ரவி மரியாவின் காமெடியில் கலக்க வரும் ‘பகிரி’ திரைப்படம்

ரவி மரியாவின் காமெடியில் கலக்க வரும் ‘பகிரி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குநர் ரவிமரியா.

ரவி மரியாவை பொறுத்தவரை பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. தன்னுடைய முக பாவனைகளாலும், உடல் மொழியாலுமே நம்மை சிரிக்க வைத்துவிடுவார். இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ரவி மரியாவின் 20 நிமிட காமெடியில் தியேட்டரே அதிர்ந்து போனது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ரவி மரியா மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியிருக்கிறது.  இந்த வாரம் வெளிவரவிருக்கும் ‘பகிரி’ படத்திலும் ரவி மரியா நடித்திருப்பதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.

‘பகிரி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ரவி மரியா பேசும்போது, “பகிரி’ படத்தின் இயக்குநரான இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநராக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார்.

இந்த படத்துக்கு ‘பகிரி’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குநர். நாங்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக போன இடத்திலெல்லாம் அங்கு வரும் புதிய மனிதர்களிடம் இந்த ‘பகிரி’ என்ற தலைப்புக்கு அவர்களிடம் விளக்கம் கேட்போம். யாருக்கும் தெரியவில்லை. எல்லோருமே முழித்தார்கள். நம் தமிழ் மொழியின் நிலைமை இப்போது இப்படித்தான் இருக்கிறது.

தற்போது இணையத்தில் சக்கைப்போடு போட்டு வரும் ‘வாட்ஸ் அப்’ என்கிற அப்ளிகேஷனின் தமிழ்ப் பெயர்தான் ‘பகிரி.’ இந்தப் படம் வந்த பின்பு எல்லோருமே இதனை அறிந்து கொள்வார்கள். தமிழ் சினிமாவில் இது போன்ற தூய தமிழ் வார்த்தைகள், அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்..

இந்த படத்தில் நான் வரும் காட்சிகள் எல்லாமே ரசிகர்களை பெரிதும் சிரிக்க வைக்கும். டாஸ்மாக் பார் காட்சியை எடுத்தபோதே படக் குழுவினர் அனைவரும் கைதட்டினார்கள்.  

இதில் நான் எக்ஸ்பெக்டிங் கவுன்சிலராக நடித்திருக்கிறேன். அதாவது கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது நான் குடியிருக்கும் வார்டின் கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அது இறுதிவரை நடக்காது. அதற்கான காரணத்தை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அது தவிர படத்தில் எனக்கு ஹீரோயினின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டர். ஹீரோயின்னா சைட் அடிக்கலாம். ஹீரோயின் அம்மாவையா என்று தயக்கத்துடன்தான் ஸ்பாட்டுக்கு போனேன்.

ஆனால் ஹீரோயினின் அம்மாவாக, ஹீரோயினுக்கு சமமான அழகான ஆர்ட்டிஸ்டை தேர்வு செய்திருந்தார் இயக்குநர். படத்திலும் ஹீரோயினுக்கும், ஹீரோயின் அம்மாவுக்கும் யார் அதிக அழகு என்று போட்டி வைக்கும் அளவுக்கு காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆக மொத்தத்தில் படத்தில், ஹீரோவுடன் நானும் போட்டி போட்டுக் கொண்டு ஜொள்ளு விட்டிருக்கிறேன்..” என்றார்.

‘ஜொள்ளு’ ச்சும்மா கரை புரண்டோடுதே..?!




error: Content is protected !!