full screen background image

தாதா-87 – சினிமா விமர்சனம்

தாதா-87 – சினிமா விமர்சனம்

கலை சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைச்செல்வன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, பாலாசிங், மனோஜ்குமார், மணிமாறன், மாரிமுத்து, ராகுல் தாத்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – கலை சினிமாஸ் நிறுவனம், தயாரிப்பாளர் – கலைச்செல்வன், இயக்குநர் விஜய்ஸ்ரீ, இசை – லியாண்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி, பாடல்கள் விஜய்ஸ்ரீ, படத் தொகுப்பு – நிஜந்தன், மக்கள் தொடர்பு – நிகில், கலை இயக்கம் – நந்தா, டிசைன்ஸ் – நிஜந்தன், தயாரிப்பு நிர்வாகம் – சரவணன், கேஸ்டிங் இயக்கம் – சிரஞ்சீவி, இணை தயாரிப்பு – ஜி மீடியா.

இந்தப் படத்தை திரு எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

‘ஜொள்ளு பாண்டி’ என்னும் ஆனந்த் பாண்டி எந்த வேலைவெட்டிக்கும் போகாமல் அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞிகளை விரட்டி விரட்டி ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் இவருக்குப் பெயர் ‘ஜொள்ளு’ பாண்டி.

அந்தப் பகுதியில் மணிமாறனும், பாலாசிங்கும் தனித்தனி ராஜ்யங்களை நடத்தி வருகிறார்கள். பாலாசிங் தற்போதைய கவுன்சிலர். மணிமாறன் முன்னாள் கவுன்சிலர். கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம், பவுடர் விற்பனையில் இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் நடந்து கொண்டேயிருக்கிறது.

இதற்கிடையில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான மனோஜ்குமார், இவர்கள் இருவரையுமே காலி செய்ய நினைத்து உள்ளுக்குள் கருவிக் கொண்டிருக்கிறார். இவர்கள் மூவருமே பயப்படக் கூடிய ஒருவரும் அந்தப் பகுதியில் இருக்கிறார். அவர் மிகப் பெரிய, ஆனால் வயதான தாத்தா தோற்றத்தில் இருக்கும் தாதாவான சாருஹாசன்.

இந்த நிலைமையில் அந்தப் பகுதிக்கு குடி வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான ஜனகராஜ். அவரது மகள்தான் நாயகியான ‘ஜெனி’ என்னும் ஸ்ரீபல்லவி. இவரது அழகைப் பார்த்தவுடன் வழக்கம்போல நாயகன், இவர் பின்னாலேயே தீவிரமாகச் சுற்றுகிறார்.

இதையறிந்த ஜனகராஜ் போலீஸில் சொல்லி நாயகன் ‘ஜொள்ளு’ பாண்டியை நாலு தட்டுத் தட்டச் சொல்கிறார். இந்த அளவுக்கு ஆன பின்பு திடீரென்று மனம் மாறும் நாயகி, பாண்டியை தானும் காதலிப்பதாகச் சொல்கிறார்.

ஒரு டூயட்டுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தன்னைப் பற்றிய ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்கிறார் நாயகி. அதாவது அவர் ஒரு திருநங்கை என்று..! ஆணாக பிறந்து வளர்ந்தவர், இப்போது பெண் உடலில் இருக்கிறார்.

இதையறிந்தவுடன் நாயகன் பாண்டி ஆளைவிட்டால் போதும் என்று ஓட்டமாய் ஓடுகிறார். ஆனால் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது முடியாது என்றால் எப்படி என்ற கேள்வியுடன் நாயகியும் அவனைத் துரத்துகிறாள்.

கடைசியில் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

முதல் பாராட்டு நாயகியாக நடித்த ஸ்ரீபல்லவிக்குத்தான். மிக அழகாக நடித்திருக்கிறார். திருநங்கையாக தனது முகத் தோற்றத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்ட தருணங்களில் அவருடைய நடிப்பு அழகோ அழகு. இந்த நடிப்புக்காகவேதான் இடைவேளைக்கு பின்பு முழுமையாக படத்தைப் பார்க்க முடிந்திருக்கிறது.

நாயகன் ஆனந்த் பாண்டி அந்த வயதுக்கேற்ற நடிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார். காதலிக்கும்போது நடித்ததைவிடவும் நாயகி தான் யார் என்பதை சொன்ன பிறகு அவரிடமிருந்து அவர் தப்பிக்க நினைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அவரை வெகுவாக ரசிக்க முடிகிறது.

சாருஹாசன் ஐயா தன்னுடைய 87-வயதில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அவர் நடப்பதற்கே கஷ்டப்படும் சூழலிலும், இந்தப் படத்தில் நடக்க வைத்தே பல காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது கண்களை உருட்டி பெரிசாகக் காட்டுவதைத் தவிர இவர் வேறு எந்த மிரட்டலையும் செய்யவில்லை.

