மன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..!’

மன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..!’

‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’, ‘மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள’ போன்ற காமெடி ட்ரெண்டிங் வசனங்கள் மூலம் இளைஞர்களை தன் வசப்படுத்தி, வசன காமெடி மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர் இயக்குநர் கோகுல்.

மேலும், ‘ரெளத்திரம்’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார். தற்போது இவர், மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஹெலன்‘ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.

இவர் இப்போது  அதே பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு இன்று கொரொனோவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘கொரோனா குமார்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் K.சதீஷ் தயாரிக்கவுள்ளார்.

இத்திரைப்படம் ஹாலிவுட் அளவில் புகழ் பெற்ற ‘SPINOFF’ ஜானரில் உருவாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த ஒட்டு மொத்த படத்தின் கதையும், கொரோனா காலத்திய ஊரடங்கு மற்றும் தனிமை காலங்களில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கோகுல் பேசும்போது, "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு வேலையை செய்ய முடிவெடுக்கும்போது, லாக் டவுன் அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சம்பவங்களை சுவாரசியங்களுடன் நகைச்சுவை கலந்து சொல்லவுள்ளோம்.  இந்தப் படம் நல்லதொரு சமூக கருத்துள்ளதாகவும் இருக்கும் என்கிறார் இயக்குநர். 

இந்தக் காலகட்டத்தில் நாம் எங்கு சென்றாலும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, தனிமைப்படுதுதல் என்று இனம் புரியாத பயத்தை உணர்கிறோம். கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்றுதான். ஆனால், அந்தக் கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது.

அந்த கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இந்த மாதிரியான சம்பவங்களை எல்லாம் வைத்துதான் முழுக்க காமெடியாக, சமூகக் கருத்துடன் ‘கொரோனா குமார்’ உருவாகிறது..." என்றார்.

இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரத்தை விரைவில் அறிவிக்கவுள்ளார்கள்.

ஊரடங்கு விலக்கப்பட்டதும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக படப்பிடிப்பினை தொடங்கவுள்ளது படக் குழு.

மன நெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் அதை போக்கும்விதமான தரமான நகைச்சுவை படமாக இருக்கும் என படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.