சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..!

பாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் எப்போதும் நடப்பதுதான். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும்போது, அத்திரைப்படங்கள் மிகவும் பிரபலமான படங்களாக மாறும்.

இந்தப் பிரபலத்தை சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘ஹீரோ’ படமும் அனுபவிக்கப் போகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடிக்கவுள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான தர்மேந்திராவின் சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் 2005-ம் ஆண்டில் இருந்து படங்களில் நடித்துவரும் அபய் தியோல் இதுவரையிலும் 20-க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவைகளில் ‘தேவ் டி’, ‘ஓயே லக்கி லக்கி ஓயே’, ‘மனோரமா சிக்ஸ் பீட் அண்டர்’, ‘அலிஸா’, ‘ஜிந்தாகி நா மெலிஜி டோப்ரா’, ‘ஷாங்காய்’, ‘ரஞ்சனா’, ‘ஒன் பை டூ’, ‘ஜீரோ’ ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இந்த ‘ஹீரோ’ படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அர்ஜூனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய.. ரூபன் படத் தொகுப்பினை மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட்டில் இருந்து அபய் தியோலை தேடிப் பிடித்து அழைத்து வந்திருக்கிறார் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

இது குறித்து இயக்குநர் மித்ரன் பேசும்போது, “இந்தப் படத்தில் அபய் தியோலின் வருகை 'ஹீரோ' படத்திற்கு கொஞ்சம் வெயிட்டைக் கொடுத்திருக்கிறது.  எனது முதல் படமான ‘இரும்புத் திரை’யில் அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திம் மிகவும் கவனிக்கப்பட்டது.

அதேபோல் இந்த ஹீரோ படத்திலும் கடுமையான, குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் இருந்தது. யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் தேடுதல் வேட்டை நடத்தியபோதுதான், அபய் தியோல் சிக்கினார்.

அவர் இந்தப் படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரம் பற்றிக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். இப்போது எங்களது ஹீரோ படக் குழுவுடன் அவரும் இணைந்திருப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, படத்தை மிகச் சிறந்ததாக கொடுக்க என்னை தினமும் உழைக்க வைக்கிறது..” என்றார்.

‘ஹீரோ’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.