full screen background image

“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..!

“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..!

நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.  சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை  பெற்றுள்ள இந்த ‘அசுரன்’ படத்தின் வெற்றி விழா நேற்று மதியம் ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன், படத்தில் நடித்த நடிகர்களான பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம்,  அம்மு அபிராமி, கென் கருணாஸ், ராமர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Thaanu

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “மேடையில் வீற்றிருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் எம் வணக்கம். தம்பி தனுஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் சமயத்தில் வெற்றி மாறன் அவர்களோடு படம் பண்ணலாம் என்று சொன்னார். அந்தக் காலத்தில் இருந்தே நாங்கள் நல்ல பழக்கம்.

எஸ்.பி.முத்துராமனுக்கு பிறகு என் மனதை கொள்ளை கொண்டவர் இயக்குநர் வெற்றி மாறன்தான். இந்தப் படத்திற்காக வெற்றி மாறன் உழைத்த ஒவ்வொரு நாளும் என்னை வியக்க வைத்தது. சில காட்சிகளை வெற்றிமாறன் போட்டுக் காட்டியபோதெல்லாம் இந்தப் படம் நிச்சயமாகப் பெரிய வெற்றியை அடையும் என்று நம்பினேன். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததும் வெற்றி மாறன் பதட்டம் ஆனார். என் கண்கள் பனிக்கும் நன்றியை வெற்றிமாறனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

IMG_0478

எனக்கும் தனுஷுக்குமான தொடர்பை வலுப்படுத்தியது தம்பி அன்புச்செழியன். சிவாஜி சாருக்குப் பிறகு தனுஷின் நடிப்பு பிரம்பிக்க வைக்கிறது. கேரளாவில் படம் பார்த்த அத்தனை பெரிய நடிகர்களும் ஒரே வார்த்தையில் ‘தனுஷை தவிர வேறு யாராலும் இப்படி நடித்திருக்க முடியாது’ என்றார்கள். நடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ்தான். ரஜினியிடம் நான் ‘இந்தப் புள்ள நமக்கு கிடைத்த பொக்கிஷம்’ என்றேன். அவரும்  ‘தனுஷ் கால்களில் விழும் சீனை பார்த்ததும் இந்தப் படத்தில் நானே நடித்திருக்கலாமோ என்று நினைத்தேன்’ என்றார்..” என்றார்.

IMG_0514

நடிகர் கென் கருணாஸ் பேசும்போது, “முதல் நன்றி வெற்றி சாருக்கு. அவரால்தான் நான் இங்கே இருக்கேன். தாணு சார் என்னை மிகவும்  உற்சாகப்படுத்துவார். தனுஷ் சார் கூட அதிக சீன் இருப்பதால் பயமா இருந்தது. அவர்தான் எனக்கு ப்ரீ டைம் கொடுத்து என்கிரேஜ் பண்ணார். என்னை ப்ரண்ட்லியாக பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் பெரிய நன்றி” என்றார்.

இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் பேசும்போது, “இந்த நூறாவது நாள் விழா சும்மா பேசுவதில்லை. தியேட்டர் அதிபர்கள் உள்பட அனைவரின் முன்னிலையில் நடத்துவதுதான் சிறப்பு. அதற்கு களம் அமைத்துத் தந்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கு நன்றி.

IMG_0509

இந்த அசுரன் படம் தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான படம். தமிழ் சினிமாவின் போக்கில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அதற்கான உழைப்பு என்பது வெற்றி மாறன் தனுஷிடம் ஜெனியூனாக இருந்தது. ரைட் சென்ஸில் இயக்குநர் இப்படத்தை இயக்கி இருந்தார். சில படங்கள் விமர்சனம் ரீதியாக நல்ல பெயர் எடுக்கும். வசூல் இருக்காது. சில படங்கள் வசூலைக் குவிக்கும். ஆனால் நல்ல விமர்சனம் கிடைத்திருக்காது. ஆனால் அசுரனில் இரண்டுமே நடந்தது.

என்னை நடிக்க வைத்தது வெற்றி மாறன்தான். எனக்கு நடிப்பே வராது என்றிருந்தேன். வெற்றி மாறனுக்குப் பெரிய நன்றி. இந்த வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்.

