ஆன் லைன் வர்த்தக மோசடி குறித்து பேசும் ‘சக்ரா’ திரைப்படம்

ஆன் லைன் வர்த்தக மோசடி குறித்து பேசும் ‘சக்ரா’ திரைப்படம்

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சக்ரா’.

இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடிக்க.. நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், மற்றும்  ரெஜினா காசன்ட்ரா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத் தொகுப்பை சமீர் முகமதுவும் மேற்கொண்டுள்ளார்கள். கலை இயக்கத்தை எஸ்.கண்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.

தொழில்  நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை அறிமுக இயக்குநரான ஆனந்தன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

‘சக்ரா’ படம் பற்றி இயக்குநர் ஆனந்தன் பேசும்போது, "விஷாலிடம் இந்தக் கதையை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.  கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம்.. அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல், பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷரத்தா ஸ்ரீநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். அதேபோல் ரெஜினா கேஸன்ட்ரா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் நிச்சயமாகப் பிடிக்கும். இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது..." என்றார்.

இத்திரைப்படம் வரும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியாகவுள்ளது.