‘அகோரி’ படத்தின் டீஸரை நடிகர் விஷால் வெளியிட்டார்..!

‘அகோரி’ படத்தின் டீஸரை நடிகர் விஷால் வெளியிட்டார்..!

ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி பாலா,  மோஷன் பிலிம் பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அகோரி.’

சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாமும் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார். 

நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே  ‘144’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் மைம் கோபி, சித்து,  டார்லிங் மதன கோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, ‘கலக்கப் போவது யாரு’ சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப் பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள். தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம்  புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 அடி ஆகும்.

ஒளிப்பதிவு – வசந்த். இவர் ‘ஈகோ’, ‘கள்ளத் துப்பாக்கி’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக். நான்கு இசையமைப்பாளர்களின்  கூட்டணி இது. கலை இயக்கம் – ஜெயச்சந்திரன், வசனம் – ஆர்.பி பாலா. இப்படத்தை அறிமுக இயக்குநரான D.S.ராஜ்குமார் இயக்கியிருக்கிறார்.

சிவனடியாராக உள்ள ஒரு அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே இந்தப் படத்தின் கதை, இதுவொரு முழுமையான ஆக்சன், த்ரில்லர்,  காமெடி, காதல்  சென்டிமெண்ட் உட்பட அனைத்து அம்சங்களும் கலந்த   படம். ஆறிலிருந்து அறுபதுவரையுள்ள அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும். 

படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில்  படமாக்கப்பட்டது. பிரம்மாண்டமான  செலவில் ஹரித்துவார் போன்று செட் அமைக்கப்பட்டு அதில் 150 அகோரிகளுடன்  நடித்த காட்சி படமானது. இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியிலும் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன. 

படத்தில் இடம் பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரள வைக்கும்படி இருக்கும்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் ‘அகோரி’ படத்தின் டீசரை நேற்று வெளியிட்டார்.

டீஸரைப் பார்த்த விஷால் படம் பற்றியும், படக் குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக் குழுவினரை பெரிதும் வாழ்த்தினார்.

‘அகோரி’ திரைப்படம்  விரைவில் வெளியாகவுள்ளது.