா…?

நீ ஒரு பொறுக்கி விஷால்..! நீ என்னடா எங்கள் அம்மாவை பற்றி தவறாக பேசுவது? நீ என்ன எம்ஜிஆரா.. கலைஞரா.. சமூகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் நீ என்ன செய்தாய் என்று எனக்குத் தெரியாதா..? என்னை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கச் சொல்லி தாணு உள்ளிட்டோரை தவறாகப் பேசச் சொன்னார்.

என்னுடைய தயாரிப்பாளர்கள் ஜபக், அகோரம், உதயநிதி ஆகியோரிடம் கேள்.. நான் எப்படி பணிபுரிந்திருக்கிறேன் என்று சொல்வார்கள். உன் தாய், தந்தை சொல்வார்கள் நான் எப்படி பழகியிருக்கிறேன் என்று. உன் சகோதரியிடம் கேள். நான் எவ்வளவு அன்பு உன் மீது வைத்திருந்தேன் என்று சொல்வாள்.

ரமணாவும், நந்தாவும் உன்னை நடுத்தெருவில் நிற்க வைப்பார்கள் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்தது. இன்று படம் நின்று போனதற்கும் அவர்கள்தான் காரணம்.

என் தாயைத் திட்டியதற்குப் பிறகும் எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும்..? என் தம்பியை என் கண் முன்பாகவே அடித்தார்கள். என் தம்பி எதுவும் சொல்லவில்லை. ‘பிரச்சினை வேண்டாம். விட்ருண்ணே’ என்று சொல்லிவிட்டான்.

இனி நான் விடமாட்டேன். தமிழகத்தில் இதுவரையிலும் நான் மட்டும்தான் விஷாலை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவரிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்தாரா..? இதுவொரு தமிழனுடைய கோபம்.

தம்பி விஷாலு.. உன் வேலையை எல்லாம் இங்கு காட்டாதே. உனக்கு இருக்கு ஆப்பு. இதுதான் தொடக்கம். இன்று முதல் நீ தூங்கவே மாட்டாய். உன் தரப்பில் நியாயம் இருந்தால் வா குருஷேத்திரப் போருக்கு. வா போரிடலாம்…” என்று ஆவேசமாகப் பேசி முடித்தார்.