“உதவியும் செய்வேன். ஆனால் ஏமாளியாகவும் இருக்க மாட்டேன்” – நடிகர் அரவிந்த்சாமி பேச்சு..!

“உதவியும் செய்வேன். ஆனால் ஏமாளியாகவும் இருக்க மாட்டேன்” – நடிகர் அரவிந்த்சாமி பேச்சு..!

அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் வரும் மே 11-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனத்தின் தயாரி்பபில் இயக்குநர்  சித்திக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’  படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன் மிரட்டலான ஒரு வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானியும்  நடித்துள்ளார்.

இயக்கம் – சித்திக், வசனம் – ரமேஷ் கண்ணா, இசை – அம்ரேஷ், ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரி சங்கர், புரொடக்ஷன் டிசைன் – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடன இயக்கம் – பிருந்தா, நிர்வாக தயாரிப்பு – விமல்.ஜி, தயாரிப்பு – எம்.ஹர்சினி.

‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையை பெற்றுள்ளது. முன்னதாக இத்திரைப்படம் இந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது  இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு மே 11-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

இதையொட்டி லீ மேஜிக் லேன்ட்ர்ன் தியேட்டரில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி, நடிகர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் முருகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

chithra lakshmnan

நிகழ்ச்சியில் நடிகர் சித்ரா லட்சுமணன்  பேசும்போது, “திருச்சி பரதன் பிலிம்ஸ் உரிமையாளர் விஸ்வநாதன் ஒரு முதுகெலும்பாக இந்த படத்திற்கு உறுதுணையாக நின்றிருந்தார். அவருக்கு எங்களது நன்றி.

தற்போது பலவித தடைகளையும் தாண்டி மே 11-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. நடிகர் அரவிந்த் சாமி மாதிரி நடிகர்கள் இருந்தால் போதும். தயாரிப்பாளர் முருகன் போன்றோர்களுக்கு மிக பெரிய பலமாக இருக்கும். அரவிந்த் சாமி அவர்களுக்கும், விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

ramesh kanna

நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது, “அரவிந்த்சாமி அவர்கள் எங்களுக்காகவும், இந்தப் படத்திற்காகவும் நிறைய விட்டு கொடுத்து இருக்கிறார். முன் பணம் வாங்கவில்லை. உண்மையிலேயே அவரை பாராட்ட வேண்டும். படம் பல தடைகளை தாண்டி வெளிவருகிறது. படத்தில் உள்ள அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கண்டிப்பா இந்த படம் மாபெரும் வெற்றியடையும்…” என்றார் நம்பிக்கையோடு.

aravindswamy

கதாநாயகன் அரவிந்த்சாமி பேசும்போது, “இங்கே அனைவரும் பேசியதுபோல படம் பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி. படத்தில் ரமேஷ் கண்ணா வசனம் அருமையாக எழுதியுள்ளார்.

சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா மூவரும் இணைந்து நகைச்சுவை காட்சிகளை பிரமாதமாக கொடுத்துள்ளனர். நைனிகா, ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார். அம்ரேஷ் இசை, சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது.

விஜயன் அவர்களுடைய 500 வைத்து படம் இது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். படம் வரும் மே 11-ம் தேதியன்று வெளியாகிறது. கண்டிப்பாக வெற்றியடையும்….” என்றார் அரவிந்த்சாமி.

இறுதியில் நன்றியுரை ஆற்றிய தயாரிப்பாளர் முருகன், “இந்தப் படம் தமிழகமெங்கும் வெளியாக காரணமாக இருக்கும் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் அரவிந்த்சாமி மிகப் பெரிய உதவியாக இருந்தார்.இயக்குநர் சித்திக் அவர்களுக்கும் ,படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பல தடைகளை தண்டி மே 11-ம் தேதியன்று வெளியாகிறது…” என்றார்.

இறுதியாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மிக நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிளித்தார் நடிகர் அரவிந்த்சாமி.

