சென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..!

சென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..!

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு இன்று காலை அவர்களது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் தலைவரான டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட புதிய முடிவுகளை சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டார்.

அவர் பேசும்போது, “நேற்று 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்ற முறையில் நானும். செயலாளர் என்ற முறையில் மன்னனும், மற்றும் எங்களது சங்கத்தின் நிர்வாகிகளும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் திரு. பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது.

அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இரு தரப்பினர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் விபரம் :

1. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான 12% GST வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8% LBT உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரியையும் சேர்த்து செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது.

ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரியினை முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. ‘தர்பார்’ திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து ‘தர்பார்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ மற்றும் அந்த திரைப்படத்தில் பங்கு பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் இருவரிடமும் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி இந்தப் பிரச்சனை குறித்து பேசி சுமூக தீர்வு காண்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. புதிய திரைப்படங்கள் வெளியான 8 வார காலத்திற்குள் Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் அந்தப் படங்களை வெளியிடக் கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றபட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. புதிய திரைப்படங்கள் வெளியான 100-நாட்களுக்குள் எந்த ஒரு Satellite Channel-களிலும் அந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம், மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தையும்(Terms) சரிசெய்ய தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9 நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9 நபர்கள் ஆக மொத்தம் 18-பேர்கள் என கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனி வரும் காலங்களில் முறைப்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6. இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG / Out rate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வருமானால் அந்தப் படத்தினை திரையிட்டு பார்க்காமல்(Preview Show) வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது…” என்று தெரிவித்தார் டி.ராஜேந்தர்.

 




error: Content is protected !!