‘அக்னி நட்சத்திரம்’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது..!

‘அக்னி நட்சத்திரம்’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது..!

இயக்குநர் மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்களாம். இதனை ‘அக்னி நட்சத்திரா’ என்ற பெயரில் இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கவுள்ளார். 

கடந்த 1988-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம் இன்றுவரையிலும் மணிரத்னத்தின் ரசிகர்களிடையே ஏகோபித்த பாராட்டைப் பெற்ற படம்.

இந்தப் படத்தில் பிரபு, கார்த்திக், விஜயகுமார், சுமித்ரா, தாரா, நிரோஷா, அமலா, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், உமாபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ராம். இசை – இளையராஜா.

தந்தையை சொந்தம் கொண்டாடுவதில் இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்தான் படத்தின் பிரதானக் கதை.  இடையில் இந்தச் சகோதரர்களின் காதல் கதைகள்.. இந்த படத்தில் பிரபுவும், கார்த்திக்கும் சகோதரர்களாக நடித்துள்ளனர்.  இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.  பின்பு தெலுங்கிலும், இந்தியிலும்கூட இத்திரைப்படம் வெளியானது. 

இந்நிலையில், இதனை இந்தியில் மீண்டும் ரீமேக் படமாக உருவாக்க எண்ணியுள்ளார் இயக்குநர் பிஜோய் நம்பியார். இவர் மணிரத்னத்துடன் ஹிந்தி படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  அமிதாப்பச்சன் மற்றும் பர்கான் அக்தர் நடிப்பில் ‘வாசீர்’ என்ற வெற்றி படத்தை தந்தவர்.

“இந்தப் படத்தில் நடிப்பவர்கள் முன்னணி நடிகர்களா..? அல்லது புதிய முகங்களா..?..” என கேட்டதற்கு, “அது பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்..” என அவர் கூறியுள்ளார்.




error: Content is protected !!