full screen background image

அகவன் – சினிமா விமர்சனம்

அகவன் – சினிமா விமர்சனம்

RBK ENTERTAINMENT நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவிச்சந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் கிஷோர் ரவிச்சந்திரன் நாயகனாகவும், சிராஸ்ரீயும், நித்யா ஷெட்டியும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், தம்பி ராமையா, சரண்ராஜ், நரேன், பிரியங்கா, ஹலோ கந்தசாமி, மீராபி, ஆர்.என்.ஆர்.மனோகர், ஆர்.மகாலட்சுமி, மணிக்குட்டி, பாலசுப்ரமணி, வெங்கட் ரமேஷ், வைரபாலன், ஸ்டீபன் செல்வம், அம்பை கார்த்திக், ‘மைனா’ அர்ச்சனா, ஏ.கே.நிதி, எல்.வி.கே.தாஸ், ஆர்.நிர்மல், மாஸ்டர் வி.தனுஷ், பேபி.ஆர்.மாதங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஆர்.ரவிச்சந்திரன், எழுத்து, இயக்கம் – ஏ.பி.ஜி.ஏழுமலை, ஒளிப்பதிவு – பால பழனியப்பன், இசை – சி.சத்யா, படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், ஆர்.நிர்மல், பாடல்கள் – யுகபாரதி, கலை இயக்கம் – வைரபாலன், தயாரிப்பு நிர்வாகம் – எம்.செந்தில், சண்டை இயக்குநர் – மிராக்கில் மைக்கேல் ராஜ், தயாரிப்பு மேனேஜர் – பி.செல்லத்துரை, நடன இயக்கம் – நோபல், புகைப்படங்கள் – தேனி சீனு, சிறப்பு சப்தம் – சி.சேது, ஒலிப்பதிவு – ஜி.தரணிபதி, டிசைனர் – ஷபீர், கணினி வரைகலை – ஆர்.மூர்த்தி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இப்போதைய தொழில் நுட்பத்தினால் உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளால்கூட தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தை அனுமானிக்க முடியவில்லை. அதை எப்படி கட்டி வடிவமைத்தார்கள்..? கட்டி முடித்தார்கள்…? என்று இன்றைக்கும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.. பேசுகிறார்கள்.

அந்தக் கோவிலுக்குள் பல ரகசியங்கள் புதைந்திருப்பதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இன்றைக்கும் சொல்கிறார்கள். இதனால்தான் தொல் பொருள் ஆய்வுத் துறை அந்தக் கோவிலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாத்து வருகிறது.

அந்தக் கோவிலைப் பற்றிய ரகசியங்களாக பேசப்படும் சில விஷயங்களை இத்திரைப்படம் பேசுகிறது. பண்டைய கால ஓலைச் சுவடிகளின் பெருமைகள் பற்றியும், நமது மன்னர்கள் காலத்திய மக்களின் வாழ்க்கை முறை, அரசர்களின் நீதி நெறி தவறாமை பற்றியும் இப்போதைய கமர்ஷியல் சினிமா பார்முலாவில் கலந்து இத்திரைப்படம் பேசுகிறது.

திண்டிவனம் அருகில் மலை மீதிருக்கிறது பண்டைய கால சிவன் கோவில். இந்தக் கோவிலில் பணியாட்களாக தம்பி ராமையாவும், நாயகன் முருகவேல் என்னும் கிஷோர் ரவிச்சந்திரனும் வேலை பார்க்கிறார்கள்.  

அக்காள் தங்கையான நாயகிகள், சிராஸ்ரீயும், நித்யா ஷெட்டியும் அதே கோவிலில் பூ விற்று வருகிறார்கள். சிராஸ்ரீ மட்டும் கோவிலுக்குள் வேலையும் செய்து வருகிறார். இவர்களில் நித்யா ஷெட்டி கிஷோரை ஒருதலையாய் காதலித்து வருகிறார்.

அந்தக் கோவிலில் இரவு நேரத்தில் சலங்கை சப்தமும், யாரோ ஆட்கள் உள்ளேயிருப்பது போலவும் தோன்றுகிறது. தம்பி ராமையாவும், கிஷோரும் தேடிப் பார்த்தும் இது அவர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

ஒரு நாள் நாயகி சிராஸ்ரீ தனிமையில் இரவு நேரத்தில் கோவில் அருகே வந்ததைப் பார்த்து விடுகிறார் கிஷோர். இது பற்றி சிராஸ்ரீயிடம் கேட்டபோதுதான் அந்தக் கோவிலைச் சுற்றிலும் ஒரு பெரிய சதித்திட்டமே நடந்து வருவது கிஷோருக்கு தெரிய வருகிறது.

கோவிலின் அடிப்பகுதியில் அரசர்கள் காலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையலை தேடியெடுக்க  ஒரு டீம் தனியாக வேலை செய்து வருவதை அறிகிறார் கிஷோர். இப்போதுதான் அவரும் அவரது சுயரூபத்தைக் காண்பிக்கிறார். அவரும் ஸ்பெஷல் பிரான்ச் போலீஸில் சப்-இன்ஸ்பெக்டர்.

