“நம்ம வாழ்க்கைய திரும்பிப் பார்க்க வைக்கப் போற படம் ‘மெர்சல்’…” – இயக்குநர் அட்லியின் உத்தரவாதம்..!

“நம்ம வாழ்க்கைய திரும்பிப் பார்க்க வைக்கப் போற படம் ‘மெர்சல்’…” – இயக்குநர் அட்லியின் உத்தரவாதம்..!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மெர்சல்.’ வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன், நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

விழாவுக்கு முன்பாகவே வந்த இளைய தளபதி  விஜய், வாசலில் நின்றபடியே விழாவுக்கு வந்த அனைத்து பிரபலங்களையும் கை குலுக்கி வரவேற்றார்.

vijay-murali

படக் குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பெருமளவில் விழா அரங்கில் குவிந்திருந்தனர். மேடையில் ஒவ்வொரு நட்சத்திரமும் வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

விழாவில் படத்தின் இயக்குநரான அட்லி பேசுகையில், "இந்தப் படம் சாத்தியமானதற்கு ஒரே ஒருவர்தான் காரணம். அவர் எனது அண்ணன் விஜய்தான். அவரால்தான் இந்தப் படமே தயாரானது. அடுத்த படம் செய்யலாம்னு விஜய் அண்ணா சொன்ன பின்னாடி அத்தனை துரிதமா வேலை பார்த்து படத்தை உருவாக்கியிருக்கோம்.

அடுத்த காரணம் சங்கீதா அக்கா. 'தெறி' முடிஞ்ச பின்னாடிகூட அக்கா அவ்வப்போது போன் செய்து பேசுவார். ‘என்ன தம்பி.. ஆளையே பாக்க முடியலை. அக்காவை மறந்திட்ட பாரு’ன்னு சொல்வாங்க.. இப்போ இந்தப் படம் முடிவானவுடனேயே அவங்கதான் எனக்கு முதல்ல ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்லி வாழ்த்தி அனுப்பி வைச்சாங்க.

அடுத்து என்னோட பேமிலி.. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நான் வெளிலதான் இருந்தேன். கடுமையா உழைப்புல வீட்டையே மறந்து ஓடிக்கிட்டிருந்தேன். அப்போ என் வொய்ப், என் பேமிலி மெம்பர்ஸ்தான் எனக்கு உற்சாகம் தர்றவங்களாவும், வீட்டைப் பத்தி கவலையில்லாதபடிக்கும் என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கு எனது நன்றி.

கடைசியா நீங்க.. நான் இந்த நான்காவது படம்வரைக்கும் சம்பாதிச்சதெல்லாம் விஜய் அண்ணனோட தம்பிகளாகிய உங்களைத்தான். உங்க ஆதரவுதான் எனக்கு மிகப் பெரிய பலம்..

mersal-stills-1

எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு ஆசை இருக்கும். கனவு இருக்கும். அது ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்கூட வொர்க் பண்ணணும்ன்னு.. அது எனக்கு என்னோட நான்காவது படத்துலேயே முடிஞ்சிருக்கு. தயாரிப்பாளர்கிட்ட ‘ரஹ்மான் வேணும் ஸார்’ன்னு சொன்னப்போ ‘கேட்டுப் பாருங்க.. முடிச்சிருவோம்’ன்னார். அதே மாதிரி ரஹ்மான் ஸார்கிட்ட போய் கேட்டவுடனேயே உடனேயே ஒத்துக்கிட்டாரு. அவருக்கும் எனது நன்றிகள். அவருடைய ஆசிர்வாதமும் இந்தப் படத்துக்கு நிறைய இருக்கு.

‘பாகுபலி’ பார்த்த பிரமிப்பில் அதன் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஸாருடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அவரை சந்தித்து இந்தப் படத்தின் கதை பற்றி பேசினேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவர் சொன்ன கதையையே இந்தப் படத்தின் கதையாக முடிவு செய்தேன்.

