ஜி.வி.பிரகாஷ்-ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்..!

ஜி.வி.பிரகாஷ்-ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்..!

தமிழ்ச் சினிமாவின் விநியோக துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம் தற்போது தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டிருக்கிறது.

ஏற்கெனவே நடிகர்  வீராவின் நடிப்பில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, மற்றும்  அதர்வா – ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘100’ ஆகிய படங்களை ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து  வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘100’ திரைப்படம்,  வரும் மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இந்த வருடமும்  நல்ல கதை அம்சமுள்ள படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் ஆரா சினிமாஸ், தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை செய்துள்ளது.

இந்தப் புதிய படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், நடிகை ரைசா வில்சன் நாயகியாகவும் நடிக்கின்றனர். திகில்-சஸ்பென்ஸ் கதையில் உருவாகும் இந்தப்  படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ்  இயக்குகிறார்.

குறும்படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குநரான கமல் பிரகாஷ், அவர் இயக்கி உள்ள விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிக் டிக் டிக்’, ‘மிருதன்’, ‘கொடி’ ஆகிய படங்களின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் வாங்கிய எஸ்.வெங்கடேஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் சிறந்த பட தொகுப்பாளர் என்று பெயர் வாங்கிய சிவா இந்த படத்திற்கு படத் தொகுப்பு செய்கிறார். கமலநாதனின் கலை அமைப்பில், டான் அசோக் சண்டை காட்சிகளை இயக்க, கதாநாயகன், இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகளையும் ஏற்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். 

படம் பற்றிப் பேசிய இயக்குநர் கமல் பிரகாஷ் “கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் சாருக்கும், தயாரிப்பாளர் ‘ஆரா பிலிம்ஸ்’ மகேஷ் கோவிந்தராஜன்  சாருக்கும், அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு  என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  நாயகி ரைசா இந்த படத்தின் கதையைக் கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.  திறமையான, அருமையான நடிகர், நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் எனது முதல் திரைப் பயணம் துவங்குகிறது. படத்திற்கான தலைப்பை யோசித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்…” என்றார்.

இத்திரைப்படம் இன்று சென்னையில் உள்ள சாய்பாபா கோவிலில் பூஜையோடு துவங்கியது.  
error: Content is protected !!