‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ – மீண்டும் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது..!

‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ – மீண்டும் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது..!

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியை தமிழக மக்கள் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தது அன்றுதான்.

அதற்கு 3 நாட்களுக்கு முன்பாகத்தான் ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரபேல் சுல்தானா தயாரித்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படமும் வெளியாகியிருந்தது.

படம் பார்த்த ரசிகர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் ‘நல்ல படம்; பொழுது போக்கான நகைச்சுவை படம்’ என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப் படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருந்தது.

ஆனால் டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும், தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர்.

தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி அவருடைய மரணம் நிகழ்ந்ததையடுத்து அந்த வாரம் முழுவதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை..

அதற்கடுத்த வாரத்தில் திட்டமிட்டபடியே வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்ல படம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.

ASA Stills (9)

இந்த நிலையில் வரும் மார்ச்-3௦-ம் தேதி இந்தப் படம் மீண்டும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸாக இருக்கிறது. திரையுலகில் புதிய படங்களை திரையிடக் கூடாது என வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரீ-ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப் படத்தின் வெளியீடு இப்போது எதற்காக என்பது குறித்து படத்தின் நாயகனான ரிஜன் சுரேஷ் விளக்கம் அளித்துள்ளனர். 

“இந்தப் படத்தில் நான் நாயகனாகவும் ஆர்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ளோம். மேலும் சுரேஷ், பட்டிமன்றம் ராஜா, ‘போராளி’ திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் நாகராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

அழகான, அருமையான, நல்ல படத்தைத்தான் தயாரித்துள்ளோம் என்ற சந்தோஷத்தில்தான் தயாரிப்பாளர் இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார்.  இத்திரைப்படத்தின் வெற்றி எங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என்று எங்களது குழுவினர் அனைவருமே, நம்பிக்கையாக இருந்தோம்.

தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து ‘படம் நன்றாக இருக்கிறது.. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது’ என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்திருந்தன. 

Azhagendra Sollukku Amudha Poster 02

ஆனால் ஜெயலலிதா மறைந்த துயர நிகழ்வு எங்களுக்கு பேரிடியாக அமைந்துவிட்டது. படம் வெளியான மூன்றாவது நாளே ஜெயலலிதாவின் மறைவின் காரணமாக, இந்தப் படம் ஒரு வாரத்தில் தியேட்டரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை உருவானது.

இதைத் தொடர்ந்து செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்தது… ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய நாங்கள் முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆனாலும், இந்தப் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை எதிர்பார்த்து காத்திருந்தோம்.

இந்த நிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. காலச் சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.

எனவே இந்தப் படத்திற்கு ஒரு விடிவு காலம் இந்த நேரத்தில் கிடைக்கிறதே. அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக் கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில்தான் இந்த சமயத்தில் ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

வரும் மார்ச் 3௦-ம் தேதி இந்தப் படம் தமிழகத்தில் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது. 

வரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுது போக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும்தான் ரீ-ரிலீஸ் செய்கிறோம்…” என விளக்கினார் படத்தின் நாயகனான ரிஜன் சுரேஷ். 

இந்தப் படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக் குழுவினர்.