இயக்குநர் மகேந்திரனின் திரையுலக வாழ்க்கை..!

இயக்குநர் மகேந்திரனின் திரையுலக வாழ்க்கை..!

தமிழ்ச் சினிமாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் மகேந்திரன் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79.

சமீப நாட்களில் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நலமில்லாமல் இருந்த மகேந்திரன் சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் வீட்டுக்கு வந்த அவர், இன்று காலை 7.30 மணிக்கு தன்னுடைய வீட்டிலேயே காலமானார்.

அவரது வாழ்க்கைப் பயணக் கதை இது :

இயக்குநர் மகேந்திரன் 1939-ம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, செவிலியராகப் பணிபுரிந்தவர். ‘அலெக்ஸாண்டர்’ என்பது இவரது இயற் பெயர்.

mahendiran-1

இளையான்குடியில் பள்ளிப் படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘இண்டர்மீடியட்’ படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ‘பி.ஏ.’ பொருளாதாரம் படித்தார்.

பள்ளி, கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தய்ங்களில் கலந்து கொண்டார். அப்போது சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தன்னுடைய புனைப் பெயராகச் சூட்டிக் கொண்டார் மகேந்திரன்.

1958-ம் ஆண்டு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.

“நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது” என்று பெசினார்.

இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், “நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க” என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார்.

mahendiran-2

கல்லூரியில் படிக்கும்போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.

சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், ‘இன முழக்கம்’ பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்.

‘இன்பக் கனவு’’ நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றுவந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்று இருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், “நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே..?” என்று கேட்டார். மகேந்திரனும், “ஆமாம்” என்றார். “நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்..” என்றார், எம்.ஜி.ஆர்.

மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்கதையாக எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

‘பொன்னியின் செல்வனை’ படமாக்கும் திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

‘அனாதைகள்’’ என்ற நாடகத்தை எழுதித் தந்தார் மகேந்திரன். அந்த நாடகத்தை ‘வாழ்வே வா’’ என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து கதாநாயகியாக சவித்திரியையும் ஒப்பந்தம் செய்தார் எம்.ஜி.ஆர். ஆனால். பைனான்சியர் இறந்ததால் படம் பாதியில் நின்றுவிட்டது.

இந்த நிலையில் தான் நடித்துக் கொண்டிருந்த ‘காஞ்சித் தலைவன்’’ படத்தில் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை சேர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

mahendiran-jesudass-ilayaraja

1966-ம் ஆண்டு ‘நாம் மூவர்’ என்ற படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட ‘சபாஷ் தம்பி'(1967), ‘பணக்காரப் பிள்ளை'(1968) ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த ‘நிறைகுடம்’(1969) படத்திற்கும் கதை எழுதினார்.

‘நிறைகுடம்’ படம் நிறைவடைந்ததும், ‘துக்ளக்’ பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்தார் மகேந்திரன். அங்கு ‘சோ’வை பார்க்க வந்த நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குநருமான எஸ்.ஏ.கண்ணனும்,  மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித் தரும்படி கேட்டனர்.

மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித் தரும்படி செந்தாமரை கேட்டுக் கொண்டார்.

‘இரண்டில் ஒன்று’ என்ற பெயரில் ஐந்து நாட்களில் அந்த நாடகத்தை எழுதி முடித்தார் மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் நடிகர் செந்தாமரை நடித்தார்.

சக்கைப் போடு போட்ட இந்த நாடகத்தை பார்க்க வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், “சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம். அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்” என்று கூறினார். ‘இரண்டில் ஒன்று’ என்ற பெயர் ‘தங்கப் பதக்கம்’ என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது.  100-வது நாள் விழாவின்போது மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்து பாராட்டினார்.

1974-ம் ஆண்டு ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார். அந்தப் படத்தில் எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.

mahendiran-rajini

அதனைத் தொடர்ந்து ‘திருடி’(1974) என்ற படத்திற்கு கதையும், ‘மோகம் முப்பது வருஷம்'(1976) படத்திற்கு திரைக்கதை, வசனமும் எழுதினார் மகேந்திரன்.

