full screen background image

மோகன்லால்-கமல்ஹாசன் – யார் பெஸ்ட்? – இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் சமாளிப்பு..!

மோகன்லால்-கமல்ஹாசன் – யார் பெஸ்ட்? – இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் சமாளிப்பு..!

எத்தனையோ பெயருக்கு நடத்தப்படும் வெற்றி விழாக்களையும், நன்றி அறிவிப்பு கூட்டங்களையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் நேற்று ‘பாபநாசம்’ திரைப்படக் குழுவினர் தங்களது படத்தின் வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்த பத்திரிகையாளர்களுக்காக நடத்திய நன்றி அறிவிப்பு கூட்டம் மிக, மிக வித்தியாசமானது.

papanasam movie success press meet

‘பாபநாசம்’ திரைப்படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கரின் டீக்கடை, சுயம்புலிங்கத்தின் வீடு, போலீஸ் ஸ்டேஷன் மூன்றையும் மேடையில் செட் அமைத்து அசத்திவிட்டார்கள். கூடவே எழுத்தாளர் சுகாவின் வர்ணனையோடு படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் மேடைக்கு வந்து நடிக்கவும் செய்ய.. காண்பதெல்லாம் கனவா? நனவா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருந்த்து.

HARL0734

இப்போதுவரையிலும் தனது ஒவ்வொரு படத்தையும் இழைத்து, இழைத்து தவம்போல செய்து வரும் கமல்ஹாசன் இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தையும் அதேபோல் ஒரு சிறிய தவறுகூட இல்லாமல் நடத்தி முடித்த்து பாராட்டுக்குரியது.

இந்த ஒரு நிகழ்ச்சிக்குக்கூட மேடையில் 3 முறை ரிகர்சல் நடந்திருக்கிறது. படத்தில் பயன்படுத்திய அதே செட் பிராப்பர்ட்டீஸை இங்கேயும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அஜீத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற வார்த்தைகள் தாங்கிய தமிழ் இந்து நாளிதழின் செய்தி பேப்பர்கூட அதேதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சும்மா.. வெறும் டீக்கடைதானே என்று நினைக்க வேண்டாம். பன், முறுக்கு, கடலை மிட்டாய் என்று ஒரு டீக்கடையின் அனைத்து சமாச்சாரங்களும் பாக்கெட், பாக்கெட்டாக வாங்கி வைத்திருந்தார்கள். அதேபோலத்தான் போலிஸ் ஸ்டேஷன் செட்டும். போன், பெல், பைல்கள் என்று பக்கா ஸ்டேஷனை உள்ளடக்கியிருந்தது அந்த செட். நடித்தவர்களும் படங்களில் வந்த அதே காஸ்ட்யூமில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குரூப் புகைப்படங்கள் எடுத்த பிறகு தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஸ்ரீபிரியாவின் தொகுத்து வழங்கலோடு நிகழ்ச்சி துவங்கியது.

Papanasam Thanks Meet Event Stills (34)

நிகழ்ச்சியில் பேச வந்த அனைத்து நடிகர், நடிகையரிடமும் நிகழ்ச்சியை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டுமென்பதால் அதிகப்பட்சம் 2 நிமிடத்தில் முடித்துக் கொள்ளுங்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார்களாம். டெல்லி கணேஷ் மட்டும் இந்த ரகசியத்தை மேடையிலேயே உடைத்தார்.

அனைவராலும் ஓஹோவென பாராட்டப்பட்டு, ஆஹாவென வரவேற்கப்பட்டிருந்த நடிகை ஆஷா சரத் பேசுகையில், தனக்கு தமிழில் இப்படியொரு நல்ல வாய்ப்பை கொடுத்தமைக்காக இயக்குநர் ஜீத்துக்கும், கமலுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி செலுத்துவதாகக் கூறினார். ‘இன்னும் 2, 3 படங்களில் நடித்துவிட்டால் தமிழ் நன்றாகவே பேசிவிடுவேன்’ என்றவர் கொஞ்சம் மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் பேசினார்.

Papanasam Thanks Meet Event Stills (35)

மற்றவர்களில் பெரும்பாலோர் கமலை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசிக் கொண்டே போக டெல்லி கணேஷ் தன் பேச்சில், “நான் ஷூட்டிங்கு போனப்ப கமல் எப்படி.. எந்த மாதிரி வருவார்ன்னு கற்பனைல இருந்தேன். அப்ப கமல் ஸார் வந்தார். இதே மாதிரி வேஷ்டி, சட்டை, அதிகம் மேக்கப்பில்லாமல்… கமலே தெரியாத அளவுக்கு இருந்தார். விஸ்வரூபம், உத்தமவில்லன் மாதிரியான கமலை எதிர்பார்த்துப் போய் நான் ஏமாந்துட்டேன். ஆனால் கமல் இந்தப் படத்துல வாழ்ந்திருக்கிறார்..” என்று வாயாரப் புகழ்ந்தார்.

Papanasam Thanks Meet Event Stills (15)

இயக்குநர் ஜீத்து ஜோஸப் பேசும்போது இப்போது இணையம் முழுவதும் பரபரப்பாகப் பேசும்படும் மோகன்லால் பெஸ்ட்டா..? கமல்ஹாசன் பெஸ்ட்டா என்கிற பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

“த்ரிஷ்யம் மோகன்லால், பாபநாசம் கமல்.. இவர்கள் இருவரில் யார் பெஸ்ட் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள், இருவரும் வேறு, வேறு மாதிரியான நடிகர்கள். இருவரையும் ஒப்பிடவே முடியாது. யாராவது ஒருவரை சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால்… படத்தில் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்பது எப்படி சுயம்புலிங்கத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ, அதுபோல இந்த இருவரில் யார் பெஸ்ட் என்ற ரகசியமும் என்னோடு புதைந்து போகட்டும்..” என்றார் ஜாலியாக.

Our Score