அவர் படப்பிடிப்பு நடக்கும்போதுகூட சில சமயங்களில் திரைக்கதையில் திருத்தம் செய்து கொடுத்திருக்கிறார். அவருடன் பழகிய நேரங்களில் அவரே நான் அவருடைய இன்னொரு மகன் என்றுகூட சொன்னார். அவருக்கு எனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு என்னுடன்தான் திரையுலகில் நுழைந்தான். நான் டைரக்சன் பக்கம் போனேன். அவன் ‘எனக்கு ஒளிப்பதிவுதான் பிடித்திருக்கு’ என்றான். நானே மதியிடம் உதவியாளரா அவனை சேர்த்துவிட்டேன். அதுக்கப்புறம் பல படங்கள்ல அவன் வேலை செஞ்சுட்டான்.

hema-atlee

நான் இந்தப் படத்தோட கதை பேசிட்டிருந்த நேரத்தில் என்னை சந்தித்தான். ‘டிஸ்கஷன் நடக்குதுடா. சும்மா வந்துட்டு போ’ என்றேன். நான் சொன்னதுக்காக வந்தான். அப்போ ஒளிப்பதிவு பத்தி நாங்க டிஸ்கஷன் செய்யும்போது ‘நீயே செஞ்சிருடா’ என்றேன். முதலில் பயந்தான். கடைசியா நான் தைரியம் சொல்லி சம்மதிக்க வைச்சேன். படத்தைப் பாருங்க.. சத்தியமா இது அவனோட முதல் படம்ன்னே சொல்ல மாட்டீங்க. அவ்வளவு நல்லா செஞ்சிருக்கான்.

சண்டை பயிற்சியாளர் அனல் அரசுவை நான் ‘மாமா’ன்னுதான் கூப்பிடுவேன்.. செட்டுக்குள்ள வரும்போதே ‘என்ன மாப்ளை... அந்த லாரியை தூக்கிருவோமா’ன்னுதான் கேப்பாரு. அவ்வளவு துடிப்பான நபர் அவர்.

சமந்தாகிட்ட கதை சொன்னப்போ கதையே கேட்கலை அவங்க. ‘உன் படம்தான்..? எதுக்கு கதை.. செட்டுக்கு வந்து கதை கேட்டுக்குறேன்’னு சொல்லிட்டு வந்துட்டாங்க. காஜல் மேடத்தை பல படங்கள்ல பார்த்து பிரமிச்சிருக்கேன். இவங்களை வைச்சு நாம ஒரு படம் செஞ்சிர மாட்டோமான்னு ஏங்கியதுண்டு. அது இந்தப் படத்துல சாத்தியமாயிருக்கு. அவங்களுக்கும் எனது நன்றி. நித்யா மேனன் எமோஷன்ல கலக்கியிருக்காங்க. அவங்களுக்கும் எனது நன்றி.

இயக்குநர்களுக்குள் இயக்குநராக இருக்கிறவர் எங்கண்ணன் எஸ்.ஜே.சூர்யா. அவர் இதுக்கு முன்னாடி ‘இறைவி’ படத்துல கலக்கியிருந்தார். இப்போ இந்தப் படத்துலேயும் வித்தியாசமான ஒரு வேடத்தை ஏற்றிருக்கிறார். நிச்சயமா வரும் காலத்தில் சூர்யா அண்ணன் தனித்த ஒரு வில்லனாக புகழ் பெறப் போறார். இருந்தாலும் அவரும் ஹீரோவா நடிக்கப் போற காலம் வெகுவிரைவில் வரத்தான் போகுது. ஹீரோவாகவும் ஜெயிக்கத்தான் போறார்.

‘மெர்சல்’ படம் பத்தி சொல்லணும்ன்னா நாம ஒரு காலத்துல எப்படியிருந்தோம்ன்னு நாமளே நினைச்சு பார்க்குறதில்லை. ஆனால் அப்படி நினைச்சு பார்க்க வைக்குற படம்தான் இந்த மெர்சல்.." என்றார்.