பிரபலமாகி வரும் பெண் நடன இயக்குநர் பாரதி..!

பிரபலமாகி வரும் பெண் நடன இயக்குநர் பாரதி..!

கடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீங்கள் தமிழ்ச் சினிமாவைப் பார்த்திருந்தால் அதில் குரூப் டான்ஸ் ஆடும் நடனக் கலைஞர்களில் இவரையும் நீங்கள் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்.

அந்த அளவுக்கு ஆடும் நடன மங்கைகளிடமிருந்து மிக, மிக வித்தியாசமான அழகில் ஜொலித்தவர்.. ஜொலித்துக் கொண்டிருப்பவர் இவர். பெயர் பாரதி. இப்போது நடன இயக்குநராகவும் மாறியிருக்கிறார்.

கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு  மேல் நடனமாடி இருக்கிறார். இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராகவும் பணியாற்றி உள்ளார்.

bharathy master

தற்போது ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓவியாவ விட்டா யாரு’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ‘வீரத் தேவன்’, பவித்ரன் இயக்கத்தில் ‘தாராவி’, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ‘நேத்ரா’, பா.விஜய் இயக்கத்தில் ‘ஆருத்ரா’, தம்பி ராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் ‘உலகம் விலைக்கு வருது’  ஆகிய படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

மேலும், இயக்குநர்கள் எழில், லிங்குசாமி, பூபதி பாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர் செல்வம் போன்ற பிரபல இயக்குநர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குநர் கிரண், இயக்குநர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் பாரதி.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நேத்ரா’ படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றியதோடு இல்லாமல், அந்த படத்தில் இடம் பெறும் ‘வந்துட்டாயா..  வந்துட்டாயா… குத்துப் பாட்டு பாட வந்துட்டாயா…’ என்ற பாடலில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,  நடிகர்கள் ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்.

“சிறந்த நடன இயக்குநர் என்ற பெயர் எடுப்பதே எனது லட்சியம்…” என்கிறார் இந்த அழகான நடன நடிகையும், இயக்குநருமான  பாரதி.