“போட்ட காசை எடுத்தால் போதும்…” – இயக்குநர் கே. பாக்யராஜின் யதார்த்தமான வாழ்த்து…!

“போட்ட காசை எடுத்தால் போதும்…” – இயக்குநர் கே. பாக்யராஜின் யதார்த்தமான வாழ்த்து…!

ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ள படம் ‘அய்யனார் வீதி.’ இந்தப் படத்தில் ‘சாட்டை’ யுவன், ஷாரா ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இயக்குநர்களான கே.பாக்யராஜ், பொன்வண்ணன் இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, யூ.கே.முரளி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது.

ayyanar-veethi-first-look-release-6

பொதுவாக சினிமா விழாக்களில் வாழ்த்திப் பேசும்போது ‘இந்தப் படம் நூறு நாட்கள்  ஓட வேண்டும்’, ‘வெற்றி விழாவில் சந்திப்போம்’ என்றெல்லாம் மிகையாகப் பேசி வாழ்த்துவதுண்டு. இன்றைய சினிமா சூழலில் ஒரு படம் நூறு நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆனாலும் விழாவுக்கு விழா அப்படித்தான் கூறிக் கொண்டு வருகிறார்கள்.

ஆனால் ‘அய்யனார் வீதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ்,  “தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும்” என்று யதார்த்தமாக பேசினார்.

முன்னதாக தயாரிப்பாளர் செந்தில்வேல் பேசும்போது, “ஒரு ரசிகனாக தியேட்டர் போய் பாக்யராஜ்  சாரின் படம் பார்த்தவன் நான். அவரையே என் படத்தில் நடிக்க வைத்தது எங்கள் பாக்யம்…” என்றார் பிரமிப்புடன்.

பாடலாசிரியர் ப்ரியன் பேசும்போது, “படத்துக்குப் பாடல் எழுதுவது என்பது ஒரு வகை. இதில் பாடல் தானே வந்தது. ஐயனார் பற்றிய தேடலில் 108 ஐயனார்கள் பற்றித் தேடித் தேடி திரட்டி ஒரு பாடல் உருவாக்கினோம். இப்போதெல்லாம் ஒரு திரைப்படக் பாடலுக்கு மாதக்கணக்கில் மட்டுமே ஆயுள் இருக்கிறது. சூழல் அப்படி இருக்கிறது.” என்றார் கவலையுடன்.

இயக்குநர் ஜிப்ஸி என். ராஜ்குமார்  பேசும்போது, “இந்தப் படத்தில்  பாக்யராஜ் சார் நடிப்பதாக இருந்தால் மட்டுமே இந்தக் கதையை இயக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். அவருடைய வருகைதான் படத்துக்குப் பெரிய பலமாக மாறியது. அவரும் பொன்வண்ணன் சாரும், இந்தப் படத்தைத் தங்கள் தோளில் சுமந்திருக்கிறார்கள்.” என்றார் மகிழ்ச்சியுடன்.

விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடித்தபோது தயாரிப்பாளர் செந்தில்வேலின் சுறுசுறுப்பைக் கண்டேன். அவருடன் தயாரிப்பில் இணைந்திருக்கிறார் அவரது நண்பர் விஜயசங்கர்.

பொதுவாகவே சினிமாவில் யாரும் துணைக்கு வர மாட்டார்கள். நீ முன்னாலே போ;  நான் பின்னாலே வருகிறேன் என்பார்கள். முன்னாடி போகவிட்டு போகிறவனை ஆழம் பார்ப்பார்கள். ஆனால் அப்படிப் பார்க்காமல், அவரது நண்பர்  உடன் வந்து இணைந்திருக்கிறார். அவரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும்.

ayyanar-veethi-first-look-release-13

இப்போது எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது. அன்றைக்கு  ‘நீ முன்னாலே போ.. நான் பின்னாலே வருகிறேன்’  என்று இருந்தவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்.

நானும், அவரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில்தான் படித்தோம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அவர் வேறு பள்ளிக்குப் போனார். ஆனாலும் ஒரே ஊர் என்பதால் நாங்கள் எப்போதும் நண்பர்கள்தான். என்னைப் போலவே அவருக்கும் சினிமா மீது ஆர்வம். ஆனாலும் லேசா ஒரு பயம். அதனால் சென்னைக்கு வர அவருக்கு முதலில் தைரியமில்லை.

ஆனால் நான் துணிச்சலாக சென்னைக்கு வந்து விட்டேன். நான் சோறு தண்ணி பார்க்க மாட்டேன். அவருக்கு சாப்பாடு சரியாக இருக்க வேண்டும். நான் இங்கு வந்தேன். கஷ்டப்பட்டேன். ஏதோ கிடைப்பதை சாப்பிட்டு வேலையைக் கத்துக்கிட்டு மேலே வரணும்னு நினைச்சு உழைச்சேன். உதவி இயக்குநராகச் சேர்ந்து விட்டேன். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்தேன். 

எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் 92-சி எண்ணுள்ள அறையில்தான் அப்போதெல்லாம் நான் தங்கியிருந்தேன். சுந்தர்ராஜன் ஊரில் இருந்து அடிக்கடி என்னைப் பார்க்க அங்கு வருவார்.  வந்து என் நிலைமையைப் பார்த்து விட்டுப் போவார். நான் உயர்ந்த பிறகு அவரை ஊர்க்காரர்களே விடவில்லை. பாக்யராஜே பெரிய ஆளாய்ட்டான். நீ இங்கு என்ன செய்ற..? என்று அவரை தூண்டிவிட அவரும் புறப்பட்டு வந்துவிட்டார்.

