நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ஜூலை 15-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நடிகர் சங்க தேர்தலுக்கு ஐகோர்ட்டு நேற்று தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அறிவித்து உள்ளார்.           

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் வருகிற ஜூலை 15-ந் தேதி நடைபெற இருந்தது. இதற்கான அறிவிப்பை கடந்த 5-ந் தேதி நடிகர்கள் சங்கம் வெளியிட்டது. இதை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், “நடிகர்கள் சங்கத்தின் தேர்தலை ஜூலை 15-ந் தேதி புதன்கிழமை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேலை நாட்களில் நடிகர்கள் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருப்பார்கள். அதனால், பொதுவிடுமுறையான, மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் வைத்து வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் போட வரும் நடிகர்களின் கார்களை நிறுத்த அங்கு போதுமான இடவசதி இல்லை. எனவே, தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும். தகுதியான வாக்காளர்களின் விவரப் பட்டியலை கேட்டும் நடிகர்கள் சங்க நிர்வாகி வழங்கவில்லை. எனவே, அந்த விவரப் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த தேர்தலை நடத்த வக்கீல்கள் சிலரை, நடிகர்கள் சங்கத்தின் தலைவர் தேர்வு செய்து, அவரது பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்..” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் நடிகர் விஷால் உள்ளிட்ட 3 பேர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரவிசந்திரபாபு நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதித்து இடைக்கால தீர்ப்பளித்தார்.  

அவர் தன்னுடைய தீர்ப்பில், “நடிகர்கள் சங்க தேர்தல் வேலை நாட்களில் நடத்தப்படுவதாகவும், இட வசதி குறைவான வளாகத்தில் நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். இவையெல்லாம் இரு தரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்பதால், இந்த காரணத்துக்காக தேர்தலை நிறுத்த தேவையில்லை.

ஆனால், இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், குறைந்தது 7 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று சங்க விதிகளுக்கு எதிரான புதிய கட்டுப்பாட்டை சங்க நிர்வாகம் கொண்டு வந்துள்ளது என்று மனுதாரர் கூறினார்.

ஆனால், 7 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று 2010-ம் ஆண்டு துணை விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அதற்காக துணை விதி புத்தகமும் தாக்கல் செய்யப்பட்டது. எனவே, இது குறித்து பிரதான வழக்கில் விரிவான விசாரணை நடத்தியே தீர்வு காண முடியும். இது குறித்து இந்த இடைக்கால மனு மீதான விசாரணையில் முடிவு காணமுடியாது.

தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் பட்டியல் ஜூலை 4-ந் தேதிதான் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு ஜூலை 15-ந் தேதி நடைபெறும் சூழ்நிலையில், உறுப்பினர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க 10 நாட்கள் என்பது போதுமானதாக இருக்காது. எனவே, வாக்காளர் பட்டியலை வழங்க உத்தரவிடவேண்டும் என்கிற மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதாகும்.

மேலும், ‘தேர்தல் நடத்தும் அதிகாரியாக வக்கீல்கள் சிலரை சங்கத்தின் தலைவர் சரத்குமார் தேர்வு செய்துள்ளார். அவரது பரிந்துரையின்படி, செயற்குழு அந்த வக்கீல்களை தேர்தல் அதிகாரிகளாக நியமித்துள்ளது. ஆனால், தேர்தல் அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் செயற்குழுவுக்கு இல்லை. அது நிர்வாக குழுவுக்குத்தான் உள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

இது தொடர்பான ஆவணங்களை படித்து பார்த்தபோது, தேர்தல் அதிகாரியை சங்கத்தின் தலைவர் தேர்வு செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நடவடிக்கை சங்கத்தின் துணை விதிகளுக்கு எதிரானது என்பதால், தேர்தல் அதிகாரிகளை நியமித்த முறையை ஏற்க முடியாது. மேலும், தேர்தல் அதிகாரியை நியமிக்க நிர்வாகக் குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று துணை விதி கூறுகிறது. ஆனால், தேர்தல் குறித்து இறுதி அறிவிப்பை பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த தேர்தல் அதிகாரிகள் நிர்வாக குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவதற்கு நடிகர்கள் சங்கத்திடம் எந்த ஆவணங்களும் இல்லை.

மேலும், தற்போது இந்த சங்கத்தின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் நடைபெறும் தேர்தலிலும் போட்டியிட தடை எதுவும் இல்லை. அவர்கள் போட்டியிட உரிமை உள்ளது. அப்படி இருக்கும் சூழ்நிலையில், தேர்தல் அதிகாரிகளின் நியமனத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஒரு தேர்தல் நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டால், அந்த நடவடிக்கையில் தேவையில்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், இந்த வழக்கில் மனுதாரர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நடிகர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு தடை விதிக்க போதுமான முகாந்திரம் உள்ளது என்ற முடிவுக்கு நான் வருகிறேன்.

எனவே, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்கில் மனுதாரர்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் பிரதான மனு மீதான விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும்.

இந்த சங்கத்தின் தேர்தல் தள்ளிப்போய்விடக் கூடாது என்பதால், இரு தரப்பினரும் 2 வாரங்களுக்குள் தங்களது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் பதில் மனுவுக்கு, பதில் மனு தாக்கல் செய்ய விரும்பினால், இரு தரப்பினரும் தாக்கல் செய்யலாம். அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்...” என்று உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட இந்தத் தடை உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்போவதாக சங்கத்தின் தலைவர் சரத்குமார் அறிவித்து உள்ளார். இது பற்றி அவர் பேசும்போது, ‘‘தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். 2015-2018-ம் ஆண்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்து, விதிமுறைக்கு உட்பட்டு முறையாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இப்போது நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. கோர்ட்டு உத்தரவின் நகலை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்த நிலையில், கருத்து கூற விரும்பாவிட்டாலும் மேல் முறையீடு செய்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த தடை உத்தரவு இறுதியான தீர்ப்பு அல்ல. தேர்தல் நடத்தக்கூடாது என்று விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனு மீது விவாதம் நடந்து, இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் யாருக்கும் வெற்றி-தோல்வி கிடையாது. இதுவே இறுதியான தீர்ப்பும் அல்ல. நாங்கள் தேர்தல் நடத்தக் கோரி உயர்நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்வோம்..”  என்று கூறினார்.   

நடிகர் சங்கம்ன்னாலே குழப்பம் கூடிக்கிட்டேதான் போகுமா..?