ஹன்ஸிகா பேயாக நடிக்கும் சுந்தர்.சி.யின் ‘அரண்மனை’..!

ஹன்ஸிகா பேயாக நடிக்கும் சுந்தர்.சி.யின் ‘அரண்மனை’..!

20 கோடி ரூபாய் பொருட் செலவில் விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை’ தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகியுள்ளது.

இதில் வினய், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய், சந்தானம், சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, அகிலா, மீரா கிருஷ்ணன், லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், செளந்தர், அல்வா வாசு, யோகி பாபு, ஆர்த்தி கணேஷ், விச்சு, கெளதம், இயக்குநர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், சிவஷங்கர் மாஸ்டர், சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என்று ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. கூடவே சுந்தர் சி.யும் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா என்னும் இடத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ஒரு அரண்மனையையே கலை இயக்குநர் குருராஜ் உருவாக்கியுள்ளார். மிகப் பிரமாண்டமான இந்த அரண்மனையை 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு, பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர்.

“இது என்னுடைய வழக்கமான படமில்லை. திகில் சஸ்பென்ஸ் கலந்த ஹர்ரர் மூவி…” என்கிறார் சுந்தர் சி. “தமிழ்ல ஹர்ரர் படங்கள் ரொம்பக் கம்மி. எனக்கு அந்த ஜானர்ல படம் பண்ண ஆசை. இதுல ஹன்சிகாவோட கேரக்டர் பேய்தான். ஆனா சர்ப்ரைஸ் கேரக்டர்.

ஹன்சிகாவோட செட்டப் ஒண்ணு ரொம்ப புதுசா இருக்கும். அதை ஹன்சிகாவுக்கே சர்ப்ரைஸா அனுப்பிட்டு ‘வெளில விட்டுடாதே’ன்னு செல்லமா மிரட்டி வைச்சிருக்கேன். எனக்கும், ஹன்சிகாவுக்கும் காம்பினேஷன்கூட கிடையாது.

ஆண்ட்ரியா முகத்துல ஒரு மெஸ்மரிசம் இருக்கும். அது எனக்கு ரொம்பப் புடிக்கும். இவங்க ரெண்டு பேர்தான் மெயின் கேரக்டர்ஸ்.

சந்தானத்துக்கு படம் முழுக்க வர்ற மாதிரியான ஒரு கேரக்டர் கொடுத்திருக்கேன். சந்தானம் பேய்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது செம காமெடியா இருக்கும். ஒரு சீன்ல பேய்ன்னே தெரியாம அதுகூட கடலை போடுவாரு.

காமெடி படம் எடுக்குறது ரொம்பக் கஷ்டம். டயலாக் ஷாட், ஆர்ட்டிஸ்ட் ரியாக்சன்னு எல்லாத்துலேயும் காமெடி இருக்கணும். ஹர்ரர், ஆக்சன் படமெல்லாம் எனக்கு ஈஸியாத்தான் தெரியுது. அதான் துணிஞ்சு இதை எடுத்திருக்கேன்….” என்கிறார் சுந்தர்.சி

கோவை சரளாவும், மனோபாலாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். படம் முழுவதும் இந்த ஜோடியின் காமெடி வேட்டை தொடர்ந்துள்ளதாம். மூன்று கதாநாயகிகளும் நடிப்பிலும் பாடல் காட்சிகளிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பை ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் அனைத்து தொழில் நுட்பக் கருவிகளையும் பயன்படுத்தி படம் பிடித்துள்ளார். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளையும் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையில் 5 பாடல்கள் உருவாக்கியிருக்கின்றன. பா.விஜய், பிறைசூடன், அண்ணாமலை ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இதன் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி மிக விரைவில் நடைபெற இருக்கிறது.