டிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..!

டிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..!

தற்போது பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களின் தலைப்புகளாக பரவலாக புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களையே வைத்துள்ளார்கள்.

சன் தொலைக்காட்சியில் ‘கல்யாணப் பரிசு’, ‘சந்திரலேகா’, ‘மகராசி’, ‘மின்னலே’, ‘சாக்லேட்’, ‘ராஜா’, ‘கல்யாண வீடு’, ‘நாயகி’, ‘கண்மணி’, ‘சித்தி’, ‘ராசாத்தி’, ‘ரன்’ ஆகிய பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ‘சிவா மனசுல சக்தி’, ’நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘ஆயுத எழுத்து’, ‘மெளன ராகம்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘காற்றின் மொழி’, ‘அரண்மனை கிளி’, ‘அதே கண்கள்’, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பொண்ணுக்கு தங்க மனசு’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில், ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பூவே பூச்சூட வா’, ‘கோகுலத்தில் சீதை’, ‘யாரடி நீ மோகினி’, ‘தேவதையைக் கண்டேன்’, ‘இரு மலர்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘இரட்டை ரோஜா’, ‘ராஜா மகள்’, ‘செம்பருத்தி’ ஆகிய பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

TV-Serials

ராஜ் தொலைக்காட்சியில், ‘ஆதி பராசக்தி’, ‘அலை பாயுதே’, ‘அருந்ததி’, ‘பாமா விஜயம்’, ‘என் தங்கை’, ‘கங்கா யமுனா சரஸ்வதி’, ‘கீதாஞ்சலி’, ‘கெளரவம்’, ‘இந்திரா’, ‘காக்க காக்க’, ‘காஞ்சனா’, ‘கருத்தம்மா’, ‘மண் வாசனை’, ‘நிலவே மலரே’, ‘பூவிழி வாசலிலே’, ‘சிந்து பைரவி’, ‘வீட்டுக்கு வீடு’ ஆகிய பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

பாலிமர் தொலைக்காட்சியில், ‘விதி’, ‘சக்தி’, ‘மூன்று முடிச்சு’, ‘நிமிர்ந்து நில்’, ‘என் கண்மணி’, ‘தில்லு முல்லு’, ‘வா அருகில் வா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘என்னருகில் நீ இருந்தால்’, ‘தேவி’ ஆகிய பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

கலைஞர் தொலைக்காட்சியில், ‘டும் டும் டும்’, ‘பூவே செம்பூவே’, ‘தில்லுமுல்லு’ ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஜெயா தொலைக்காட்சியில், ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘சுப்ரமணியபுரம்’, ‘பூங்காற்று’, ‘சொந்தங்கள்’ என்கிற பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

மக்கள் தொலைக்காட்சியில், ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘நீலாம்பரி’ ஆகிய பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

கலர்ஸ் தமிழ் சேனலில், ‘அம்மன்’, ‘நாகினி’, ‘இதயத்தை திருடாதே’, ‘உயிரே’, ‘திருமணம்’ ஆகிய பெயர்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இப்படி திரும்புகிற இடங்களிலெல்லாம் ஏற்கெனவே வெளியாகி புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களே தொலைக்காட்சிகளில் பளபளக்கின்றன.

இப்படி திரைப்படங்களின் பெயர்களை தொலைக்காட்சித் தொடர்களுக்கு வைக்கும் கலாச்சாரத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கேயார்.

இது குறித்து அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இது :

“ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. பல நாட்கள் சிந்தனை செய்து, பல தலைப்புக்கள் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு புதிய தலைப்பை முடிவு செய்து, கடைசியில் அந்தந்த சங்கங்களில் பதிவு செய்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்.

ஒருவேளை, நாம் தெரிந்தெடுக்கும் தலைப்பினை வேறொரு தயாரிப்பாளர் பதிவு செய்திருந்தாலும் அல்லது அந்த தலைப்பில் வேறொரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டிருந்தாலும், நமக்கு அந்தத் தலைப்பு வேண்டுமென்றால், முறையாக அந்த தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றோ அல்லது பணம் கொடுத்து வாங்கியோ பயன்படுத்திக் கொள்வதுதான்  நடைமுறையில் உள்ளது.

ஆக, ஒரு படத்திற்கு முக்கியமாக தலைப்புதான் அங்கீகாரம். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இயக்குநர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தலைப்புதான் அங்கீகாரம். சில தலைப்புகளாலேயே மக்கள் ஆர்வத்துடன் முதல் நாளே படம் பார்க்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு.

சில நேரங்களில் தலைப்பு பிரச்சனை, பெரிய பஞ்சாயத்தாக விஸ்வரூபம் எடுத்து, நீதிமன்றம்வரைக்கும் சென்று படத்தின் வெளியீட்டைக்கூட தடை செய்திருக்கிறது.

ஆனால், சமீப காலமாக தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் சர்வசாதாரணமாக சினிமா தலைப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

என்னுடைய முதல் படமான ‘ஈரமான ரோஜாவே’, புதுமுகங்கள் நடிப்பில் நான் தயாரித்து இயக்கி.. 1991-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இந்தப் படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்மதுரை’ படமும் மற்ற ஏழு படங்களும் வெளியானது.

அந்தப் போட்டியிலும், புதுமுகங்கள் நடித்த ‘ஈரமான ரோஜாவே’ வெற்றிகரமாக 125 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. ஒரு புது இயக்குநராக தமிழ்த் திரையுலகில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது என்னுடைய முதல் வெற்றிப் படமான ‘ஈரமான ரோஜாவே’ மூலமாகத்தான்.

தற்போது, என் படத்தின் தலைப்பை ‘GOOGLE’–ல் தட்டச்சு செய்தால், ‘ஈரமான ரோஜாவே’ என்ற தமிழ் சீரியல் பற்றிய செய்திகள்தான் முதலில் வருகிறது. இதுமட்டுமில்லாது எனது மற்றைய படங்களான ‘இரட்டை ரோஜா’, ‘பூவே பூச்சூடவா’ போன்ற படங்களின் தலைப்புகளிலும் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இது நியாயமும் இல்லை; தர்மமும் இல்லை. என்னுடைய படங்களின் தலைப்புகளைப் போலவே மற்ற பல தயாரிப்பாளர்களின், இயக்குநர்களின் தலைப்புகளையும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு தலைப்பாகப் பயன்படுத்துவதை தொடர்களின் தயாரிப்பாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

தலைப்புகள் சம்பந்தமாக இவர்கள் யாரிடமும் முறையாக அனுமதி வாங்குவதும் இல்லை. முறையில்லாமல் எங்கள் சினிமா தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடி கொள்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை அணுகி, அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு நாகரிகம்கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

ஒரு தலைப்பினைக்கூட சுயமாக சிந்திக்கத் தெரியாமல் இவர்கள் தொலைக்காட்சி தொடர்களை தயாரிப்பு என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது கண்டனத்திற்கும் உரியது. 

தொலைக்காட்சித் தொடர்களுக்கும், சினிமாவைப் போல் தணிக்கை என்று ஒன்று இருந்தால், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தவிர்க்கலாம். நான் இந்த முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..”

இவ்வாறு தனது கண்டன அறிக்கையில் இயக்குநர் கேயார் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!