தர்மதுரை – சினிமா விமர்சனம்

தர்மதுரை – சினிமா விமர்சனம்

இதுவரையிலும் தான் இயக்கிய மூன்று படங்களிலுமே தாய்மையை போற்றும்வகையில் கதையமைத்து இயக்கியிருந்த இயக்குநர் சீனு ராமசாமி, இந்தப் படத்திலும் அதையும் ஒரு பக்க பலமாக வைத்துக் கொண்டு கிராமப் புறங்களில் மருத்துவத்தின் அவசியத் தேவையையும் உணர்த்தியிருக்கிறார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து டாக்டர் என்கிற அடையாள கம்பீரத்தோடு ஊருக்குள் உலா வர வேண்டிய ஹீரோவான தர்மதுரை, இதற்கு நேரெதிராக ‘குடிகாரன்’ என்கிற பட்டத்தோடு குடியில் மிதந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடன் பிறந்த அண்ணன், தம்பிகள் செய்து வரும் சீட்டு தொழிலையும் கேவலமாகப் பேசி அவர்களுக்கும் பிரச்சினை மேல் பிரச்சினையை கிளப்பி வருகிறார். இவருடைய நொச்சு தாங்காமல் தர்மதுரையை ஏதாவது ‘செய்து’விட வேண்டும் என்று உடன் பிறந்தவர்கள் நினைக்கிறார்கள். பெற்ற தாய் அப்படி நினைக்கவில்லை. அவன் எங்கேயாவது சென்று நன்றாக இருக்கட்டும் என்று சொல்லி தர்மதுரையை அவர்களிடமிருந்து தப்ப வைக்கிறாள்.

தர்மதுரை தான் படித்த மதுரை மருத்துவக் கல்லூரிக்கே வந்து தனது பழைய நினைவுகளில் மூழ்கியவர், தனது பழைய நட்புகளைத் தேடிப் போகிறார். ஆனால் அவசரத்தில் அவர் கிளம்பிப் போகும்போது கையோடு கொண்டு போன பையில்தான் ஊர்க்காரர்களின் சீட்டுப் பணம் மொத்தமும் இருக்கிறது. பணத்தை தர்மதுரை திருடிக் கொண்டு போய்விட்டதாக தர்மதுரையின் உடன் பிறந்தவர்கள் சொல்ல தாய் மட்டும் அதை நம்ப மறுக்கிறாள்.

ஊருக்குள் பிரச்சினை பெரிதாகிறது. ஊர்க்காரர்கள் போலீஸில் புகார் கொடுத்ததால் தங்களுடைய பூர்வீக வீட்டை விட்டுவிட்டு, தோட்டத்து வீட்டில் அடைக்கலமாகிறார்கள் தாயும், சகோதரர்களும்.

இன்னொரு பக்கம் தான் எடுத்து வந்த பேக்கில் அண்ணன், தம்பிகளின் சீட்டுப் பணம் இருக்கிறது என்பதே தெரியாமல் தன்னுடைய பழைய நட்புகளைத் தேடி அலைகிறார் தர்மதுரை. இறுதியில் என்னவாகிறது என்பதுதான் படம்..!

ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கான அனைத்துவித கோட்பாடுகளையும் உள்ளடக்கிய நிலையில் இந்தப் படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறதெனில் காரணம் இதன் இயக்குநர் சீனு ராமசாமிதான்.

கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர்களையும், கதைக்கு மிக, மிக பொருத்தமான திரைக்கதையையும், கடைசிவரையிலும் ஒரு சஸ்பென்ஸை நீட்டித்துக் கொண்டு சென்று.. கடைசியில் வாழ வைப்பாரா மாட்டாரா என்று ஆடியன்ஸையும் ஏங்க வைத்து சபாஷ் வாங்கியிருக்கிறார்.

காதல், மோதல், குடும்பம், பாசம், அன்பு, குரோதம், மாணவர்களின் வாழ்க்கை.. மருத்துவப் படிப்பின் முக்கியத்துவம், கிராமப்புற மாணவர்களை அரவணைக்க வேண்டிய கட்டாயம்.. கிராமப்புறங்களில் மருத்துவர்களின் தேவை.. வளர்த்தெடுத்த இடங்களுக்கு மாணவர்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டியது.. இன்றைய காலக்கட்ட இளைஞர்களின் மனநிலை.. தம்பதிகளின் மோதல்.. ஈகோ யுத்தம்.. எல்லாவற்றையும்விட கடைசியாக தாய்மையுணர்வு.. மகன் எந்த அளவுக்கு இருந்தாலும் பாதிக்கப்பட்ட மகன் மீது தாய் காட்டும் அளவு கடந்த அன்பு.. இதையெல்லாவற்றையும் செதுக்கி, செதுக்கி காட்சிகளில் வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