IMG_0506

நடிகரும், இயக்குநருமான ஏ.வெங்கடேஷ் பேசும்போது, “அசுரன் படத்தில் நடிக்க வெற்றிமாறன் அழைத்ததும் பயத்தோடு தான் சென்றேன். தனுஷுடன் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் நடிப்புக்கு எப்ப ரெடியாவார் என்றே தெரியாது. வெற்றிமாறனின் வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு அவ்வளவு தெரியும். இந்த வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது எனக்கு ஸ்பாட்லே தெரியும். இந்த வெற்றியில் என்னையும் ஒரு பங்காகச் சேர்த்துக்கொண்ட தயாரிப்பாளர் தாணு சார், வெற்றிமாறன் தனுஷ் ஆகியோருக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “தாணு சாருக்கு வாழ்த்துகள். அவரின் கேரியரில் இது மிகப் பெரிய வெற்றிப் படம். எந்தப் படம் வணிக ரீதிதாகவும், விமர்சன ரிதீயாகவும் வெற்றி பெறுகிறதோ அது காலத்தால் மறக்க முடியாததாக இருக்கும். அசுரன் அப்படியான படம்.

IMG_0494

சென்ற வருடத்தின் ஆகச் சிறந்த நடிகர் தனுஷ்தான். அதில் சந்தேகமே இல்லை. வெற்றி மாறன்தான் சென்ற ஆண்டின் சிறந்த இயக்குநர். இப்படி மிகச் சிறந்த விசயங்களை கொண்டுள்ள படம் ‘அசுரன்’. இந்தப் படத்தின் வெற்றி படத்தின் டீசரில் உள்ள வசனத்தைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. இந்தப் படத்தோடு வேறு சில படங்களும் வெளியானது. ஆனாலும், ‘அசுரன்’ படத்திற்கு பெரிய வெற்றி கிடைத்தது. ஒரு தயாரிப்பாளர் வெற்றி அடையணும் என்று வெற்றி மாறன் அதிகம் மெனக்கெடுவார். இந்தப் படத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.” என்றார்.

IMG_0478

விநியோகஸ்தர் அன்புச் செழியன் பேசும்போது, “அசுரன்’ படம் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தப் படத்தை நான் பாலோ செய்து வந்தேன். தாணு அண்ணன் பிரம்மாண்டமான படங்களை எடுத்தவர். நான்கு தலைமுறையாக அவர் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அவரின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றிதான் இந்த வெற்றி. அவரின் நாணயம் மிகவும் பெரிது. சினிமாவில் வஞ்சகம், துரோகம் உண்டு. அப்படி இருந்தபோதும் அண்ணன் நிலைத்து நிற்கிறார். இந்தப் படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்று வெற்றிமாறனுக்கு பிரஷர் கொடுத்தார் அண்ணன்.

வெற்றி மாறன் இந்தப் படத்தை சிறப்பான இசையோடு கொண்டு வந்து காட்டினார். ஜி.வி.யின் இசை… வெற்றியின் உழைப்பு எல்லாம்தான் இப்படி ஒரு வெற்றி. தனுஷ் பிறவி நடிகர். இந்தப் படம் அவரின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டு. படத்தை ரிலிஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். நிச்சயம் வெற்றி அடையும் என்று நினைத்தேன். ஆனால் இப்படியொரு வெற்றியைப் பெறும் என்று நினைக்கவில்லை…” என்றார்.

abhirami ramanathan

தியேட்டர் அதிபரும், தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் பேசும்போது, “1985-ல ‘யார்’னு ஒரு படம் எடுத்தார் தாணு. ஒரு நாள் படம் ஓடும்போது தியேட்டருக்கு வந்தார் தாணு. அந்தப் படத்தில் அம்மந் கோவிலில் சாமியாடுவதுபோல ஒரு காட்சியிருக்கும். அந்தக் காட்சியின்போது தியேட்டரில் நிசமாகவே ஒரு பெண்ணுக்கு சாமி வந்து சாமியாடிவிட்டார். அதனை தாணு அழைத்து வந்த புகைப்படக்காரர் புகைப்படமெடுத்தார். மறுநாள் அந்தப் புகைப்படத்தையே விளம்பரமாகவும் சேர்த்து வெளியிட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். கடைசியாகத்தான் தெரிந்தது அந்தப் பெண்ணை அழைத்து வந்ததே தாணுதான் என்று..! இதுதான் தாணுவின் விளம்பரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தனுஷ் தவிர வேறு எந்த நடிகராலும் இந்தப் படத்தில், இந்தக் கேரக்டரில் நடித்திருக்க முடியாது. வெற்றி மாறன், தனுஷ் ஆகியோரிடம் இருக்கும் பணிவு அவர்களை உயர்த்திக் கொண்டேதான் இருக்கும்.  இந்தப் படத்தில் வெற்றி மாறன், தனுஷ், ஜிவி ஆகியோருக்கு தேசிய  விருது கிடைக்கும். அதற்கான முயற்சிகளை தாணு எடுக்க வேண்டும்..” என்றார்.

BASL5738

நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசும்போது, “இது என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. நன்றி சொல்கின்ற  மேடை. தாணு சாருக்கு என் நன்றி. வெற்றி மாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம்தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தப் படத்தின் பின்னணி இசையில்தான் படத்தின் வெற்றியில்  25%  சதவிகிதம் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் உழைப்பு மிகவும் பெரிது. என்னுடன் சேர்ந்த நடித்த எல்லா நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி.

