full screen background image

“இப்போதுதான் இயக்குநர்களின் கஷ்டம் புரிகிறது..” – தயாரிப்பாளர்-இயக்குநர் சி.வி.குமாரின் பேட்டி

“இப்போதுதான் இயக்குநர்களின் கஷ்டம் புரிகிறது..” – தயாரிப்பாளர்-இயக்குநர் சி.வி.குமாரின் பேட்டி

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் C.V.குமார். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘இன்று நேற்று நாளை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’ என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருபவர்.

‘அட்டக்கத்தி’ மூலம் இவர் அறிமுகப்படுத்திய ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் இன்று சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’யில் பணியாற்றுவது இவர் தேர்ந்தெடுப்பவர்களின் திறமைக்கு சிறந்த சான்று.

தனது ஒவ்வொரு படத்திற்குமான திரைக்கதையை சிறப்பாக தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளரான C.V.குமார், அவரே ஒரு படத்தினை இயக்குகிறார் என்றால், அதன் திரைக்கதை எப்படியிருக்கும் என அனைவருக்கும் ஆவல் மேலோங்கியுள்ளது.

சந்தீப் கிஷன் மற்றும் லாவன்யா திரிபாதி நடிப்பில் மாயவன் என்ற படத்தை சி.வி.குமார் தற்போது இயக்கி வருகிறார்.

Director C V Kumar - 1

இப்படத்தின் கதாநாயகனாக ‘யாருடா மகேஷ்’ படத்தில் அறிமுகமான சந்தீப் கிஷனும், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்த லாவண்யா திரிபாதியும் நடிக்கின்றனர். டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் வில்லன்களாக நடித்துள்ளனர். அக்ஷரா கெளடா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் பகவதி பெருமாள், மைம் கோபி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – லியோ ஜான் பால், கலை இயக்கம் – கோபி ஆனந்த், சண்டை பயிற்சி – விக்கி, தயாரிப்பு – சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல்ராஜா, எழுத்து, இயக்கம் – சி.வி.குமார்.

தனது இயக்குநர் அனுபவம் பற்றி சி.வி.குமார் கூறுகையில், “முதலில் இப்படத்தின் கதை உருவான பின் நலன் குமாரசாமியை அழைத்து இதை இயக்கி தர சொன்னேன். கதையைப் படித்த நலன், ‘கதை நல்லாயிருக்கு. திரைக்கதை மட்டும் நான் எழுதுறேன். நீங்களே டைரக்சன் செஞ்சிருங்க..’ என்றார்.

இயக்கத்தில் கால் பதிக்க எனக்கு முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால்  நலன் உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இயக்க முடியுமென்ற நம்பிக்கையை அளித்தனர்.

இதுவரை நான் தயாரித்த அனைத்து படங்களிலும் படத்தின் துவக்கம் முதல் முடிவுவரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். இதன் பின்புதான் தைரியமாக களத்தில் குதித்தேன்.

இந்தப் படத்தை நானே இயக்கப் போகிறேன் என கூறியவுடன் இந்தப் படத்தை தானே தயாரிப்பதாக நண்பர் ஞானவேல்ராஜா முன் வந்தார். அவரின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து, எங்கள் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது. இத்தருணத்தில் இதுவரை எங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஞானவேல்ராஜா மற்றும் அபினேஷ் இளங்கோவன் ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

Director C V Kumar - 2

படம் நாங்கள் நினைத்தவாறு சிறப்பாக வந்திருக்கிறது.  படத்தின் திரைக்கதையை க்ரைம் த்ரில்லர் பின்னணியில் அமைத்திருக்கிறோம். இதுவொரு தொடர் கொலைகாரனை துப்பறிந்து கண்டு பிடிக்கும் சேஸிங் படம். அதற்காக இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ், திரில்லர் படமும் இல்லை. சீரியல் மர்டர் படமும் இல்லை. ஹீரோ போலீஸ் அதிகாரியாகவும், ஹீரோயின் மனநல மருத்துவராகவும் நடித்துள்ளனர்.  

ஒரு தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குநரை வேலை வாங்குவதற்கும், இயக்குநராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியுள்ளது.

இதுவரை எனக்கு படம் செய்து கொடுத்த அனைத்து இயக்குநர்களிடமும் ‘முப்பது நாள்ல படத்தை முடிக்கணும். நாப்பது நாள்ல முடிக்கணும்’னு கட் அண்ட் ரைட்டா சொல்லுவேன். அதெல்லாம் எவ்வளவு கஷ்டம்னு நான் இயக்கம் செய்யும்போதுதான் புரிஞ்சது.

அண்மையில்  ஒரு புது இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தார். கதையைச் சொல்லிட்டு, ‘இந்தப் படத்தை முப்பது நாள்ல முடிப்பேன்’னு  சொன்னார். ‘முப்பது நாட்களிலெல்லாம் படத்தை நல்லா எடுக்க முடியாது’ன்னு  நானே சொல்லிட்டேன்.

இப்போது தொடர்ந்து ஆறு படங்களை அடுத்தடுத்து தயாரிக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் இந்தப் படத்துக்கான வேலைகள் அதிகமாக இருப்பதால், அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்தப் படம் ஓடினால் நிச்சயமாக தொடர்ந்து நான் படங்களை இயக்குவேன்…” என்றார் உறுதியாக.

Our Score