அஜித்தின் புதிய படம் 2019 கோடை விடுமுறையில் வெளியாகும்..!

அஜித்தின் புதிய படம் 2019 கோடை விடுமுறையில் வெளியாகும்..!

‘விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்தப் படத்தை ‘பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல்.எல்.பி.’ என்கிற நிறுவனத்தின் சார்பில்  பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்க, இயக்குநர் வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே.

2016-ம் ஆண்டில் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் வெளியான ‘பின்க்’ என்கிற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.

தனது நடிப்பு திறமையால் நாடெங்கும் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட வித்யா பாலன் இந்த படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். அவர் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். 

வளர்ந்து வரும் நடிகைகளில் திறமையான ஒருவர் என்று கணிக்கப்படும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது திறமையான வாதிடும் திறமையால் எல்லோரையும் கவர்ந்த ரங்கராஜ் பாண்டே இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒரு நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். மேலும் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியாங், மற்றும் பலர் நடிக்க உள்ளனர். 

ஒளிப்பதிவாளர் – நீரவ் ஷா, கலை இயக்குநர் – கே கதிர், சண்டை இயக்கம் – திலிப் சுப்புராயன், இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு. கோகுல் சந்திரன், நிர்வாக தயாரிப்பு- பி ஜெயராஜ், ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, இயக்கம் – வினோத் குமார்.

இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் பேசுகையில், “நடிகர் அஜித்குமாருடனான எனது நட்பு, அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ திரைப்படத்தில் நடிக்கும்போது தொடங்கியது.

தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும்  என்கிற தனது விருப்பத்தை அவர் எதேச்சையாக அஜித் குமாரிடம் கூறி உள்ளார். ‘நிச்சயமாக’ என்று கூறிய அஜித் சொன்னவாறே எங்களை தமிழில் படம் தயாரிக்க  அழைத்தார்.

ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

ajith-sridevi

நாங்கள் தேர்ந்து எடுத்த கதையின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவருடைய கனவை நனவு  ஆக்கும் சீரிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்று இணைந்து இருப்பது என்னை  பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.

அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நிற்கப் போவதில்லை. அஜித்குமார் நாயகனாக நடிக்க புதிய திரைப்படம் ஒன்றையும் எங்களது தயாரிப்பில் தயாரிக்கவுள்ளோம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலையில் துவக்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

 நான் சினிமாவை விரும்பி பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தை பார்ப்பதற்கு முன் அந்த படத்தின் போஸ்டர் வாயிலாக அந்த படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன்.

அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான தொழில் நுட்ப டீம் வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே அமைந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இயக்குநர் வினோத் அவருடைய முந்தைய படங்களின் முலம் தனது பன்முக திறமையை காட்டி விட்டார். அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டு வர எடுக்கும் சிரத்தையும் மிக மிக பாராட்டுக்குரியது.

கதை எதன் பின்னனியில் அமைந்திருந்தாலும் இசை அந்தப் படத்துக்கு வலு சேர்க்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். அந்த வகையில்  என்னை மிகவும் ஈர்த்த இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி…” என்றார்.

2019-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்புக் குழுவினர் படத்தை துவக்க உள்ளனர்.




error: Content is protected !!