லேசாகத் தள்ளிவிட்டாலே கீழே விழுந்துவிடும் அளவுக்கு தோற்றத்தில் இருக்கும் இவரைக் கண்டு மற்ற ரவுடிகளெல்லாம் ஏன் பயப்படுகிறார்கள் என்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைக்கூட இயக்குநர் சொல்லாததால், படத்தில் இவரை அதிகம் ரசிக்க முடியவில்லை.

இவரது காதல் போர்ஷனை சிறிது நேரமே காண்பித்து அதற்கும் பழைய ‘சத்யா’ படத்தோடு ஒப்பிட்டு, ‘கமல்ஹாசன்’.. சாருஹாசனாகவும், ‘அமலா’ சரோஜா பாட்டியாகவும் காட்டியிருப்பது அக்கிரமம்.. அநியாயம்..! இது கமல்ஹாசனுக்கே அடுக்காது..!

மனோஜ்குமார் ஒரு பக்கம் ‘நான் எம்.எல்.ஏ.டா’ என்று மிரட்டிக் கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் பாலாசிங்கும், மணிமாறனும் மிரட்டுகிறார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை என்பதால் இந்தப் போர்ஷனே படத்தை போரடிக்க வைத்துவிட்டது.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜை அதே மாடுலேஷனில் பார்க்க முடிந்திருக்கிறது. நாயகியின் தந்தையாக.. மகன், மகளாக மாறியிருப்பதையும் தாங்கிக் கொண்டு அவர் மகளை நேசிக்கும் காட்சியெல்லாம் அழகோ அழகு. மகளைச் சமாதானப்படுத்தும் காட்சியில் ஜனகராஜின் நடிப்பு நெகிழச் செய்கிறது.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவில் ஹவுசிங் போர்டு காட்சிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். நாயகி திருநங்கையாக மாறிவிடும்போது வரும் காட்சிகளெல்லாம் மிக, மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

படத் தொகுப்பாளர் பின் பாதியில் அழகாக நறுக்கிக் கொடுத்ததை போல முன் பாதியிலும் கை வைத்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

பாடல்கள் வழக்கம்போல.. மூன்று இசையமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். அதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக இல்லை.

படத்தின் டைட்டிலேயே “பெண்களை அவர்கள் அனுமதியில்லாமல் தொடுவது சட்டப்படி குற்றம்…” என்று புதிய ஸ்குரால் நியூஸை போட்டிருக்கிறார்கள். படத்திலும் இதற்காகவே ஒரு தனிக் காட்சியை வைத்திருக்கிறார்கள். ஆனால் படத்துடன், அது ஒன்றவில்லை. எந்தவிதத்திலும் கதைக்குப் பொருத்தமானதாகவும் இல்லை.

படத்தின் முக்கியமான பிரச்சினையே திருநங்கையரின் காதல்தான். ஆனால் இடையிடையே லோக்கல் ரவுடித்தனம் பிரச்சினையையும் சேர்த்து வைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் படம் இன்ன மாதிரியானது என்று சொல்ல முடியாமல் போய்விட்டது.

முதல் பாதியில் கதை ஆங்காங்கே எங்கெங்கோ திசை திரும்பி போய்க் கொண்டேயிருக்க.. கதை என்ன என்பதே தெரியாமல் அலை பாய்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் இரண்டாம் பாதியில் தான் ஒரு திருநங்கை என்று நாயகி சொன்ன பின்புதான் படத்தில் ஒரு ஈர்ப்பே ஏற்படுகிறது.

இந்த ஈர்ப்பை இன்னும் அதிகமாக்க நினைக்காமல் மறுபடியும் ரவுடியிஸம், சாருஹாசன், அவரது காதல் என்று திரைக்கதையை திசை திருப்பியதால் படத்தை அதிகம் ரசிக்க முடியாமல் போய்விட்டது.

படமோ காதல் படம். திருநங்கையைக் காதலிப்பது சரியா.. தவறா.. அது நடைமுறை சாத்தியமா.. அதில் காதல் இருக்குமா.. இருக்காதா.. என்பதையெல்லாம் தெளிவாக பேசியிருக்க வேண்டிய படம்.. இயக்குநர் செய்த குழப்பத்தினால் பாதியைச் சொல்லிவிட்டு மீதியை முழுங்கிவிட்டது.

“வெறும் ஐஞ்சு நிமிஷ சுகத்துடன் உன் காதல் முடிஞ்சிருதில்ல” என்று நாயகனைப் பார்த்து நாயகி கேட்கும் ஒரேயொரு கேள்விதான் இந்தப் படம் சொல்லும் ஒரேயொரு செய்தி..!

இந்த ஒரேயொரு கேள்வியை எழுப்பியமைக்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..!

Our Score