தீபாவளி ரேஸில் குதித்த ‘பில்லா பாண்டி’ திரைப்படம்..!

தீபாவளி ரேஸில் குதித்த ‘பில்லா பாண்டி’ திரைப்படம்..!

ஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பில்லா பாண்டி’.

இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். ‘மேயாத மான்’ இந்துஜா, சாந்தினி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நடிகர் சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.

மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – K.C.பிரபாத், இயக்கம் – ராஜ் சேதுபதி, கதை, திரைக்கதை, வசனம் – MMS மூர்த்தி, ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், படத் தொகுப்பு – ராஜா முகம்மது, கலை – மேட்டூர் சௌந்தர், நடனம் – கல்யாண், விஜி, சாண்டி, சண்டை பயிற்சி – சக்தி சரவணன், பாடல்கள் – கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – தம்பி பூபதி, மக்கள் தொடர்பு – நிகில்.

இத்திரைப்படம் ஒரு அஜீத் ரசிகனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாம். படத்தின் நாயகன் R.K.சுரேஷும் படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான  K.C.பிரபாத்தும் அஜித்தின் தீவிர ரசிகராம்.

இந்த ‘பில்லா பாண்டி’ படத்தின் கதையின் களம் ‘அனைத்தலப்பட்டி’ எனும் ஊர்.  ஊரின் பெயரிலேயே ‘தல’ இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாம்.

மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்தின் புகழ் பாடும்  ‘எங்க குல தங்கம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்போது இந்தப் படம் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரவிருப்பதாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய தயாரிப்பாளர் கே.சி.பிரபாத், “நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும்விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை பாலிவுட்டில் பல முன்னணி படங்களை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்-தயாரிப்பாளருமான அசோக்குமாரின் மகன் ஹரிஹந்த் நல்ல விலைக்கு வாங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ 9 நிறுவனம் ஏற்றிருந்தது. ஆனால் இப்போது அந்த உரிமையை நாங்களே வாங்கிவிட்டோம். எங்களுடைய ஜே.கே. பிலிம்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனமே இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. வரும் தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.