ஹீரோயின் வாங்க மறுத்த சம்பளப் பாக்கியை மேடையிலேயே கொடுத்து அசத்திய தயாரிப்பாளர் தாணு..!

ஹீரோயின் வாங்க மறுத்த சம்பளப் பாக்கியை மேடையிலேயே கொடுத்து அசத்திய தயாரிப்பாளர் தாணு..!

நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியுள்ள திரைப்படம் ‘அசுரன்’.

இந்தப் படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர், அபிராமி, நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசுபதி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தில் இரண்டு பாடல்களின் லிரிக் வீடியோக்களை திரையிட்டார்கள்.

g.v.prakash kumar

நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பேசும்போது, “இந்த வாய்ப்பைத் தந்த தாணு சார், வெற்றி மாறன் சார், தனுஷ் சார் அனைவருக்கும் நன்றி. ஒரு மண் சார்ந்த படத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் உழைத்த அனைவரும் பெரிய அளவில் உழைத்துள்ளார்கள்..” என்றார்.

manju warriar

நடிகை மஞ்சு வாரியர் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இது என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படம். தமிழில் முதன்முதலில் இப்படி ஒரு பவர்புல் டீமோட களம் இறங்குறது சந்தோஷமா இருக்கிறது. வெற்றி மாறன் படம் என்றால் கேரளாவிலும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். தனுஷின் ரசிகை நான். இவர்கள் அனைவரோடும் வேலை செய்தது நிஜமாகவே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.

நடிகர் தனுஷ் பேசும்போது, “இந்த ‘அசுரன்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமானதா  இருக்கு. வெற்றி மாறன்தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது.

IMG_7629

மஞ்சு வாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசையாக  இருந்தது. அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கிறது.

கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே.பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவியோடு வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசையை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்.

நான் மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்த படம் இது. வெற்றி மாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. வெற்றி மாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார்.

இந்தக் கதாப்பாத்திரம் என்னுடைய 36 வயதில் கிடைத்திருப்பது ஒரு பெரிய கொடுப்பினை. வேற எந்த நடிகருக்கும் இது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப் படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

IMG_7474

‘வட சென்னை’தான் வெற்றி மாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் ‘அசுரன்’தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். மக்கள்தான் ‘வட சென்னை’க்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. வெற்றி மாறன் விருது கிடைச்சதும் குதிச்சது கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது..

நான் நிறைய படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களைப் பார்த்துவிட்டேன். சிலர் சம்பளம் கொடுக்காமல் ஏமாத்திட்டாங்க.. ஆனால் தாணு ஸார்.. படத்தின் துவக்கத்திலேயே முழுச் சம்பளத்தையும் எனக்குக் கொடுத்திட்டாரு. அது அப்போ.. அந்த நேரத்துல எனக்கு மிகப் பெரிய உதவியைச் செஞ்சிருக்கு. அதுக்காக அவருக்கு எனது நன்றிகள்..” என்றார்.

இயக்குநர் வெற்றி மாறன் பேசியதாவது, “தனுஷின் நடிப்பில் தற்போது இந்தப் படம்தான் சீக்கிரம் வெளிவருகிறது. அதற்கு முக்கியமான காரணம் தாணு சார்தான். இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலில் இருந்து  எடுத்தாளப்பட்டது.

vetrimaran

‘வட சென்னை’ முடித்ததும் ‘வட சென்னை-2’ பண்ணலாமா என்று நினைத்தேன். பின்னர் ‘அது வேண்டாம்’ என்று முடிவெடுத்துவிட்டு, இந்தப் படத்தை துவங்க முடிவு செய்தோம்.

நாம எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு விசயத்தை நடத்த முடியாது. அது தானாகவே அமையணும். இந்தப் படத்திற்கு அப்படித்தான் எல்லாமே அமைந்தது. பசுபதிகூட வொர்க் பண்ணணும்னு பல படங்களில் நினைத்தேன். ஆனால் அது தற்போது இந்த ‘அசுரன்’ படம் மூலமாகத்தான் முடிந்தது.

படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும்  சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் எல்லோரிடமும் இருந்து எடுத்துக் கொண்ட கமிட்மெண்ட் அதிகம்.  ஒவ்வொரு நடிகர்களும் அவர்களின் அதிகபட்ச நடிப்பைக் கொடுத்தது எங்களுக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

முதலில் இப்படத்தில் நான் முடிவு செய்த நடிகர், கருணாஸின் மகன் கென்தான். ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பாலாஜி சக்திவேல் சார் நடிக்க முதலில் மறுத்தார். பின் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். ‘ஆடுகளம்’ நரேன் ஒரு ஸ்ட்ராங்கான ரோல் செய்துள்ளார். கஷ்டங்களில் இருந்து மீண்டு வரக் கூடிய ஒரு கேரக்டர் மஞ்சு வாரியாருக்கு. அவருக்கு சிறப்பான ஒரு வரவேற்பு தமிழ் ரசிகர்களிடையே காத்திருக்கிறது.

ஒரு முக்கிய வேடத்தில்  பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். என்னிடம் கதையே கேட்கவில்லை. சொன்ன நேரத்தில் சரியாக வருவார். வந்து சொன்னதை செய்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். இதேபோல் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவர்களும் ஒரு கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.

