full screen background image

‘தர்பார்’ நஷ்ட ஈடு விவகாரம் – விநியோகஸ்தர்கள் போர்க்கொடி..!

‘தர்பார்’ நஷ்ட ஈடு விவகாரம் – விநியோகஸ்தர்கள் போர்க்கொடி..!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் ‘தர்பார்’.

இந்தப் படம் தமிழகம் முழுவதிலும் ஏரியாவாரியாக பிரித்து விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு ஏரியாவை காளியப்பனும்,  கோவை ஏரியாவை சிவாவும், மதுரை ஏரியாவை பிரவீணும், திருச்சி ஏரியாவை கார்த்திகேயனும், நெல்லை ஏரியாவை கண்ணனும், சேலம் ஏரியாவை சான் ஜோன்ஸும், வட ஆற்காடு தென்னாற்காடு ஏரியாவை திருவேங்கடமும் வாங்கியிருந்தார்கள். சென்னையில் மட்டும் லைகா நிறுவனமே சொந்தமாக படத்தை வெளியிட்டிருந்தது.

படம் வெளியான பின்பு இந்தப் படத்தினால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இப்போது இந்தத் ‘தர்பார்’ படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக லைகா நிறுவனத்தை சந்திப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு ‘தர்பார்’ படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களும் ஒன்று சேர்ந்து சென்னைக்கு படையெடுத்து வந்தனர்.

darbar-rajini-murugadoss

அவர்கள் நேற்று காலை இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லைகா நிறுவன அலுவலகத்திற்குச் சென்றனர். பின்பு அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் இருந்த ஏ.ஆர்.முருகதாஸின் வீட்டிற்கும் சென்றார்கள்.

ஆனால் முருகதாஸ் வீட்டில் இல்லை என்பதால் அவரைச் சந்திக்க முடியவில்லை. மேலும் காவல்துறையினரை வைத்து விநியோகஸ்தர்களை வெளியேற்றினார்கள்.

இதற்குப் பிறகு போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டிற்கும் சென்றார்கள். அங்கே காவல் துறையினர் அவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பினார்கள்.

darbar-distributors-protest-1

இதனால் அங்கேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்த விநியோகஸ்தர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

இது குறித்து விநியோகஸ்தர்கள் பேசும்போது, “ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் இருவரையும் நம்பியே இந்த படத்தை மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கினோம். ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் ‘தர்பார்’ திரைப்படம் ‘பாட்ஷா’ அளவிற்கு இருக்கும் என்று ரஜினிகாந்த் சொல்லியதை நம்பியே இந்த திரைப்படத்தை வாங்கினோம்.

முதல் ஒரு வாரத்திலேயே எங்களுக்கு வசூலில் பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பாதிப்பை லைகா நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினோம். அப்போது அவர்கள் இது சூப்பர் ஸ்டார் படம், எங்களுக்கும் வசூல் குறைந்துவிட்டது என்று தெரிகிறது. நாங்கள் எங்களுடைய சாரிடமும் பேசுகிறோம், ரஜினி சாரிடமும் பேசுகிறோம். ஒரு சூப்பர் ஸ்டாரின் படம் பத்து நாட்களில் எடுத்துவிட்டால் அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று இரண்டு வாரங்கள் அந்த கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருந்தோம்.

darbar-movie-poster-2

9 நாட்கள் விடுமுறை நாளாக இருந்தும் இந்த படம் நாங்கள் வாங்கிய தொகையில் 40 சதவீதம் அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ‘தர்பார்’ படம் 25 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகியபோது தங்களுக்கு 60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், படத்தின் மொத்த பொருட்செலவில் 70 சதவீதம் அளவிற்கு ரஜினிகாந்த் ,முருகதாஸ் ஆகியோருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் எனவே ரஜினிகாந்தை சந்தித்து முறையிடுங்கள் என்று சொல்லிவிட்டனர்.

அவர்கள் சொன்னதை அடுத்து ரஜினி சாரை பார்க்கப் போனோம். எங்களுக்கு அப்பாயின்மெண்ட் தருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தரவில்லை. இன்று அவரைப் பார்ப்பதற்காகச் சென்றோம். அப்போது போலீஸ் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை பார்க்கக் கூடாது என்றும், அந்த சாலையிலேயே நிற்கக் கூடாது என்றும் சொல்லிவிட்டது போலீஸ். அதனை அடுத்து ஓரமாக போய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதாக இருந்தோம்.

darbar-distributors-protest-2

அப்போது உடனடியாக ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்று ‘சுதாகர் என்பவரிடம் உங்கள் மனுவை கொடுங்கள்’ என்றனர். அங்கே சென்றால் சுதாகர் ‘எனக்கு இந்த மனுவை வாங்க உரிமை இல்லை. நீங்கள் லைகாவை போய் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

இப்படியே எங்களை ‘அங்கையும் இங்கையும் போ’ என்று சொன்னால் என்ன அர்த்தம்..? இத்தனை கோடி போட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை வாங்கி 64 கோடிக்கு அதை விற்றுவிட்டு, 25 கோடி நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களையே நீங்கள் பார்க்கவில்லை என்றால் மற்றவர்களை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்..? இப்படியே போனால் நாங்கள் என்ன ஆவது.?

ரஜினி சார் திரைக்கு வந்த காலத்தில் இருந்து பல தயாரிப்பு நிறுவனங்கள் வந்தன, போய்விட்டன. ஆனால், ரஜினி சார்தான் எப்போதுமே உச்ச நட்சத்திரமாக இருந்துவருகிறார்.

darbar-movie-poster-1

ரஜினி சார் படம் என்பதால்தான் வாங்கினோமே தவிர, லைகா தயாரித்த படம் என்பதற்காக வாங்கவில்லை. மேலும், இந்தப் படம் எங்களுக்கு மினிமம் கியாரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டதே தவிர, டிஸ்ட்ரிபியூஷன் முறையில் தரப்படவில்லை.

முதலில் நாங்கள் லைகாவை அணுகியபோது, அவர்கள்தான் ரஜினி சாரை சந்திக்குமாறு கூறினர். ஆனால், எங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை. அவரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, சந்திக்க அப்பாயின்மென்ட் மட்டுமே.. 

இதற்கு மேலும் ரஜினி சார் எங்களைச் சந்திக்கவில்லை என்றால், திரையரங்கு உரிமையாளர்களுடான எங்கள் வரவு – செலவுகளுடன், அவர்களையும் அழைத்துக் கொண்டு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை…” என்றனர்.

Our Score