‘சார்லி சாப்ளின்-2’ படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது..!

‘சார்லி சாப்ளின்-2’ படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது..!

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் டி.சிவா மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின்-2’.

இந்தப் படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர்,  செந்தி,  சாம்ஸ்,  காவ்யா,  அமீத் பார்கவ், ‘கோலிசோடா’ சீதா ஆகியோருடன்  வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோரும் நடிக்கிறார்கள். கூடவே தயாரிப்பாளர் டி.சிவாவும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கெளரவ வேடத்தில் வைபவ் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன், இசை – அம்ரீஷ், பாடல்கள்  -    மகாகவி பாரதியார்,  யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், கருணாகரன், படத் தொகுப்பு – சசி, கலை இயக்கம் – விஜய் முருகன், நடன இயக்கம் - ஜானி ஸ்ரீதர், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி, தயாரிப்பு – டி.சிவா, எழுத்து, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசுகையில், “என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம்  கூடுதலாக இருக்கும். ‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால்தான் அத்திரைப்படம், எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது. 16 வருடங்களுக்கு பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

படத்தில் பிரபுதேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார். நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு சார் டாக்டராகவும் அதா சர்மா மனோதத்துவ நிபுணராகவும் நடிக்கிறார்கள்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடியின் புகழ் பெற்ற பாடலான ‘சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள’ என்ற பாடல் அம்ரீஷ் இசையமைப்பில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.  

இந்தப் பாடல் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம் நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாடல் என்பதால் அவர்களை வைத்தே இந்தப் படத்திற்காகவும் பாட வைத்துள்ளோம்.

இந்தப் பாடல் காட்சியில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமான செலவில் படமாக்கப்பட்டது.

இந்த ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் யூ டியூப்பில்  இதுவரையிலும் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பாடல் லட்சக்கணக்கில் ‘டப் மேஷ்’ ரசிகர்களால் உருவாக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு கோவா, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 25-ம் தேதி படம் வெளியாகிறது..." என்றார்.