ஜூன் 29-ல் வெளியாகிறது ‘அண்டாவ காணோம்’ திரைப்படம்

ஜூன் 29-ல் வெளியாகிறது ‘அண்டாவ காணோம்’ திரைப்படம்

ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க பெறும் படங்களை தயாரித்து வரும் திறமையான தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.

இவருடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘அண்டாவ காணோம்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 29-ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக  திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. இந்த அச்சத்தை வரும் ஜூன் 29-ம் தேதி ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளிவரவிருக்கும்  ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் நீக்கும் என்கிறார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

இது குறித்து அவர் பேசும்போது, “எங்களுடைய தயாரிப்பான இந்த ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம்.

குழந்தைகள்  விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது.

இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன்படியே தான் பணியாற்றி வருகிறேன். என் தயாரிப்பில், அடுத்த மாதம் 29-ம் தேதி வெளிவர இருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் என் கூற்றை நிரூபிக்கும்.

‘அண்டாவ காணோம்’ போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளி வரும் பட்சத்தில் இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்கப்படும் தரமற்ற படங்கள், தானாகவே இருட்டில் கரைந்து விடும்…” என்று தனக்கே உரிய பாணியில் கூறுகிறார் ஜே.எஸ்.கே.