விஜய் சேதுபதிக்கு மிக, மிக முக்கியமான படமாகிவிட்டது இந்த ‘தர்மதுரை’. பல காட்சிகளில் அனாசயமாக நடித்திருக்கிறார். ‘மிஸ்டர் கோபால்’ என்று இழுத்து அவ்வப்போது ஆங்கில வார்த்தைகளை கலந்து கடிப்பது முதல்.. அரிவாளோடு அறைக் கதவை உடைத்துக் கொண்டிருப்பவர் தாயின் குரல் கேட்டவுடன் பெருங்குரலெடுத்து கதறி அழுது தாயை கட்டிப் பிடித்து அழும் காட்சியில் மனதை உருக வைத்துவிட்டார்.

“என்னை காதலிக்கிறியா..?” என்று கேட்டு தண்ணியடித்துவிட்டு வந்து சலம்பல் செய்யும் சிருஷ்டியை சமாளித்து அனுப்புவதிலும்,, அதே காட்சியின் நீட்சியில் தமன்னாவின் ஒரு தலைக் காதலின் உணர்வையும் ஒரு சேர உணர வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

தான் ஒரு மருத்துவராக இருந்தும் குடிகாரனாக இருப்பது குறித்த குற்றவுணர்ச்சி இல்லாமல் தான் ஏன் இப்படி ஆனோம் என்பதை தமன்னாவிடம் சொல்வதில் இருந்து விஜய்யின் அதிரடி துவங்குகிறது. படத்தின் மிக முக்கியமான போர்ஷனே காமக்காப்பட்டி அன்புச்செல்வியான ஐஸ்வர்யா ராஜேஷின் பகுதிதான்.

பெண் பார்க்க வந்த இடத்தில் “உங்களை ‘அண்ணா’ என்று ஆஸ்பத்திரில கூப்பிட்டேன். அப்போ எதுவும் இல்லை. ஆனா இனிமே நீங்க எனக்கு மாமா..” என்று வெட்கத்துடன் சொல்லும் அந்தக் காட்சியும் அதனை விஜய்சேதுபதி ஏற்றுக் கொள்ளும்விதமும் செம கிளாஸ்..!

பெண்களின் கல்யாணம் பற்றிய எதிர்பார்ப்பையும், அது அவர்கள் மனதில் பதிந்தவுடன் அவர்களை எந்தவிதத்தில் குழப்புகிறது என்பதையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். “இந்தக் கல்யாணம் வேண்டாம்மா..” என்று எம்.எஸ்.பாஸ்கர் சொல்லிவிட்டுப் போக.. அம்மாவின் புகைப்படத்தை பார்த்து, “அப்பா கல்யாணம் வேணாம்ன்னு சொல்றாரும்மா..” என்ற ஐஸ்வர்யாவின் பேச்சைக் கேட்டு அப்பா திடுக்கிட்டு அழுவதெல்லாம் மிக மிக யதார்த்த காட்சிகள்..! திருமணம் முடியாத சூழல்.. ஆனால் எதிர்காலக் கணவர் மனதில் அமர்ந்துவிட்டார். உடனேயே தூக்கிப் போட முடியாமல் தவிக்கும் தனது தவிப்பை, ஐஸ்வர்யா நடிப்பில் நன்கு காட்டியிருக்கிறார். வெல்டன் ஐஸ்..!

நல்ல இயக்குநர் கையில் கிடைத்தால் களிமண்ணும் உயிர் பெறும் என்பார்கள். அது இந்தப் படத்தில் தமன்னாவுக்கு சாத்தியமாகியிருக்கிறது.  இதுவரையில் தொப்புள் நடனத்திற்கும், ஹீரோவை சுற்றி ஆடுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமன்னா இப்போதுதான் முதல் முறையாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கல்லூரி காலத்தைவிடவும் நிகழ் காலத்தில் அவருடைய நடிப்பு ரசனையானது.. “எனக்கு இன்னிக்கு விடுதலை நாள்..” என்று ஸ்டைலாக சொல்லிவிட்டு கிளம்பும் காட்சியும், இதைத் தொடர்ந்து கோர்ட்டுக்கு அவர் வரும்போதுதான் அங்கே உடைபடும் சஸ்பென்ஸ்.. படத்தின் மீதான ஆர்வத்தை காட்சிக்கு காட்சி அதிகப்படுத்தியது.

“ஒருத்தர் இல்ல ரெண்டு பேர் உனக்காக காத்துக்கிட்டிருக்கோம்..” என்கிற அந்த எதிர்பார்ப்போடுகூடிய வசனமெல்லாம் தமன்னா பேசுற டயலாக்கா..? கடைசியில் தமன்னா காணாமல் போய் அந்தக் கேரக்டரே தென்பட்டார்..!

தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களுக்கிடையில் சின்ன கேரக்டராக இருந்தாலும் அதையும் சரியாகவே செய்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. கன்னக்குழி சிரிப்பு இதிலும் ஸ்பெஷலாக இருந்தாலும் இத்தனை சீக்கிரம் இவரையும் சாகடித்திருக்க வேண்டாம்..

இன்னொரு பக்கம் இது தாய்மை ஸ்பெஷல் படம் என்பதால் ராதிகாவும் வெளுத்து வாங்கியிருக்கிறார். நான்கு மகன்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு யார் பக்கம் பேசுவது என்கிற குழப்பத்திலும், யாரையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கும் தாயின் பரிதாபத்தை தனது கேரக்டரில் உணர்த்தியிருக்கிறார்.

தர்மதுரைக்கு அறிவுரை மேல் அறிவுரை சொல்லியும் பலனளிக்காமல் போக.. வெறுப்போடு “ச்சே போடா..” என்று சொல்லி அனுப்பும்போதும்.. சாப்பாட்டுக்குள் ஆக்சா பிளேடை வைத்து தப்பிக்க வைப்பது.. போலீஸ் ஸ்டேஷனில் தர்மதுரை மீது எஃப்.ஐ.ஆர். போடக் கூடாது என்று நாசூக்காக சொல்லும் காட்சியிலும் ராதிகா என்கிற ஒரு அனுபவம் வாய்ந்த நடிகை படத்தைத் தாங்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு பக்கம் எம்.எஸ்.பாஸ்கர் அடக்கமான தன் குணத்தில் உருக வைத்தாலும், அவ்வப்போது வீட்டு மாப்பிள்ளையான நபர் சிரிக்க வைக்கிறார். இவர்களோடு கஞ்சா கருப்புவும் சேர்ந்து கொள்ள.. நகைச்சுவைக்கு தனி டிராக்கே இல்லாமல் மெயின் டிராக்கிலேயே நகைச்சுவை துணுக்குகள் தோரணம் கட்டி விளையாடியிருக்கின்றன. இயக்குநர் ராமதாஸின் யதார்த்தமான, உணர்வுப்பூர்வமான பேச்சும் படத்திற்கு ஒரு பாயிண்ட்டாக இருக்கிறது.  

படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருப்பதே அவ்வப்போது வந்து விழுகும் நகைச்சுவைத் துணுக்குகள்தான். இயல்பாகவே இயக்குநர் சீனு ராமசாமி நகைச்சுவை ததும்ப பேசுவார் என்பதால் இத்தகைய இயக்கம் அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

படத்தின் துவக்கத்தில் வரும் அந்த ஏரியல் ஷாட்டே இன்னமும் மனதைவிட்டு அகலவில்லை. ‘மைனா’ சுகுமாரின் ஒளிப்பதிவுக்கு ஒரு குறையுமில்லை. மதுரை மருத்துவக் கல்லூரியின் வெளிப்புறக் காட்சிகள் இத்தனை கூட்டத்திலும் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. தேனி மலைப் பகுதிகளை அவ்வப்போது கேமிராவில் படம் பிடித்துக் காட்டும் அழகுக்கே இயக்குநருக்கு தனியாக ஒரு ஷொட்டு..! ஐஸ்வர்யா ராஜேஷின் வீடும், சுற்றுப்புறமும் கொள்ளை அழகு. அந்த நேட்டிவிட்டிக்காகவே சுகுமாரை கொத்தியிருப்பார்கள் போலிருக்கிறது..!

இத்தனை வீரியமிக்க படத்தினை சிறிதளவுகூட தொய்வாகாமல் கொண்டு போக உதவியிருக்கும் படத்தின் தொகுப்பாளர் காசி விஸ்வநாதனுக்கும் ஒரு ஷொட்டு. சகோதரர்களுக்கிடையேயான சண்டை காட்சியை தொகுத்தளித்திருக்கும்விதத்திற்கு ஸ்பெஷல் பாராட்டையே அளிக்க வேண்டும்.

மதிச்சியம் பாலாவின் ‘மக்கா கலங்குதப்பா’ பாடலும், அந்தப் பாடல் காட்சியை படமாக்கியவிதமும் சூப்பர்ப். அதேபோல் ‘ஆண்டிபட்டி’ பாடலும், ‘நான் காற்றிலே’ பாடலும் சுகம். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள படம் இது எனலாம்.

