நடிகர் சங்கத்தின் தகவல் கேட்பு திட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது..!

நடிகர் சங்கத்தின் தகவல் கேட்பு திட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் பற்றி முழு விபரங்களை பதிவு செய்து வைத்து அவர்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவிகளை தருவதற்காக உறுப்பினர்கள் பற்றி தகவல் திரட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது புதிய நிர்வாகம்.

அதன்படி இந்தத் தகவல் திரட்டும் முகாம் தமிழகத்தின் பல ஊர்களில் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதிலும் 11 மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மேற்பார்வையில் இந்த உறுப்பினர் தகவல் சேர்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட உறுப்பினர்களுக்கான முகாம் சங்கத்தின் மேலாளர் பாலமுருகன், நடிகர் அயூப்கான் மேற்பார்வையில் கோவையில் நடைபெறுகிறது.

சேலம், தர்மபுரி மாவட்ட முகாம் நடிகை கோவை சரளா மேற்பார்வையில் சேலத்தில் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட முகாம் நாமக்கலிலும், கரூர், திண்டுக்கல் மாவட்ட முகாம் நடிகர் விக்னேஷ் மேற்பார்வையில் கரூரிலும், காரைக்குடி, சிவகங்கை மாவட்ட முகாம் நடிகை ராதாவின் மேற்பார்வையில் காரைக்குடியிலும், புதுக்கோட்டை மாவட்ட முகாம் நடிகர் ஆரி மேற்பார்வையில் புதுக்கோட்டையிலும், திருச்சி, பெரம்பலூர் மாவட்ட முகாம் நடிகர் ஹேமச்சந்திரன் தலைமையில் அரியலூரிலும், நாகை மாவட்ட முகாம் நடிகர் பசுபதி மேற்பார்வையில் தஞ்சாவூரிலும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்ட முகாம் நடிகர் மனோபாலா தலைமையில் புதுச்சேரியிலும், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்ட முகாம் நடிகர் உதயா மேற்பார்வையில் மதுரையிலும், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முகாம் நடிகர் பிரேம் தலைமையில் ஆரணியிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட முகாம் நடிகை சோனியாவின் மேற்பார்வையில் ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.