‘ஆடுபுலி ஆட்டம்’, ‘வாழ்ந்து காட்டுகிறேன்’, ‘வாழ்வு என் பக்கம்’, ‘ரிஷிமூலம்’, ‘தையல்காரன்’, ’காளி’, ‘அவளுக்கு ஆயிரம் கண்கள்’, ‘சக்கரவர்த்தி’, ‘சொந்தமடி சொந்தம்’, ‘நம்பிக்கை நட்சத்திரம்’ ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், ‘நாங்கள்’, ‘அழகிய பூவே’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், ‘பருவ மழை’, ‘பகலில் ஒரு இரவு’, ‘கள்ளழகர்’, ‘கங்கா’, ‘ஹிட்லர் உமாநாத்’, ‘சேலஞ்ச் ராமு(தெலுங்கு)’, ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்(தெலுங்கு)’ ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார் மகேந்திரன்.

இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் ‘முள்ளும் மலரும்.’ இந்தக் கதைக்கு திரைக்கதை, வசனம், எழுதி படத்தையும் இயக்கினார் மகேந்திரன்.

1978-ம் வருடம் வெளியான இந்தப் படத்தில் அண்ணனாக ரஜினிகாந்தும், தங்கையாக ஷோபாவும் நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் சரத்பாபு, ‘படாபட்’ ஜெயலட்சுமி இருவரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைக்க, பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘முள்ளும் மலரும்’ மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச் சிறந்த இயக்குனர் என்று புகழைப் பெற்றார்.

mahendiran-4

இதற்கடுத்து 1979-ம் ஆண்டு புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ என்கிற குறு நாவலை ‘உதிரிப் பூக்கள்’ என்கிற பெயரில் படமாக இயக்கினார். சிறந்த கலைப் படைப்பாக பாராட்டுகளை குவித்த ‘உதிரிப் பூக்கள்’, வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

‘உதிரிப் பூக்கள்’ படத்தைத் தொடர்ந்து, 1980-ம் ஆண்டு மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் ‘பூட்டாத பூட்டுக்கள்’.

இதே 1980ம்- ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபாவின் நடிப்பில் வெளியான ‘ஜானி’ திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த வெற்றிப் பிறகு மீண்டும் இதே ஆண்டிலேயே மோகன் – சுகாசினி அறிமுகமான ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ பட்த்தையும் இயக்கினார் மகேந்திரன். 12-12-1980-ல் வெளியான இப்படம் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. சென்னையில் மட்டும் தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது ‘பிரசாத்’ ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.

1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.

mahendiran-rajini-1

தொடர்ந்து 1981-ம் ஆண்டு ‘நண்டு’, 1982-ம் ஆண்டு ‘மெட்டி’, ‘அழகிய கண்ணே’, 1984-ம் ஆண்டு ‘கை கொடுக்கும் கை’,  1986-ம் ஆண்டு ‘கண்ணுக்கு மை எழுது’, 1992-ம் ஆண்டு ‘ஊர் பஞ்சாயத்து’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன்

மகேந்திரன் இயக்கிய கடைசி திரைப்படம் 2006-ம் ஆண்டு வெளியான ‘சாசனம்’. தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் இத்திரைப்படம் உருவானது. செட்டி நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர் நடித்திருந்தனர்.

“நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும்…” என்று சொல்லும் இயக்குநர் மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின். இவர்களது மகன் ஜான். இவர் விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தை இயக்கியவர். டிம்பிள், அனு ரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

‘மெட்டி’’, ‘நண்டு’, ‘எனக்கு நானே எழுதிக் கொண்டது’ முதலான புத்தகங்களையும் இயக்குநர் மகேந்திரன் எழுதி உள்ளார். ‘உதிரிப் பூக்கள்’ படத்தின் திரைக்கதை – வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.

2016-ம் ஆண்டு விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன் தொடர்ந்து, ‘நிமிர்’, ‘மிஸ்டர் சந்திரமவுலி’, ‘சீதக்காதி’, ‘பேட்ட’, ‘பூமராங்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் ‘கட்டம ராயுடு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

தான் கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களில் முக்கியமான நாயகி வேடத்துக்கு ‘லட்சுமி’ என்றுதான் பெயர் சூட்டுவார் மகேந்திரன். ‘தங்கப் பதக்கம்’ செளத்ரியின் மனைவியான கே.ஆர்.விஜயா மற்றும் ‘உதிரிப் பூக்கள்’ நாயகி அஸ்வினி இருவரின் பெயரும் படத்தில் லட்சுமிதான்.

தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர்,  சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். ‘என்னை இதுவரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின் ‘ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்..!

அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கு மிகவும் பிடித்தது ‘உதிரிப்பூக்கள்’தான் என்பார். காரணம், “அதுதான் என் இயக்கத்திலேயே பிழைகள் குறைந்த படம்…” என்றார்.

தகவல்கள் உதவிக்கு நன்றி : திரு.ஜி. பாலன்




error: Content is protected !!