full screen background image

“கத்தி’ டைட்டிலை திருடிவிட்டார்கள்..” – உதவி இயக்குநர் போர்க்கொடி..!

“கத்தி’ டைட்டிலை திருடிவிட்டார்கள்..”  – உதவி இயக்குநர் போர்க்கொடி..!

“எப்படிய்யா தாங்குறாங்க இந்த கம்பெனிக்காரங்க..?” என்ற ஆச்சரியக்குறி ‘கத்தி’ படக் குழுவை நோக்கி வீசப்பட்டு வருகிறது..! தினத்துக்கு ஒரு பிரச்சினை என்று ‘கத்தி’ படத்தை குறி வைத்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

சென்ற வாரம்தான் “கத்தி’ படத்தின் கதை தன்னுடையது..” என்று சொல்லி மீஞ்சூர் கோபி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அது நிலுவையில் இருக்கும் தகவல் வெளியானது. (இந்தச் செய்தி இந்தப் பதிவில் உள்ளது.)

நேற்றைக்கு “கத்தி’ படத்தின் டைட்டிலே என்னுடையதுதான். எனக்குத் தெரியாமல் அபகரித்துவிட்டார்கள்…” என்று சொல்லி ஒரு உதவி இயக்குநர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

ravi inbha

ரவி இன்பா என்னும் அந்த உதவி இயக்குநர் இயக்குநர் தாமிராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவர், ‘கத்தி சண்டை’ என்ற பெயரில் ஒரு கதையை தயார் செய்திருக்கிறார். இந்தக் கதையை படமாக்கவிரும்பி ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் நந்தகோபால் மூலமாக, தயாரிப்பாளர் சங்கத்தில் ‘கத்தி சண்டை’ என்ற பெயரை பதிவு செய்திருக்கிறார். இது நடந்தது 2013 அக்டோபர் 25-ம் தேதி.

இதன் பின்னர் தயாரிப்பாளர் நந்தகோபால் அந்தப் படம் சம்பந்தமாக வேறு முயற்சிகள் எதுவும் எடுக்க முன் வராத்தால் தானே அந்தப் படத்தை  சொந்தத் தயாரிப்பில் உருவாக்க முடிவெடுத்திருக்கிறார் ரவி இன்பா.

இதற்காக இந்தாண்டு மே மாதம் ‘கத்தி சண்டை’ என்ற டைட்டிலை தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘சைலண்ட் டாக்கீஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய கேட்டிருக்கிறார்.

ஆனால் அப்போது “ஏற்கெனவே ‘கத்தி’ என்ற டைட்டில் பதிவாகிவிட்டதால் இப்போது இந்தப் பெயரை பதிவு செய்ய முடியாது…” என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் மறுத்திருக்கிறார்கள்.

இதன் பின்புதான் அந்த ‘கத்தி சண்டை’ என்ற டைட்டிலை உருவாக்கிய தன்னிடம் தெரிவிக்காமலேயே தயாரிப்பாளர் நந்தகோபால், ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்களிடம் டைட்டிலை விட்டுக் கொடுத்திருப்பது ரவி இன்பாவுக்குத் தெரிய வந்திருக்கிறது.

2014 பிப்ரவரி 18-ம் தேதியன்று நந்தகோபால், லைகா நிறுவனத்திற்கு “கத்தி’ என்ற டைட்டிலை லைகா நிறுவனம் பதிவு செய்வதற்கு தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை…” என்று கடிதம் அளித்திருக்கிறார். அன்றைக்கே ‘கத்தி’ டைட்டில் தயாரிப்பாளர் கவுன்சிலில் லைகா நிறுவனத்தின் பெயரில் பதிவாகியிருக்கிறது.

இதைத் தெரிந்து கொண்ட ரவி இன்பா தனது தயாரிப்பாளரான நந்தகோபாலுக்கு 2014 மே 10 அன்று அனுப்பிய நோட்டீஸில் “எனது கவனத்திற்குக் கொண்டு வராமல் ‘கத்தி’ டைட்டிலை லைகா நிறுவனத்திற்கு நீங்கள் விட்டுக் கொடுத்தது தவறு… அப்படி செய்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் லைகா நிறுவனத்திற்கும் இது குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் ரவி இன்பா “தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்…” என்றும் கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்துள்ள லைகா நிறுவனம், “சட்டப்படி அந்த டைட்டில் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். எனவே உதவி இயக்குநர் இதில் சொந்தம் கொண்டாட முடியாது. நாங்கள் முறைப்படி தயாரிப்பாளரிடத்தில் அனுமதி பெற்றுத்தான் எங்களது டைட்டிலை பதிவு செய்துள்ளோம். மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார்…” என்றும் கூறியுள்ளார்கள்.

இது குறித்து பேட்டியளித்திருக்கும் உதவி இயக்குநர் ரவி இன்பா, “ஒரு படத்தின் கதையை தயாரிப்பாளர் தயாரிக்க மறுத்து நிராகரித்துவிட்டாலே, அது அந்தக் கதையைச் சொன்ன இயக்குநருக்கு சொந்தமாகிவிடும். அப்படியிருக்க தான் தயாரிக்காத படத்தின் டைட்டிலுக்கு தயாரிப்பாளர் எப்படி உரிமையாளராவார்..?

‘கத்தி’ பட டீம் இதில் இருக்கும் அத்தனை உண்மைகளையும் தெரிந்து கொண்டுதான் வேண்டுமென்றே என்னை ஏமாற்ற நினைத்து அந்த டைட்டிலை திருடியிருக்கிறார்கள். நான் நிச்சயம் கோர்ட்டுக்கு போகப் போகிறேன். ‘கத்தி’ என்ற டைட்டிலை வைத்து அவர்களது படம் வெளியாகக் கூடாது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடரப் போகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

இன்னும் எத்தனை கத்திக் குத்துக்களைத்தான் இந்த ‘கத்தி’ பட டீம் பெறப் போகிறதோ தெரியவில்லை..?  எவ்ளோ குத்தினாலும் தாங்குறாங்கப்பா..!!!

Our Score