full screen background image

பிப்ரவரி 21-ல் ரிலீஸாகிறது அங்குசம்..!

பிப்ரவரி 21-ல் ரிலீஸாகிறது அங்குசம்..!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது அங்குசம் திரைப்படம். யூ சென்சார் சர்டிபிகேட் பெற்ற பிறகு வரிவிலக்கு கேட்டு அரசுக்கு விண்ணப்பித்தபோது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் பி.ஏ. லஞ்சம் கேட்டதாக இப்படத்தின் இயக்குநர் மனுக்கண்ணன் புகார் சொல்லி பத்திரிகைகளில் செய்தியாக வந்து படு சர்ச்சையானது. இப்போது பல தடைகளையும் தாண்டி வரும் பிப்ரவரி 21-ம் தேதி இப்படம் ரிலீஸாகிறதாம்.

ஸ்கந்தா – ஜெயந்திகுஹா நடிப்பில் துபாய் தொழிலதிபர் மனுகண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இது. தகவல் அறியும் சட்டம் என்கிற மகத்தான அங்குசத்தை நம் கையில் வைத்திருந்தாலும், ஊழல் யானைகளை ஒழிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் அறியாமையைப் போக்கும் எண்ணத்துடன், அரசாங்கமே செய்ய வேண்டிய வேலையை தனி மனிதனாக தனது படம் மூலம் செய்ய முயன்றிருக்கிறார் மனுகண்ணன்.

ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் “இந்தப் படம் ஒவ்வொரு குடிமகனும் மட்டுமல்ல ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் பார்க்கவேண்டிய படம்..” என்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என்கிற வகையில் U சான்றிதழும் வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளர், இயக்குநரான மனுக்கண்ணன் மீது தமிழக முதல்வரின் சார்பிலும், அமைச்சரின் சார்பிலும் மான நஷ்ட வழக்கு போடப்பட்டுள்ளது. வரிவிலக்கு அளிக்க லஞ்சம் கேட்டதாக ‘நக்கீரன்’ பத்திரிகைக்கு கொடுத்த இயக்குநர் மனுக்கண்ணன் பேட்டியின் அடிப்படையில் இந்த வழக்காம். அரசு இந்த வழக்கை தொடுத்ததற்காகவாவது, இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!

Our Score