‘அண்ணாதுரை’ ஒரு பவர்ஃபுல்லான திரைப்படமாம்…!

‘அண்ணாதுரை’ ஒரு பவர்ஃபுல்லான திரைப்படமாம்…!

நடிகை ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘அண்ணாதுரை’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் ராதாரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜீவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தில்ராஜின் ஒளிப்பதிவில், ஆனந்த மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை பயிற்சியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அருண் பாரதி  பாடல்கள் எழுதியுள்ளார், கவிதா, சாரங்கன் இருவரும் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநரான சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த ‘அண்ணாதுரை’ திரைப்படம், வரும் நவம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

படம் குறித்து பேசிய இயக்குநர் சீனிவாசன், “என்னுடைய முதல் படமான ‘அண்ணாதுரை’ வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காகத்தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.

சினிமாவை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குநர்களிடத்தில் வேலை செய்திருக்கிறேன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இயக்குநர் வசந்தபாலனிடம் கிளாஸாக எப்படி படம் எடுப்பது? இயக்குநர் சுசீந்திரனிடம் அழுத்தமான கமர்சியல் ஹிட் படம் எடுப்பது எப்படி..? இதேபோல் நகைச்சுவையை பூபதி பாண்டியனிடமும், குறிப்பிட்ட நேரத்துக்குள் படம் எடுத்து முடிப்பதை எழில் சாரிடமும் கற்றுக் கொண்டேன்.

இந்தக் கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன். இந்த ‘அண்ணாதுரை’ படத்தின் கதைக்கு விஜய் ஆண்டனியை தவிர்த்து யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. பல நடிகர்களிடம் காண முடியாத, நுட்பமான அதே சமயம் அழுத்தமான பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆண்டனியால்தான் முடியும்.

‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனியின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருந்தது. நடிகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு படத் தொகுப்பாளராகவும் தன் சிறப்பான பங்களிப்பை இந்தப் படத்தில் அவர் செய்திருக்கிறார். ஒட்டு மொத்த படக் குழுவும் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது.

‘அண்ணாதுரை’ தலைப்புக்கேற்ற வகையில் ஒரு பவர்ஃபுல் படமாக இருக்கும். எனது வாழ்நாளில் மறக்க முடியாத நவம்பர் 30-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்றார் அறிமுக இயக்குநர் சீனிவாசன்.




error: Content is protected !!