“தியேட்டர் கட்டணங்களை மாற்றியமைத்தால் சின்ன பட்ஜெட் படங்கள் தப்பிக்கும்” – இயக்குநரின் ஆதங்கம்..!

“தியேட்டர் கட்டணங்களை மாற்றியமைத்தால் சின்ன பட்ஜெட் படங்கள் தப்பிக்கும்” – இயக்குநரின் ஆதங்கம்..!

எம்.ஜி.எம். புரொடெக்சன்ஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கௌரி சங்கர் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சித்திரமே சொல்லடி’.

இந்தப் படத்தில் ‘கூல்’ சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கமலி ரமேஷ்குமார், ஸ்ரீகமலி, தெனாலி, ‘மகாநதி’ சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – மகி பாலன், இசை – ஆதிஷ் உத்ரியன், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – கெளரி சங்கர்.

துப்பறியும் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

IMG_6692

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் எம்.எம். தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  இயக்குநர்கள் அரவிந்தராஜ், ‘சாட்டை’ அன்பழகன், ஆர்.வி.உதயகுமார். நடிகர் அபி சரவணன், ‘தொட்ரா’ படத்தின் இயக்குநரான மதுராஜ், ‘திரு.வி.க.பூங்கா’ படத்தின் இயக்குநரான செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் இயக்குநரான கௌரி சங்கர் பேசுகையில் “இந்தப் படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் இப்படம் உணர்த்தும்…” என்றார்.

மேலும் “சின்ன பட்ஜெட் படங்கள் முன்புபோல் அதிகமாக வெற்றியடைய முடிவதில்லை என்பதற்கு தியேட்டர் கட்டணங்கள் அதிகமாக இருப்பதுதான் ஒரே காரணம்” என்றார்.

director gowri shankar

இது குறித்து அவர் பேசும்போது, “முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். சிவாஜி படங்கள் ரிலீஸ் ஆகும்போது மூன்று தர வரிசைகள் இருந்தன. அதில் மூன்றாவது தர வரிசையானது மிகக் குறைந்த விலையுடைய டிக்கெட்டுகளாகவும், மற்ற தர வரிசைகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கைகளை உடையதாகவும் இருக்கும். இதனால் அதிகப்படியான மக்கள் திரையரங்குகளுக்கு ஓடி வந்தனர்.

ஆனால் இப்போது ஒரே ஒரு வரிசை மட்டுமே மூன்றாம் தரத்திற்கு உள்ளது. அதை மாற்றி மீண்டும் முதலாம், இரண்டாம், மூன்றாம் தர வரிசைகள் என்று பழையபடிக்கே நிர்ணயித்து நாற்பது அல்லது ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்றால் அதிகபடியான மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு  வர வாய்ப்புள்ளது, திரையுலகம் மீண்டும் செழிக்க வாய்ப்புள்ளது…” என்று தனது ஆதங்கத்தையும் கூறினார்.
error: Content is protected !!