full screen background image

“துப்பறிவாளன்’ ஷெர்லாக் கோம்ஸ் போன்ற கதை..” – இயக்குநர் மிஷ்கின் தகவல்..!

“துப்பறிவாளன்’ ஷெர்லாக் கோம்ஸ் போன்ற கதை..” – இயக்குநர் மிஷ்கின் தகவல்..!

‘துப்பறிவாளன்’ திரைப்படத்தை, விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு படத் தொகுப்பு – அருண், இசை – அரோல் கரோலி, ஒளிப்பதிவு – கார்த்திக் வெங்கட்ராமன்.

myskin

படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “தற்போது உருவாகிவரும் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசரையும், அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படமாகும்.

இத்திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ மற்றும் தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதையாக இருக்கும்.

தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை. ‘துப்பறிவாளன்’ நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.

ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுப்பூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள்… இதனோடு இனைந்து ஒரு மெல்லிய காதல்… இதுதான் ‘துப்பறிவாளன்’ ஸ்பெஷல்.

vishal

விஷால் இப்படத்தில் ‘கணியன் பூங்குன்றன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்று பாடிய கவிஞர் ‘கணியன் பூங்குன்றனார்’ அவர்களின் பெயரைத்தான் இப்படத்தின் கதாநாயகனுக்கு வைத்துள்ளேன்.

இப்படத்தில் விஷால் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் பலமான கதாபாத்திரமாகும். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார்.

தெலுங்கில் பிரபலமான அணு இம்மானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பாக்யராஜ் துவங்கி இப்படத்தில் பலரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகப் பெரிய அளவில் பேசப்படும். ஒரு நாள் நானும், தம்பி விஷாலும் பேசிக்கொண்டிருந்தபோது விஷால் என்னிடம் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தை பொறுத்தவரை இசை வெளியிட்டு விழாவுக்கு பதிலாக   ‘ஆக்சன் வெளியீட்டு விழா‘ ஒன்றை ஏற்பாடு செய்வோம்… என்று வித்தியாசமான ஒரு ஐடியாவை என்னிடம் கூறி அசர வைத்தார். அந்த அளவுக்கு இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. விஷாலும் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

விஷால் என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர். அவர் என்னுடைய அன்பான தம்பி. நான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலை போன்று எனக்கு மிகவும் நெருக்கமானவர் யாருமில்லை. நான் அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வேன். அவரும் என்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வார். இப்படத்தில் விஷாலை போன்ற பெரிய நடிகர் நடித்திருப்பது படத்துக்கு மிகப் பெரிய பலத்தை தந்துள்ளது.

Thupparivaalan (1)

இந்தப் படத்தில் நிச்சயம் அனைத்து கதாபாத்திரங்களும் கவனிக்க வைப்பதாகவே இருக்கும். என்னுடைய படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் அது நிச்சயம் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். ‘அஞ்சாதே’ படத்தில் பூ போட்டு செல்லும் அந்த பாட்டியில் ஆரம்பித்து, நான் இயக்கிய பல படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன கதாபாத்திரங்கள்கூட ஒரு காட்சியில் வந்தாலும், அதனுடைய வாழ்க்கையை நமக்கு கூறி செல்லும்.

அதிகமாக புதியவர்களை வைத்து படம் இயக்கக் கூடிய இயக்குநர் நான். அடுத்து நான் இயக்கவிருக்கும் திரைப்படத்தில்கூட புதிய நாயகன், புதிய நாயகிதான் நடிக்கப் போகிறார்கள்…” என்றார் இயக்குநர் மிஷ்கின். 

தற்போது ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளது.

Our Score