கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கும் அருள்நிதி தமிழரசு..!

கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கும் அருள்நிதி தமிழரசு..!

தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு சில இயக்குநர்களில் கரு.பழனியப்பன் ஒருவர். சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். இதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில்  அடுத்த படத்தை துவக்கவுள்ளார்.

‘பார்த்திபன் கனவு’, ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘மந்திரப்புன்னகை’, ‘சதுரங்கம்’, ‘ஜன்னல் ஓரம்’ ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்றிருக்கும் கரு.பழனியப்பன் இப்போது இயக்கவிருப்பது அவருடைய 7-வது படமாகும்.

இதுவரையிலும் பெயரிடப்படாத இந்தப் படம் தமிழகத்தின் தற்காலத்திய அரசியலை அலசும் படமாகும். தரமான மற்றும் வித்தியாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நடிகர் அருள்நிதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவரது வளர்ச்சி இப்படம் மூலம் ஒரு புதிய உயரத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற  ‘மரகத நாணயம்’ படத்தை தயாரித்த ‘ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி’  சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கதாநாயகி மற்றும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’  என்ற தலைப்பில் ஒரு படத்தையும்,  ‘ராட்சஸன்’ என்ற தலைப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தையும்  Axess Film Factory நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.