இங்கு வந்து பாண்டிபஜார், தேனாம்பேட்டை என என்னைப் போலவே பல இடங்களில் இருந்து கஷ்டப்பட்டு அவரும் இப்போது நிறைய படங்களை இயக்கி, பல படங்களில் நடித்து பெரிய ஆளாகிவிட்டார். 

இந்தத் தயாரிப்பாளர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நான் இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது இல்லை. ஆரம்பித்த பிறகுதான் உள்ளே வந்தேன். படத்துக்காக தயாரிப்பாளர்களின் சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினார்கள். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பெருமையாக இருந்தாலும் சில நேரம் தொந்தரவாகிப் பதற்றமாக இருக்கும்.

ராஜபாளையத்தில் நான் படப்பிடிப்பு நடத்தியது இல்லை. இந்தப் படத்துக்காகத்தான் போனேன். போன பிறகுதான் தெரிந்தது, அங்கே எனக்கு வேண்டியவர்கள் பல பேர் இருந்தார்கள்.

இதில் நடித்த போதுதான் ஐயனார் பற்றியே  எனக்கு விரிவாகத் தெரிந்தது.  படத்தில் 108 ஐயனார் பற்றிய பாடலும் வருகிறது.  படத்துக்கு வெறும் ஐயனார் மட்டும் போதாது. படத்தில் இளைஞர்களும் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இளைஞர் யுவனும் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் பற்றிப் பெரிய பேராசையெல்லாம் இல்லை. தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் என்று  மட்டும் வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும். அவர் தப்பித்துக் கொள்வார். நிறைய படங்கள் எடுக்கும் தைரியம் வந்து விடும். பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு வந்து விடுவார்.. ” என்று கே.பாக்யராஜ்  இயல்பாகப் பேசி படக் குழுவினரை வாழ்த்தியவர் கையோடு அவருடைய பாணியிலேயே ஒரு குட்டிக் கதையையும் சொன்னார்.

ayyanar-veethi-first-look-release-5

“வெளியூர் பயணம் புறப்பட்ட ஒருத்தன், ராத்திரி ஆகிவிட்டதால்  வழியில் இருந்த ஒரு ஊரில் தங்கிவிட்டு  காலையில் புறப்பட்டு போகலாம்னு அந்த ஊரில் தங்குவதற்கு  இடம் தேடினான்.

ஒரு வீட்டில் கதவைத் தட்டி நிலைமையை சொன்னான். “இன்னிக்கி ராத்திரி உங்க வீட்டில் தங்கிவிட்டு விடிந்ததும் கிளம்பிப் போய்விடுகிறேன்…” என்று  சொன்னான்.

‘முடியாதுப்பா…. இந்த வீட்டில் வயசுப் பொண்ணுக இருக்கு’ன்னு சொல்லி அந்த வீட்டின் கதவை சாத்திட்டார் அந்த ஆள். அடுத்த வீட்டிலும் ‘அதெல்லாம் சரிப்படாதுப்பா. எங்க வீட்டில் வயசுப் பொண்ணுக இருக்காங்க’ன்னு சொல்லி அங்கேயும்  கதவை சாத்திட்டாங்க. இதே மாதிரி அடுத்தடுத்த வீட்டிலும் சொன்னதால் நம்மாளு ரொம்ப டயர்டாயிட்டாரு.

கடைசியாக  கதவை தட்டிய வீட்டில் ரொம்பவும் முன் ஜாக்கிரதையுடன், ‘அய்யா… ராத்திரி ஆகிவிட்டதால் ஊருக்குப் போக முடியல. உங்க வீட்டில யாராவது  வயசுப் பொண்ணுங்க இருக்காங்களா..? ராத்திரி தங்கிட்டு விடிஞ்சதும் கிளம்பிப் போயிடுறேன்’னு அப்பாவியாக  சொன்னான். அவ்வளவுதான் அத்தனை பேரும் அவனை மொத்தி எடுத்திட்டாங்க…” என்று  ஒரு கதையை  சாமர்த்தியமாக  எங்கு சொருக வேண்டுமோ, அங்கு  சொருகி விட்டு கலகலப்பாக்கி விட்டார்.

பாக்யராஜ் சொல்லாமல் விட்ட விஷயம், இதே காட்சி ‘எங்க சின்ன ராசா’ படத்தில் இடம் பெற்றிருந்தது என்பதைத்தான்..!

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் சக்திவேல், இசையமைப்பாளர் யூ.கே.முரளி, தயாரிப்பாளர் விஜயசங்கர். நாயகன் யுவன். பி.ஆர்ஒ. சங்கத்தின் பொருளாளர் விஜயமுரளி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவில் பி.ஆர்.ஓ. சங்கத்தின் தலைவர் டைமண்ட்பாபு, செயலாளர் ஏ.ஜான், பொருளாளர் விஜய முரளி, வி.பி.மணி, முன்னாள் செயலாளர் பெரு.துளசி பழனிவேல் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
error: Content is protected !!