“இசையமைப்பாளராகி நான் பட்ட அவஸ்தை இருக்கே..?” – இயக்குநர் கே.பாக்யராஜின் அனுபவம்..!

“இசையமைப்பாளராகி நான் பட்ட அவஸ்தை இருக்கே..?” – இயக்குநர் கே.பாக்யராஜின் அனுபவம்..!

செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சி N.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அய்யனார் வீதி’  படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு இசைத்தட்டை வெளியிட, ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்  பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் நடிகர்கள் பாக்யராஜ், பொன்வண்ணன், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர்  தேனப்பன்,  பாடகர் வேல்முருகன், நடிகர் ஜெய் ஆகாஷ்,  நீதியரசர் M.V.முரளிதரன் , பாடலாசிரியர் பிரியன், இசையமைப்பாளர் யு.கே.முரளி உட்பட பலர் கலந்து கொண்டு  வாழ்த்தினார்கள்.

Ayyanar Veethi Audio Launch - 1

விழாவுக்கு வந்தவர்களை கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமிய கலைஞர்களை கொண்டு தாரை தப்பட்டை இசைத்து வரவேற்றார்கள்.  

விழாவில் நீதியரசர் முரளிதரன் பேசும்போது, “ஒரு படத்தை தயாரிப்பது அத்தனை சுலபமல்ல. மிகுந்த சிரமப்பட்டே தயாரிக்கிறார்கள். இப்போது தொழில் நுட்ப வளர்ச்சி அதிகம் வந்து விட்டது. பல கோடிகள் போட்டு படம் தயாரிக்கிறார்கள். ஆனால்  வெகு சுலபமாக டி.வி.டி.யில் அந்தப் படத்தை வெளியிட்டு பார்த்து விடுகிறார்கள்.

Ayyanar Veethi Audio Launch - 10

இது போன்ற செயல்களை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிற தாணு அவர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். இதன்  சிரமங்கள் குறித்து அவருக்கும் தெரியும். பல படங்களை தயாரித்தவர். இது குறித்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு  வரும்போது எங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அதை தடை செய்கிற நடவடிக்கைகளை நாங்கள்  செய்திருக்கிறோம். இருந்தும் எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.

இந்த விழாவுக்கு வரும்போதே  மழை குறுக்கிட்டது. அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். பொதுவாக சகுனம் பார்ப்பார்கள். மழை குறுக்கிட்டதால் அய்யனார் வீதி படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார். 

Ayyanar Veethi Audio Launch - 15

இயக்குநர் பேரரசு பேசும் போது, “இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு கிராமத்துக்கு வந்தது போல் இருக்கிறது. ஆட்டம், பாட்டம், புரவி, புறப்பாடு என இந்த ‘அய்யனார் வீதி’யின் விழா அமர்க்களப்படுகிறது. பொதுவாக ‘அய்யனார் புரவி விழா’ எடுத்த அடுத்த சில நாட்களில் கண்டிப்பாக மழை வரும். இங்கே இந்த விழா நடப்பதற்கு முன்னரே மழை வந்திருக்கிறது. இதுவும் நல்ல சகுனம்தான்.

படத்தில் நாட்டு புறக்கலையை இயக்குநர் ஊக்குவித்துள்ளார். யு.கே.முரளி கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டிருந்தாலும் நேட்டிவிட்டியாக இசையமைத்துள்ளார். ‘கல்லூரி’, ‘கள்ளச்சாராயம்’ இரண்டு பாடல்களுமே நல்லாயிருக்கு. ‘கள்ளச்சாரயம்’ போதை தெளிய கொஞ்சம் நேரம் ஆகும் போல.. பிரியனின் வரிகளில் வேல்முருகன் குரலில் பாடல் நன்றாகவே இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். தயாரிப்பாளர் அடுத்தடுத்து படங்கள் எடுக்க வாழத்துக்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் தாணு பேசும்போது, “அய்யனார் வீதி’ படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். ஆயிரக்கணக்கான  மேடைகளில் இசை பரப்பிய யு.கே.முரளியின் இசையில் பாடல்கள் அருமையாக இருக்கிறது. பாக்யராஜ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மிக சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார். தம்பி பொன்வண்ணன் அய்யனாராக வலம் வந்தது மிக அற்புதமாக இருந்தது. இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

Ayyanar Veethi Audio Launch - 20

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்குமாரை எனக்கு ரொம்ப நாட்களாகவே தெரியும்.  நடிகராக இருந்திருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்களோடு களத்தில் இறங்கி செயல்படுவார்.