தமன்னாவிடம் “காலேஜ்ல படிக்கும்போது நீ என்னை லவ் பண்ணியா?” என்று விஜய் சேதுபதி கேட்டவுடன் எழும் ரிதமும், தமன்னாவின் ரியாக்ஷனும் இன்னும் கொஞ்சம் லவ் பண்ணுங்க என்றுதான் சொல்ல வைக்கிறது.

சாதாரண சண்டை காட்சிகளை போல இது இருக்கக் கூடாது என்றும், மிக யதார்த்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பது போலவும்தான் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் மைக்கேல்.

மருத்துவத் துறையின் உயர்ந்த நோக்கம்.. பேராசிரியராக இருக்கும் ராஜேஷின் இயற்பெயரான முனியாண்டி மாறியிருப்பதன் காரணம்.. சோறு போட்டு படிக்க வைத்து ஆளாக்கிய முன்னாள் முதலமைச்சர் காமராஜின் நினைவாக பெயரை மாற்றி வைத்திருக்கிறேன் என்கிற ராஜேஷின் வாக்குமூலம் வெறுமனே வார்த்தைகள் அல்ல. அதுவொரு சகாப்தம்..! வரலாறு..!

கிராமத்து ஜனங்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்பது ஒரு புறம்.. இன்னொரு பக்கம் தேவையே இல்லாமல் மருத்துவர்களை அணுகும் பொதுமக்கள்.. இவர்களுக்கு தர்மதுரை அளிக்கும் சிகிச்சை முறைகள்.. தமிழில் நோயாளிகளுக்கும் புரியும்வகையில் மருந்துகளை எழுதுங்களேன் என்கிற நோயாளியின் ஆசைகள்.. இது எல்லாவற்றுக்கும் மேலாக புரோட்டாவினால் ஏற்படும் தீமைகளை சொல்லும் ஒரு சிறிய சமூக அக்கறையுடன் கூடிய வசனத்திற்கே இயக்குநருக்கு மிகப் பெரிய பாராட்டினை வழங்க வேண்டும்..!

பணம் மட்டுமே குறிக்கோள் என்பதைக் கொண்டிருக்கும் உடன் பிறப்புகள்தான் அவர்கள் என்பதை சுட்டிக் காட்ட இன்னமும் வலுமையான வசனங்கள் வைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். “50 பவுன் நகை கேட்க இவனுங்க யார்?” என்று விஜய் சேதுபதி கேட்டிருந்தால்கூட நியாயம்தான். இந்த இடத்தில் ராதிகாவின் அனைவரையும் அனுப்பி வைக்கும் சமாளிப்பு ஏனென்று தெரியவில்லை. இப்படி இயக்குநர் சிற்சில இடங்களில் நம்மையே கதையெழுத வைத்திருக்கிறார்.

இப்போதைய காலக்கட்டங்களில் தொலைத் தொடர்பு சாதனங்களின் அதீத செயல்பாட்டால் கல்லூரி நட்புகளின் தொடர்புகள் எந்நாளும் சுருங்கிப் போவதில்லை. இதில் இந்த நட்புகள் தொடர்பே இல்லாமல் இருக்கும்விதமும்கூட ஏற்புடையதாக இல்லைதான்..!

அதேபோல் என்னதான் படித்தவர்கள்.. அன்பானவர்கள்.. காதலர்கள் என்றாலும் திருமணத்திற்கு முன்பேயே பிள்ளை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்பதையும் காட்டியிருப்பது ஏனோ இந்தப் படத்திற்கு பொருத்தமான திரைக்கதையாக இல்லை. இந்தச் சிக்கலை தர்மதுரை இனிமேல் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று ரசிகனையும் கேட்க வைத்துவிட்டது..!

கிளைமாக்ஸில் அந்தப் பையனின் உடல் துடிப்புக்காக எதையும் யோசிக்காமல் ஊசி போடும் அந்த ஒரு நிமிட ஆக்சனுக்கு ரசிகர்களை தன்னையறியாமல் கை தட்ட வைத்திருக்கிறார் ஹீரோ தர்மதுரை. “அவரை சாக விடாதீங்கப்பா…” என்று அந்தக் காட்சியில் மனதுக்குள் நம்மை மருக வைத்திருப்பதிலேயே இயக்குநரின் வெற்றி அடங்கியிருக்கிறது..!

ஒரு பொழுது போக்கு படத்தைப் பார்க்க வந்தவனையே கண் கலங்க வைத்து மென்மையான மனதுடையவனாக வீடு திரும்பியவுடன், தனது உறவுகள் பற்றி ஒரு நிமிடம் யோசிக்கவும், அவர்களுடன் பேசவும் வைத்திருக்கிறது இந்தப் படம். இதுவே இந்தப் படம் சொல்லும் செய்தி..!

தர்மதுரை – நமக்கான படம்..!
error: Content is protected !!