“யாரைக் கேட்டு என் பேரை சேர்த்தீங்க..?” – ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் கோபம்..!

“யாரைக் கேட்டு என் பேரை சேர்த்தீங்க..?” – ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் கோபம்..!

திரையுலக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் முக்கியமானோர் இணைந்து இன்று மாலை கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள்.

உலக அதிசயமாக வரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் டி.சிவா அணி, முரளி ராம நாராயணன் அணி, தாணு அணி என்று மூன்று அணியினருமே இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அந்த குழுவில் தனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. தற்போது தேனியில் தங்கியிருக்கும் தன்னிடம் இந்த அறிக்கையை வெளியிட்டவர்களில் ஒருவர்கூட கலந்து பேசாமல் தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் என்று கடும் கோபம் கொண்டுள்ளார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்யும்விதமாக இயக்குநர் ‘இமயம் பாரதிராஜா’ ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கை இங்கே :

வணக்கம்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியலொன்றும், அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

‘நாகரீகம்’ என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது. ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல.

தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்து கொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.

பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

பாரதிராஜா

தேனி.

இவ்வாறு தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

இதேபோல், இந்தக் குழுவில் தங்களது அணியினரின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், தங்களிடம் யாருமே இது குறித்து ஆலோசனை செய்யவில்லை என்றும், இந்தக் குழுவில் இருந்து தங்களது குழுவினர் ஒட்டு மொத்தமாக வெளியேறுவதாகவும் பிரபல தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன் தலைமையிலான 'தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி'யினரும் தெரிவித்துள்ளனர்.

"ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வைத்தால் ஐந்து ஸ்டெப்புகள் பின்னாடி இழுத்துவிடுவார்கள்..." என்று இதே தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பற்றி முன்பொரு கூட்டத்தில் இதே பாரதிராஜாதான் கூறியிருந்தார். இதுவும் அப்படியொரு ஸ்டெப்புதான்..!

திரையுலகத்தினர்தான் பாவம்.. அவர்களுக்கு இதுவரையிலும் ஒரு நல்ல தலைவனும் கிடைக்கவில்லை; ஒரு சிறந்த சங்கமும் கிடைக்கவில்லை...!

எப்போது விடியுமோ.. தெரியவில்லை..!!!