திடீர்னு ஒரு நாள், ‘ அண்ணே… அய்யனார் வீதின்னு ஒரு படம் பண்றேன். நீங்களும், பாக்யராஜ் சாரும் அதுல நடிக்கணும்னு வந்து கேட்டாரு. மொதல்ல ‘பாக்யராஜ் சார் இதுக்கு சம்மதம் சொல்லிட்டாரா?’ன்னுதான் கேட்டேன். ஏன்னா.. இவன்  ஒரு ஆர்வத்துல சொல்றானோன்னு எனக்கு சந்தேகம் வேற…

இதுக்கு காரணம், பாக்யராஜ் சார் அவர் இயக்கும் படத்துலயே ஸ்பாட்ல அவ்ளோ சீக்கிரம் திருப்தியடையமாட்டார். எடுத்த காட்சிகளை திரும்பத் திரும்ப போட்டு பார்த்து விவாதித்து முடிவு செய்வார்.

இது வேற சின்ன கம்பெனி படம். எடுக்கும்போது நாம ஏதாவது கருத்து சொல்லி அது விவாதமாகிப் போனா இவன் தாங்குனானா… இல்ல.. நான் நண்பனாச்சேன்னு நடிக்கும்போது ஏதாவது சொல்லி அது வேற ஏதாவது தாமதமாகிப் போனால்… இவனால தாங்க முடியுமான்னு ஒரு சந்தேகம் இருந்தது.

ஆனால்,  உண்மையிலயே ராஜ்குமார் குடுத்து வைச்சவன்னுதான் சொல்லணும். பாக்யராஜ் சார் இந்தப் படத்தில் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். சாரும், நானும் எங்களால் எவ்வளவு சிறப்பா இந்த படத்துக்கு செய்ய முடியுமோ  அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறோம்னு நம்புகிறேன். பாக்யராஜ் சாருக்கு நான் இந்த யூனிட் சார்பாக நான் நன்றி  தெரிவித்து கொள்கிறேன்…” என்றார்.

Ayyanar Veethi Audio Launch - 29 

நடிகர் ஜெய் ஆகாஷ் பேசும்போது, “நான் நடித்த ‘ராமகிருஷ்ணா’ படத்தின்போதுதான் முதன்முதல்லா பாக்யராஜ் சாரை பார்த்தேன்.  அது இன்றும் எனக்கு நினைவுக்கு இருக்கிறது. ‘நீ தமிழ் பையன். நல்லா பண்ணு’ன்னு வாழ்த்தியது இன்னும் என்னால் மறக்க முடியாமல் இருக்கிறது. யு.கே.முரளி மிகச் சிறந்த இசையமைப்பாளர். என் படங்களிலும் அவர்தான்  இசையமைக்கிறார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

Ayyanar Veethi Audio Launch - 2

படத்தின் இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார் பேசும்போது, “இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது கதை கொடுத்த நண்பன் பாஸ்கருக்கும், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி எனது 18 வருட கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த  அண்ணன் செந்தில்வேலுக்கும், நண்பர் விஜயசங்கருக்கும் இதற்காக உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

பொன்வண்ணன்  அண்ணன் எனக்கு இந்த படத்திற்காக என்னைப் பெரிதும் தட்டிக் கொடுத்தார். அவருக்கு நன்றி. பாக்யராஜ் சார் இல்லாமல் பொன்வண்ணன் அண்ணன் எதையும் செய்ய மாட்டார். இருவரும் பாரதிராஜா சாரிடம் இருந்து வந்தவர்கள்.

யுவன் மேடையில்  பெரிதாக பேச மாட்டார். ஆனால் படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் பேசும்படி இருக்கும். பாக்யராஜ் சார் இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார். எனக்காக உழைத்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்…” என்றார். 

Ayyanar Veethi Audio Launch - 32

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “நீதியரசர் என்றதுமே ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது. சில போஸ்டுக்கு சில பேர் வந்து உட்கார்ந்ததுமே, அதுவொரு தனித்தன்மையைக் கொடுக்கும். நாங்கெல்லாம் விளையாட்டா சொல்லிப்போம். ‘போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே கை துருதுருன்னு இருக்கும். யாராவது  கெடைப்பாங்களான்னு பாத்துக்கிட்டிருப்பாங்க’ன்னு..! இதுக்குத்தான் அந்தக் காலத்துலேயே புரட்சித்தலைவர் பாட்டுல சொல்லியிருக்கார்… ‘பதவி  வரும்போது பணிவு வரவேண்டும். துணிவு வரவேண்டும்’ என்று…! அப்படி பதவி வரும்போது பணிவோடு, துணிவோடு  சிலர்தான் இருப்பார்கள்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எங்கண்ணன் மோட்டார் சைக்கிள்ள போகும்போது 10 வயசு பையன் குறுக்க வந்து விபத்தாகிப் போச்சி. அதுல அந்த பையன் இறந்து போயிட்டான். அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தப்போ நானும் போய் கோர்ட்ல  நின்னேன்.