IMG_7617

எனக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய ஷீல்ட் தனுஷ்தான், தனுஷ் எந்த கேரக்டரில் நடித்தாலும் அதற்காகப் பெரிதும் மெனக்கெடுவார். இந்தப் படத்திற்காக அதிக மெனக்கெடலை எடுத்துக் கொண்டார். தேரிக்காடு அருகில் சூட்டிங் நடந்தபோது பைட் சீக்வென்ஸுக்காக தனுஷ் ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை அசால்டாக செய்தார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் எப்போதுமே நான் நினைப்பதை அப்படியே செய்து கொடுப்பார். என் கிரியேட்டிவிட்டியை எந்த இடத்திலும் தடை செய்யவே மாட்டார். நானும் ஜிவி பிரகாஷும் வொர்க் பண்ணும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். இந்தப் படத்திற்காக நாங்க நிறைய ஸ்டெடி செய்துதான் இசையை உருவாக்கியிருக்கிறோம். படத்தில் ஆர்.ஆர். ரொம்ப புதுசா இருக்கும். கலை இயக்குநர் நான் போதும் என்று சொன்னாலும், அதைவிட அதிகமாகவே செய்து தருவார். என்கூட படத் தொகுப்பு வேலை செய்வதும் ரொம்பவே சிரமம். என் படத் தொகுப்பாளர் அதைப் புரிந்து கொண்டு வேலை செய்தார். அதைப் போலத்தான் ஸ்டண்ட் மாஸ்டரும். கடின உழைப்பைக் காண்பித்திருக்கிறார்.

இப்படி அத்தனை பேரும் இணைந்து அற்புதமாகப் பணியாற்றி எனக்காக இந்தப் படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..” என்றார்.

IMG_7345

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு பேசும்போது, “தனுஷ் சொன்னதும் இந்தப் படத்தை உடனே துவங்கினேன். வியக்கத் தகுந்த இயக்குநர் வெற்றிமாறன். ஒரு நாள் வெற்றிமாறன் போன் பண்ணி ‘தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார்’ என்று சொல்வார். மறுநாள் தனுஷ் போன் பண்ணி, ‘சார் வெற்றி மாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது’ என்பார். ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட வேறென்ன சந்தோசம் வேண்டும்..? வெற்றி மாறனை எனக்குத் தந்த தனுஷுக்கு கோடான கோடி நன்றி.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்காகவே கலைப்புலி ஆடியோஸ் என்கிற நிறுவனத்தைச் சொந்தமாகத் துவக்கியிருக்கிறேன். இந்தப் படத்தின் ஆடியோவுக்கான OTT Rights மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. அப்போ இதுவரையிலும் எத்தனை படங்களின், எத்தனை பாடல்களின் உரிமை எத்தனை கோடிகளுக்கு விற்பனை ஆகியிருக்கும். யோசித்துப் பாருங்கள். இனிமேலும் ஏமாறக் கூடாது என்றுதான் இந்தப் புதிய முடிவை எடுத்தேன். புதிய தயாரிப்பாளர்களுக்கும் எனது ஆடியோ நிறுவனத்தின் மூலமாக வழி காட்ட எண்ணியுள்ளேன்.

IMG_7419

மேலும் இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியரை முன்னரே பல படங்களில் நடிக்க வைக்க நான் முயற்சிகள் செய்தேன். அவரையும் திலீப்பையும் ஒன்றாக நடிக்க வைக்கலாம் என்றுகூட முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. இப்போதுதான் இந்தப் படத்தில் வெற்றி மாறன் மூலமாக முடிந்திருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

மஞ்சு வாரியாருக்கு இந்தப் படத்தின் துவக்கத்திலேயே சம்பளமாகப் பேசிய தொகையில் பாதியைக் கொடுத்துவிட்டேன். மீதியை இரண்டாவது ஷெட்யூலுக்கு வந்தபோது “வாங்கிங்கம்மா..” என்று கொடுத்தேன்..! “வைங்க ஸார்.. அப்புறம் வாங்கிக்கிறேன்…” என்றார். ஆனால், வாங்கவில்லை. டப்பிங்கிற்கு வந்தபோதும் கொடுத்தேன். அப்போதும் இதையேதான் சொன்னார். இப்போதுவரையிலும் அவர் மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.

இதேபோல் நான் தயாரித்த ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும்போது அவருக்கு 50 லட்சம் சம்பளம் பேசி 39 லட்சம் ரூபாயை முதலில் கொடுத்துவிட்டேன். பின்பு 11 லட்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு “வாங்கிக்கங்கம்மா..வாங்கிக்கங்கம்மா…” என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தேன். அவங்க வாங்கவே இல்லை. கடைசீல அவங்க பேர்ல டிமாண்ட் டிராப்ட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைச்சேன்.

dhanush-manju warriar

அதே மாதிரிதான் இன்னிக்கு மஞ்சு வாரியாரும் செய்றாங்க. அதனால் அவங்களுக்கும் கொடுக்க வேண்டிய மீதத் தொகையை டிமாண்ட்டிராப்ட்டா எடுத்து வைச்சிருக்கேன். இதை மறுக்காமல் அவங்க வாங்கிக்கணும்..” என்று சொல்லி டிமாண்ட் டிராப்ட் கவரை தனுஷிடம் கொடுக்க.. அதை அவர் மஞ்சு வாரியரிடம் கொடுக்க… அதனை மஞ்சு வாரியர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
error: Content is protected !!