full screen background image

கமல்ஹாசன் நடிக்கும் ‘திரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்கு கோர்ட்டு தடை..!

கமல்ஹாசன் நடிக்கும் ‘திரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்கு கோர்ட்டு தடை..!

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் ‘திரிஷ்யம்’. 100 நாட்கள் தாண்டியும் ஓடிய இந்தப் படம் மலையாளப் பட வரலாற்றிலேயே எந்தப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது.

Drishyam-movie-stills

இதே படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க, தமிழ் நடிகை ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

Drishyam-Telugu

கன்னடத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் இப்படம் வெளியாகி கன்னடத்திலும் வெற்றி கண்டது..

Drishya-kannada

இப்போது தமிழில் கமல், கௌதமி ஜோடியாக நடிக்க சில நாட்களுக்கு முன்புதான் பூஜை போடப்பட்டது. தமிழில் இந்தப் படத்தை சுரேஷ் பாலாஜியும், நடிகை ஸ்ரீபிரியாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் பேசி வருகின்றனராம்.. அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருந்தது.

இந்த நிலையில் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு கேரள கோர்ட்டு தடை விதித்துள்ளதாக கேரளாவிலிருந்து செய்திகள் வந்திருக்கின்றன.

மலையாள திரைப்பட இயக்குநரான சதீஷ்பால் என்பவர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் இந்தத் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் “திரிஷ்யம்’ படம் நான் எழுதிய ‘ஒரு மழைக் காலத்து’ என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கதைக்கான உரிமை என்னிடம்தான் இருக்கிறது. இதனால், ரீமேக் செய்யும் உரிமையும் எனக்கே இருக்கிறது.

என் அனுமதி பெறாமல் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும்..” என்று கேட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய கூடாது என தடை விதித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மறுவிசாரணை விரைவில் துவங்கவிருக்கிறதாம்..!

இந்தப் படத்தின் கதை Keigo Higashino   என்ற   ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய ‘The Devotion of Suspect X’ என்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று பிரபல ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் ஏக்தா கபூரும் சொல்லி வருகிறார். அந்தப் புத்தகத்தின் கதையை ஹிந்தியில் படமாக்கும் உரிமையை அவர்தான் வைத்திருக்கிறாராம்.. இந்தச் சர்ச்சையினால்தான் ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி உரிமையை யாரும் கேட்கவில்லையாம்..!

அத்தோடு இதுவொரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவல் என்று ஆரம்பத்திலேயே உலக சினிமா ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.. மேலும் 1996-ல் ஹாலிவுட்டில் Rosellen Brown என்ற எழுத்தாளர் எழுதி ‘Before and After’  என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் திரைக்கதை போலத்தான், ‘திரிஷ்யம்’ படத்தின் திரைக்கதையும் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இவையனைத்தையும் படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான ஜீத்து ஜோஸப் நிராகரித்தே வந்திருக்கிறார். “இது முழுக்க, முழுக்க தன்னுடைய கற்பனையில் உருவான கதை…” என்று இதுவரையிலும் ஆயிரம் முறையாவது தனது பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் மலையாள பட இயக்குநர் ஒருவரே தன்னுடைய கதை என்று கிளம்பியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சதீஷ்பால் 2005-ம் ஆண்டு ஜெயராம், கோபிகா நடிப்பில் ‘பிங்கர் பிரிண்ட்’ என்ற படத்தை இயக்கியவர். இந்தச் செய்தி கேட்டு ரொம்பவே கொதித்துப் போயுள்ளார் ‘திரிஷ்யம்’ படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான ஜீத்து ஜோஸப்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ஜீத்து ஜோஸப், “இது எனக்கெதிராகவும், படத்திற்கெதிராகவும் செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட சதி.. அப்படியே உண்மையாக இருந்தாலும் சதீஷ்பால் இத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்து நான் தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தப் படத்தை இயக்கும் போகும் இந்த நேரத்தில் கோர்ட்டுக்கு போக வேண்டும்..?” என்று கேட்டுள்ளார்.

வெற்றி பெற்றதால்தான் இந்தப் படத்திற்கு இத்தனை சர்ச்சைகள். இதே படம் இந்நேரம் தோல்வியை தழுவியிருந்தால் இந்த இயக்குநரே இப்படியொரு கதையை நானெல்லாம் எழுதவே மாட்டேனாக்கும் என்றுதான் சொல்லியிருப்பார்.. 

இந்தப் படம் இன்னமும் என்னென்ன திருப்பங்களைத் தொடப் போகிறதோ தெரியவில்லை..!

Our Score