பேர் சொல்லி கூப்பிட்டப்போ கூண்டில் ஏறப் போனேன். என்னை பார்த்த நீதிபதி ‘நீ என்ன  பண்றே?’ன்னு கேட்டார். ‘நான் காலேஜ்ல படிக்கிறேன்’னு சொன்னேன். உடனே அவர், ‘கூண்டுல ஏற வேணாம்; அங்கேயே நின்னு பேசுன்னு’ சொல்லிட்டார்.

அதுதான். குற்றவாளின்னு சொன்னா கூண்டுல நிக்க வைச்சித்தான்  கேள்வி கேக்கணும். ஆனால் அவர் என்னை கூண்டில் ஏற்றவில்லை. ஏன்னா ஒரு கல்லூரி மாணவனை ஒரு ஆக்சிடெண்ட் கேஸுக்காக கூண்டுல நிறுத்தினா, அவனோட வாழ்நாள் முழுக்க கூண்டுல நின்னோமேன்னு ஒரு குற்ற உணர்வு அவனுக்குள்ள இருந்துக்கிட்டேயிருக்கும். எனக்கு அது வரக் கூடாதுன்னு நினைச்சுத்தான் என்னை அந்த நீதிபதி கூண்டில் ஏற்றவில்லை. இது ஒரு விபத்துதான்.. தெரிஞ்சி பண்றதில்லைன்னுன்னு சொல்லி கூண்டில் ஏற்றாமல் விசாரித்தார். அதை  அங்க இருந்தவங்க ஆச்சரியமா பாத்து கை தட்டினாங்க. இது அந்த நீதிபதியின் அணுகுமுறை.  

சில சம்பவங்கள்.. அவர்களின் கேரக்டர்கள்.. நம்ம மனசுல பசுமரத்தாணிபோல பதிஞ்சி போயிடும். எனக்கு இது  நடந்து கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேல ஆனாலும் இன்னும் நினைவில் இருக்கு. இந்த விழாவில் என் பக்கத்துல  நீதியரசர் வந்து உட்கார்ந்ததும் இந்த நினைவுதான் எனக்கு வந்தது.

‘யு.கே.முரளி ரொம்ப வருஷமா போராடி மேல வந்திருக்காரு’ன்னு சொன்னார்கள். இப்போது ஆகாஷ் படங்களில் யு.கே.முரளிதான் இசை என்றார். இதுபோல் அவருக்கு தொடர்ந்து இன்னும் பல படங்கள் வரும். வரணும்ன்னு வேண்டிக்கிறேன். வாழ்த்துறேன்..

இசைத் துறையில் நான் ஆக்சிடெண்ட்டா நுழைஞ்சி நான் பட்ட  அவஸ்தை இருக்கே… அது ஒரு தனிக் கதை.. நான் இசையமைப்பேன்னு யாருமே நம்பல.

‘இது நம்ம ஆளு’ படத்துக்கு பாடல் எழுத புலமைப்பித்தன் ஐயா வந்தார். நான் இசையை ஹம் செஞ்சதும் ‘பேசாம இந்த பாட்டை நீயே பாடிடு’ன்னு சொன்னார். அதுக்கு அவர் சொன்ன காரணம், ‘உனக்கு மியூசிக் போடவே தெரியாதுன்னு சொல்றாங்க. அதனால நீயே பாடிடு’ன்னு சொன்னார். அந்த பாட்டுதான் ‘பச்சமலை’ பாட்டு.  

எனக்கு இசை நோட் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், கத்துக்கிட்டிருக்கேன். கத்துக்கிறதுக்கு வயசு எதுவும் தேவையில்லை. எப்படியாவது இசை நோட் கத்துகிட்டு என் படத்துக்கு வாசிக்காம விடமாட்டேன்.

என்னிடம் யார் வந்து எதை சொன்னாலும் அதில் எனக்கு தோன்றிய கருத்துக்களை தயங்காமல் சொல்லிவிடுவேன். இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார் என்னிடம் வந்து இந்தப் படத்தின் கதையை சொன்னதும் ‘நான் கண்டிப்பா நடிக்கிறேன்’னு சொன்னேன். என்கிட்ட கதையை சொல்லும்போது ‘படத்துல 30 சதவீதம் எடுத்து முடிச்சிட்டோம்’னு சொன்னாங்க. ‘இளைஞர்களுக்கு இன்னும் நிறைய சீன் வையுங்க’ன்னு சொன்னேன். தயாரிப்பாளர் செந்தில் நடிச்சிருக்காரேன்னு அப்பவே யோசிச்சேன். இப்ப பார்த்தா நல்லா டான்ஸ் ஆடியிருக்கார். பரவாயில்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சினிமாவில் காசு போட்டிருந்தாலும் பொன்வண்ணன் சொன்னதுபோல பல குடும்பங்களுக்குத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த காசை திரும்ப எடுக்க வேண்டும். இது எதுவும் வீண் போகாமல் அவர்களுக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார். 




error: Content is protected !!