பாலு மகேந்திரா இயக்கிய ‘அது ஒரு கனாக் காலம்’ சூட்டிஙகில் ஒரு காட்சியில் நான் நடிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் வெற்றி மாறன் இணை இயக்குநராகப் பணியாற்றினார். ஒரு காட்சியில் எப்படி நடிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. அதனால் வேண்டுமென்றே வெற்றி மாறனை நடிக்கச் சொல்லிக் காட்டுங்க என்றேன்.  உடனே வெற்றி மாறனும் கையில் இருந்த பேடை போட்டுவிட்டு பிரமாதமாக நடித்துக் காட்டினார். நான் அதன் பிறகு அதேபோல் நடித்தேன். அன்றில் இருந்து இன்றுவரை நானும் வெற்றியும் சகோதரர்களாக இருந்து வருகிறோம்.

சிவசாமி கதாபாத்திரத்தை என்னை வைத்து இயக்க முடியும் என்று முடிவு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப் படம் ரிலீஸாகும்போது நான் ஊரில் இல்லை. படத்தின் ரிசல்ட் என்னன்னு எனக்குத் தெரியல. அப்பத்தான் எனது அம்மா தொலைபேசியில் தொடர்பு கொண்டு படம் பெரிய வெற்றின்னு சொல்றாங்கப்பா என்றார். ஆனால்  நீ தூரமா இருக்கியேப்பான்னு சொன்னாங்க. அப்பதான் நான் சொன்னேன். வெற்றி என் பக்கத்திலேயேதான்தான் இருக்கும்மான்னு வெற்றி மாறனைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.

BASL5551

தோல்வியைத்தான் கிட்டப் போய் தழுவி என்ன பிரச்சினை என்று பார்க்கணுமே தவிர, வெற்றியைத் தூரமா நின்னுதான் பார்க்கணும். ரசிக்கணும். இல்லையென்றால் அது நம்மை எங்கே போய் தள்ளி டேமேஜ் செய்யும் என்று நமக்கே தெரியாது. கடவுளுக்குத் தெரியும்.. நம்மை எங்கே, எப்போது வைக்க வேண்டும் என்று. அதனால்தான் என்னை இந்த வெற்றி கிடைத்தபோது தூரமாய் கொண்டு போய் வைத்துவிட்டார்.

இது எல்லோருக்குமான வெற்றி. வெற்றி மாறன் மாதிரி ஓரிருவர்  இருந்தால் போதும். என்னைப் போன்ற நடிகர்களுக்கு எல்லாமும் நல்லாகவே முடியும்.” என்றார்.

vetrimaran

இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது, “படம் தயாராகி வெளிவருவதற்குள் நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்ட்டிங் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப் படம் 100 நாள் ஓடி இருக்கிறது. இத நிச்சயமாக ஒரு சாதனை நிகழ்வுதான்.

ஒரு படம் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்துதான். நாம் அதற்காக உழைத்தால் மட்டும் போதும். நிறைய பேர் எனக்கு பிரஷர் தரப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால் அது உண்மையல்ல.

இந்தப் படத்தின் கமர்சியல் சக்ஸஸுக்கு பத்திரிகையாளர்கள்தான் பெரும் காரணம். எனக்கு ரொம்ப கோபம் வரும். அதையெல்லாம் உதவி இயக்குநர்கள் மேல் காட்டுவேன். அவங்களுக்கு நன்றி. என்னோட இயலாமையைத்தான் உங்களிடம் கோபமாகக் காட்டுவேன் என்று உதவி இயக்குநர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.

BASL5575

தனுஷ் எல்லாப் படத்தில் இருந்தும் இந்தப் படத்தில் ஒரு படி மேல்தான். இந்தப் படத்திற்கு அவர் கொடுத்த கமிட்மெண்ட் ரொம்ப அதிகம். எமோஷனலா ஒரு விசயத்தை கேரி பண்றதுலாம் ரொம்ப பெருசு. இந்தக் கதாபாத்திரத்தை  அவர் பண்ணியதால்தான் படம் இவ்வளவு சிறப்பா வந்திருக்கிறது.

தாணு சார் ஆரம்பத்தில் இருந்தே எங்களை கூலாக மெயிண்டெண்ட் செய்தார். பிரகாஷ்ராஜ் சார் சொன்ன நேரத்தில் சரியாக வருவார். கேமராமேன் வேல்ராஜ் நான் என்ன நினைக்கிறேனோ அதை எடுத்துக் கொடுப்பார். இசையமைப்பாளர் ஜிவி கொடுத்த எனர்ஜிதான் கமர்சியல் சக்ஸஸுக்கு முக்கியக் காரணம்..” என்றார்.

Our Score