இயக்குநர் பாலாவை கண் கலங்க வைத்த புதிய படம்..!

இயக்குநர் பாலாவை கண் கலங்க வைத்த புதிய படம்..!

‘கூடல் நகர்’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘தர்மதுரை’.

dharmadurai-poster-4

இதில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். மற்றும் தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

‘காதல்’ சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்திருக்கும் இந்தப் படம் முழுக்க, முழுக்க மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலேய படமாக்கப்பட்டுள்ளது.

Vijay-Sethupathi-and-Seenu-Ramasamy

விஜய் சேதுபதியின் முந்தைய படங்களான ‘நானும் ரவுடிதான்’, ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் வசூலுக்கு பஞ்சமில்லாமல் தயாரிப்பாளர்களை மகிழ்வித்திருப்பதால், இந்தப் படத்திற்கும் விநியோகஸ்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால், தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேஷ் பெரும் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தை திரையிட காத்திருக்கிறார்.

Director-Bala-Press-Meet-Stills-41

இந்த நிலையில் இயக்குநர் பாலாவுக்கு சமீபத்தில் இந்தப் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதியில் பாலா கண் கலங்கிவிட்டாராம். இயக்குநர் சீனு ராமசாமியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

கிராமப் புறங்களில் இன்னமும் மருத்துவர்கள் மீதிருக்கும் மரியாதை.. மருத்துவர்களின் கடமை.. அவர்கள் கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டிய கட்டாயம்.. இதையெல்லாம் இந்தப் படத்தின் மூலமாக சீனு ராமசாமி அழுத்தமாக சொல்லியிருப்பதாகப் பாராட்டியிருக்கிறார் பாலா. நெகிழ்ந்து போன சீனு ராமசாமி பாலாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார்.

கேள்விப்படுவதையெல்லாம் பார்த்தால் இயக்குநர் சீனு ராமசாமிக்கு நிச்சயமாக இந்தப் படமும் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லைதான்..!
error: Content is protected !!