இப்படியொரு சதி வேலை கோவிலில் நடப்பதையறிந்ததுதான் போலீஸ் கண்காணிப்பாளரான சரண்ராஜின் உத்தரவினால் அதே கோவிலில் பணியாளாக வேலை பார்த்து வருவதாகச் சொல்கிறார் கிஷோர்.

சிராஸ்ரீ அடையாளம் காட்டிய நபர்களைக் கூண்டோடு பிடிக்க திட்டம் தீட்டுகிறார் கிஷோர். அது முடிந்ததா.. இல்லையா… என்பதுதான் இத்திரைப்படத்தின் திரைக்கதை.

முழுக்க, முழுக்க ஒரு கோவிலை மையப்படுத்தியே படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கோவிலில் புதைந்திருக்கும் புதையலைக் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பலுக்கு பின்னணி கதை என்று சொல்லி அந்தக் கதையில் அனைத்துக் கதாபாத்திரங்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கேரக்டர்ஸ் வடிவமைப்புக்கு இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

தயாரிப்பாளரின் மகனான கிஷோர்தான் நாயகனாக நடித்திருக்கிறார். நடிப்பு சுத்தமாக வரவில்லை. வசன உச்சரிப்பைக்கூட சரியாக செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அனைத்துக் காட்சிகளிலும் ஒரே மாதிரியாகவே இருந்தால் எப்படி..? படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டே நாயகன் கிஷோர்தான்.

நாயகிகளில் இருவரும் கேமிராவுக்கேற்ற முகம். அதிலும் தங்கையாக நடித்த நித்யா ஷெட்டி துருதுருவென இருக்கிறார். அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பையும் காண்பித்திருக்கிறார். அக்கா தன் வாழ்க்கையில் குறுக்கே வருகிறாளா என்று சந்தேகப்படுவதும், பூக்கடை பாட்டி ஏற்றிவிடும்போது இவர் பேசும்பேச்சும் ரசிக்க வைக்கிறது.

அக்காவான சிராஸ்ரீ இன்னொரு பக்கம் அமைதியான குணத்துடன் மென்மையாக நடித்திருக்கிறார். கதையின் டர்னிங் பாயிண்ட்டே இவர்தான் என்பதோடு கதையை நகர்த்தவும் பெரிதும் உதவியிருக்கிறார்.

படம் முழுவதிலும் உடன் இருந்து கொஞ்சமும் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருப்பவர் வழக்கம்போல தம்பி ராமையாதான். நாயகனுக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார் தம்பி ராமையா.  “தர்மமே செய்யாதவனுக்கு தர்மகர்த்தா பதவி. நாடு எங்க வெளங்கும்..?” போன்ற கவுண்ட்டர் வசனங்களை எழுதுவதற்கே தனியாக ஆள் வைத்திருக்கிறாரோ என்னவோ.. அத்தனையும் புன்னகைக்க வைக்கும் பேச்சுக்கள்.

மூன்று வில்லன்கள் திடுதிப்பென்று வருகிறார்கள். அதில் நன்கு அறிந்த முகம் ஆர்.என்.ஆர்.மனோகர்தான். அவரும் பணத்திற்காக பெற்ற மகளையே கொலை செய்துவிடும் அளவுக்குக் கொடூரமாக இருக்கிறார்.

தம்பி ராமையாவுக்கு எப்போதும் பதிலுக்கு பதில் கவுண்ட்டர் கொடுக்கும் ‘ஹலோ’ கந்தசாமி, நாயகனின் அண்ணனாக நடித்தவர், நாயகிகளின் அம்மாவாக நடித்தவர், கோவில் பற்றி ஆராய்ச்சி செய்யும் நாயகனின் நண்பனும், அவரது காதல் மனைவியும் என்று பலரும் நல்லவிதமாகவே நடித்திருக்கிறார்கள். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

படத்தில் பாராட்டைப் பெறும் முதல் நபர் ஒளிப்பதிவாளர் பால பழனியப்பன்தான். படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் பகல், இருட்டு என்று தொடரும் இருவித ஒளிக் காட்சிகளையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார். அதிலும் கோவில் சம்பந்தப்பட்ட பல காட்சிகளின் ஏரியல் வியூ ஷாட்களிலும், முதல் பாடல் காட்சியிலும் கண்ணைப் பறிக்கிறது ஒளிப்பதிவு. வெல்டன் ஸார்.

இரவு நேரத்தில் கோவில் கோபுரங்களுக்குக்கூட சரியான அளவில் லைட்டிங் செய்து படமாக்கியிருக்கிறார்கள். டி.ஐ. வேலையையும்  மிகவும் தரமானதாக செய்திருக்கிறார்கள்.

