பிரம்மாண்டமான சரித்திர படத்தை தயாரிக்கும் கேமியோ ஃபிலிம்ஸ்

பிரம்மாண்டமான சரித்திர படத்தை தயாரிக்கும் கேமியோ ஃபிலிம்ஸ்

ஒரு நல்ல தரமான தயாரிப்பு நிறுவனம் என்பது அவர்களின் தனித்துவமான கதைகளாலும், அவர்கள் எடுக்கும் புதுப்புது முயற்சிகளாலும்தான் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் வேறு, வேறு கதைக் களங்களில் படங்களை தயாரித்து தரமான நிறுவனம் என்ற பெயரை மக்களிடமும், திரைத்துறையினர் மத்தியிலும் பெற்றிருக்கிறது. 

‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்களின் மூலம் குறுகிய காலத்தில் பெரிய உயரத்தை தொட்டிருக்கும் கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் பிரம்மாண்ட ஆக்‌ஷன் படத்தை தயாரிக்க இருக்கிறது. 

இளைஞர்களை ஈர்த்து பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பியது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. தற்போது வெளியாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ டீசர் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இரண்டுமே வித்தியாசமான, வேறு வேறு களங்கள். குறைந்த கால அளவிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களையும், யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தையும் பெற்று வேறு மொழி ரசிகர்களிடமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘இமைக்கா நொடிகள்’ டீசர். படத்தை ரிலீஸ் செய்ய ஏற்கனவே போட்டா போட்டி நடந்து வரும் நிலையில், தான் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தின் மூலம் கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழ்த் திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

‘பாகுபலி’ வெற்றியை நாடே கொண்டாடி வரும் நிலையில் அதன் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மகாதேவ் இயக்கும் சரித்திர படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.

18 மற்றும் 19-ம் நூற்றாண்டு பிண்ணனியில் உருவாக இருக்கும் இந்த படத்தை ஒரு அறிமுக இயக்குனரின் திறமை மேல் நம்பிக்கை வைத்து பெரிய பொருட்செலவில் உருவாக்க இருக்கிறது கேமியோ ஃபிலிம்ஸ்.

இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார், "எந்த ஒரு பெரிய உயரமும், சிறு அடியில்தான் துவங்குகிறது. எங்கள் படங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவும், வரவேற்பும், உற்சாகமும்தான் சிறப்பாக வேலையை செய்து முடிக்கும் ஆற்றலை எங்களுக்கு அளிக்கிறது. ‘பாகுபலி’க்கு திரைக்கதை அமைத்த விஜயேந்திர பிரசாத் இந்த பிரமாண்ட படத்துக்கும் திரைக்கதை எழுதுவது பெருமையான விஷயம். எங்கள் தயாரிப்பில் இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும்…" என பெருமையாக குறிப்பிட்டார்.