IMG_0889

“பாஸ்கர் ஒரு ராஸ்கலின் அனுபவம் எப்படி இருந்தது..? தயாரிப்பாளர் முருகன் எங்கே போனாலும் உங்கள் புகழ் பாடுகிறாரே..?”

“இப்போதெல்லாம் படம் எடுக்கிறதைவிட ரிலீஸ் பண்றதுதான் கஷ்டம்..! இருக்கிற சொத்தை  எல்லாம் மொத்தமா   போட்டுத்தான் பணம் எடுக்கிறாங்க. நான்  செய்தத பெரிசா நினைக்கல…! நான் டைமுக்கு வந்து திறமையா இயக்குநர் எதிர்பார்த்ததுக்கும் மேல நடிச்சுக் கொடுத்தேன். அப்படி நடிச்சதுக்கு எவ்வளவு  சம்பளமோ அதைத்தான் நான் வாங்கினேன். மீறி எந்த செலவும் வைக்கவில்லை. எல்லோரும் இத பின்பற்றினால் நல்லா இருக்கும்.”

“அரவிந்தசாமின்னா பாக்கி வைக்கலாம்கிற மனப்பான்மை தயாரிப்பாளர்களிடத்தில் வளர்ந்திட்டா என்ன பண்ணுவீங்க?”

“அவங்க நிலைமையையும் பார்த்துத்தானே முடிவு செய்ய முடியும்.! உதவி செய்தால்தான் படம் வெளி வர முடியும்ன்னா அந்தப் படத்தில் பங்கெடுத்தவன் என்கிற முறையில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். பல உதவிகள் தேவையான ஒன்றாய் இருக்கும். சிலவைகள் அப்படியிருக்காது. நானும் தெரிந்தே உதவி செய்வேன். ஆனால் ஏமாளியாவும் இருக்க மாட்டேன்.”

“ஹீரோவாகவே சில படங்களில் நடித்துவிட்டீர்கள். இப்போது வில்லன், குணச்சித்திரம் என்று மாறுகிறீர்களே..?”

“14 வருட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்தவன். இப்போதுதான் எனக்கு நல்ல, நல்ல வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. அதனால் நடிக்கிறேன். காரணம்,  ரசிகர்களின் வரவேற்பு. இதில் எனக்கு சோலோ ஹீரோ வேணும்னோ, மத்த ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்றோ சொல்ல மாட்டேன். எனக்கு நல்ல வேஷம் கிடைச்சா போதும்.!”

aravindswamy

“ரஜினியை வைத்து  கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் வில்லன் வேடம் கிடைத்தால் நடிப்பீர்களா?!”

“கேரக்டர் பொருத்தமாக இருக்கணுமே..?”

“பேசுவதில் மிகவும் அமைதியாக காணப்படுகிற நீங்கள் டுவிட்டரில் இப்படி பொங்குகிறீர்களே ?”

“அப்போதும் அமைதியாகத்தான் இருப்பேன். காமன்மேனாக   இருந்து பிரதிபலிக்க வேண்டிய கடமை இருக்கிறதே?”

“அரசியலுக்கு வருவீர்களா..?”

“இல்லை. ஆனால் மக்களுக்கு பாதிப்புக்குள்ளாக்கும் நிகழ்வுகளை கேள்விப்பட்டால் அது பற்றி நிச்சயமாக நான் கேள்வி எழுப்புவேன். அதேசமயம் அரசியலுக்குள் கால் வைக்கவே மாட்டேன்.”

“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?”

“கடவுள் நம்பிக்கை இருக்குன்னு சொல்ல முடியல. இல்லேன்னும் சொல்ல முடியல. கோவிலுக்குப் போவேன். சாமிகிட்ட கை கட்டி நிப்பேன். ஆனால் எப்படி பிரே பண்றது… என்ன கேட்கிறதுன்னு தெரியாது…” என்றார்  அரவிந்த்சாமி.