 சி.சத்யாவின் இசையில் ‘அடங்கா குதிரை’ பாடலும், ‘அடியாத்தி’ பாடலும் கேட்க அருமை. பாடல் காட்சிகளும் குளுமை. ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். மற்றைய இரண்டு பாடல்களும் திரைக்கதையை நகர்த்தவும், தியேட்டரில் ரசிகர்களின் சோம்பலை முறிக்கவும் உதவியிருக்கின்றன.

படத் தொகுப்பாளர் இன்னும் தீவிர கவனத்துடன் இருந்திருந்தால் படத்தில் இரண்டு இடங்களில் தேவையற்ற காட்சிகள் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் மிகப் பெரிய குறை படத்தின் நீளம்தான். அளவுக்கதிகமான காட்சிகள் மற்றும் ஷாட்டுக்களால் படம் நிரம்பி வழிகிறது.

கிஷோர் தன் அண்ணனை தானே கொலை செய்துவிட்டனே என்று புலம்புகிறார். நாயகிகளின் அப்பா பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தைப் போட்டுவிட்டு அவன் ஓடிப் போக இவர் ஜெயிலுக்குப் போயிருக்கிறார்.

ராஜராஜ சோழனின் கட்டிட வடிமைப்புத் திறன் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைக்காக மெனக்கெடுகிறார் ஒருவர். இவரது மனைவியான தனது மகளை காதல் திருமணம் செய்தமைக்காக கொலை செய்யத் துடிக்கிறார் ஆர்.என்.ஆர்.மனோகர்.

கோவிலுக்குள் இருக்கும் புதையலைக் கண்டுபிடிக்க நித்யா ஷெட்டியைக் கையாளுகிறார்கள் வில்லன்கள். சரண்ராஜ் நல்லவராக தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இந்தக் கும்பலைப் பிடிக்கத் திட்டம் தீட்டுகிறார். மன நோய் காப்பகத்தில் ஆர்.என்.ஆர்.மனோகரின் மகளை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள்..

கோவிலுக்குள்ளேயே மருமகளால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு பெரியவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் தம்பி ராமையாவும், கிஷோரும். அதே ஆள்தான் இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருக்கிறான்.

இப்படி பல்வேறு கதை வடிவங்களை திரைக்கதையில் அடுக்கடுக்காய் கொண்டு வந்து இது அத்தனையையும் திரைக்கதை போகின்ற வேகத்தில் அவிழ்த்துவிட்டுவிட்டுப் போயிருக்கிறார் இயக்குநர். சிக்கல்களைத் தீர்த்தது சரியான விதத்தில்தான் என்றாலும் இத்தனை வெயிட்டையும் நம்மால் தாங்க முடியவில்லை என்பதும் உண்மைதான்..!

உண்மையாகச் சொல்லப் போனால் படத்தின் கதையை இப்படி துவக்கியிருக்கவே கூடாது. கிஷோர் முதலிலேயே போலீஸாக வருவது போலவே திரைக்கதையை அமைத்திருக்கலாம். அவரது அண்ணன் கொலை செய்யப்பட்ட கதையை முதலிலேயே சொல்லிவிட்டு அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய அவர் கிளம்பி, அவர் மூலமாகவே இந்தக் கொள்ளைக் கும்பல் பற்றித் தெரிய வந்து அதன் பின்பு அவர்களை அவர் எப்படி அழிக்கிறார் என்பதுபோல கொண்டு போயிருக்கலாம். இடையில் கோவிலுக்கு விசாரணைக்காக வந்துபோகும்போது நாயகிகளுடன் காதல் என்று அந்த போர்ஷனையும் தொட்டிருக்கலாம்.

இப்போது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல பல காட்சிகள், பல கதைகள்.. இடைவேளைக்கு பின்பு அடுத்தடுத்து டிவிஸ்ட்டுகளாக உடைவதால் அவையனைத்தும் சட்டென மனதில் உட்காரவில்லை. பல காட்சிகளை நீக்கியிருக்கலாம். இதனால் திரைக்கதை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகி படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கும்.

அரசர்கள் காலத்தில் கோவில்களை எதற்காகக் கட்டினார்கள்..? அது எப்படிப்பட்ட வடிவமைப்பில் கட்டப்பட்டது.? அதனுள் எதனை வைத்தெல்லாம் கட்டியிருக்கிறார்கள்..? கட்டப்பட்டதன் சூத்திரம் என்ன..? இதையெல்லாம் நாம் யோசிக்காமல்தான் தினமும் கோவில்களுக்குச் சென்று வருகிறோம். அவை அத்தனைக்கும் இந்த ஒரே படத்திலேயே பதில் சொல்லத் தலைப்பட்டிருக்கிறார் இயக்குநர் ஏழுமலை. இந்த சிறந்த எண்ணத்திற்காகவே அறிமுக இயக்குநரான அவருக்கு நமது பாராட்டுக்கள்..!

Our Score