“இந்தப் பட சமயத்தில்தான் எனது மனைவியை அடக்கி வைக்க முடிந்தது..!” – நடிகர் ஜெயம் ரவியின் சாதனை பேச்சு..!

“இந்தப் பட சமயத்தில்தான் எனது மனைவியை அடக்கி வைக்க முடிந்தது..!” – நடிகர் ஜெயம் ரவியின் சாதனை பேச்சு..!

ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரித்த திரைப்படம் ‘அடங்க மறு’.

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி.எஸ். இசையில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21-ம் தேதி வெளியிட்ட இந்தப் படம், பல போட்டிகளையும் தாண்டி இப்போதும் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

adanga maru-movie-success-meet-15

நிகழ்ச்சியில் படத்தின் வசனகர்த்தா விஜி பேசுகையில், “ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை’ என்றார். அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். ‘அடங்க மறு’வுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறணும் என எந்த பொறாமையும் இல்லாமல் இருந்த இந்த குழுவினரின் மனசுதான் இந்த பெரிய வெற்றிக்கு காரணம்…” என்றார்.

adanga maru-movie-success-meet-12

நடிகர் அழகம்பெருமாள் பேசும்போது, “இந்தப் படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் மிக ஆழமானவை, மிக முக்கியமானவை. நாட்டில் இன்று பேச வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறது, அது மக்களை மிகச் சிறப்பாக, சரியானவிதத்தில் சென்றடைந்திருக்கிறது..” என்றார்.

adanga maru-movie-success-meet-11

இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் பேசுகையில், “நான் எந்த படத்துக்கும் இதுவரை தியேட்டர் விசிட் போனதில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநரும், ஹீரோவும் அழைத்ததால் நானும் விசிட் போயிருந்தேன். மதுரையில் மிகப் பெரிய கூட்டத்தில் சிக்கி, போலீஸிடம் அடி வாங்கினேன். ஒரு படத்தின் உண்மையான வெற்றி எங்கு தெரியும் என்றால் தியேட்டரில்தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது…” என்றார்.

adanga maru-movie-success-meet-9

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “இந்தக் கதையை இயக்குநர் கார்த்திக் 7 வருடங்களுக்கு முன்பேயே என்னிடம் சொன்னார். அப்போது சொன்ன கதையை இந்தக் காலத்துக்கும் ஏற்றவாறு கொடுப்பது ஒரு கலை. அதை சிறப்பாக செய்திருந்தார் கார்த்திக். ஒரு நல்ல படம் நல்ல நோக்கத்தோடு வந்தால் அதை எல்லோரும் கொண்டாடுவார்கள் என்பது இந்த படத்தின் மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது..” என்றார்.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், “முதல் படத்திலேயே என்னை வெற்றிப் பட தயாரிப்பாளராக மாற்றிய ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுக்க எங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்திருக்கிறது. எங்களது தயாரிப்பின் அடுத்தப் படம் இந்த ‘அடங்க மறு’ படத்தைவிடவும் 10 மடங்குகள் பெரிய படமாக இருக்கும்…” என்றார்.

adanga maru-movie-success-meet-7

படத்தின் இயக்குநரான கார்த்திக் தங்கவேலு பேசுகையில், “இந்தப் படம் ஒரு குழு முயற்சி. இந்தக் கதை மீது என்னைவிட அதிக நம்பிக்கை வைத்தது சுஜாதா மேடம்தான். ஜெயம் ரவி எனக்கு இப்போதும் ஒரு நல்ல குருவாக இருக்கிறார். என்னை வழி நடத்துகிறார். என்னை எப்போதும்  ஊக்கப்படுத்துவார்.

அடுத்து ஒரு பெரிய படத்தை திட்டமிட்டு வருகிறோம். அதை சரியான நேரத்தில் அறிவிப்போம். என்னைவிட அதிகம் உழைத்தது உதவி இயக்குநர்களாக இருந்த என் நண்பர்கள்தான். தியேட்டர் விசிட் போனபோது நிறைய பெண்கள் மிகவும் படத்தோடு ஒன்றி பேசினார்கள். இதுதான் படத்தின் உண்மையான வெற்றி…” என்றார்.

adanga maru-movie-success-meet-5

நாயகன் ஜெயம் ரவி பேசுகையில், “இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் இயக்குநர் கார்த்திக் தங்கவேலு மற்றும் தயாரிப்பாளரும், எனது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் அவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம்.

‘தனி ஒருவன்’ திரைப்படம் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டானது. ‘அடங்க மறு’ படத்தின் விமர்சனங்களை படித்தபோது, அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.

எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் அதைக் கொடுக்கும் விதம்தான் மிகவும் முக்கியம். இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கார்த்திக்கைத்தான் சாரும்.

இந்த படத்தை என் மாமியார் சுஜாதா தயாரித்து இருந்தது எனக்கு பல விஷயங்களில் சவுகர்யமாக இருந்தது. என் மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி இருந்தது என்பது இந்தப் படத்தில் நான் நடித்த சமயத்தில் மட்டும்தான்.

வீட்டில் ஆர்த்தி என்னுடன் ஏதாவது சண்டை போட்டால் ‘படப்பிடிப்புக்கு செல்ல மாட்டேன்’ என்று பிளாக் மெயில் செய்ய தொடங்கினேன். என்னுடன் சண்டை போடுவதற்காகவே ‘படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்த முடியுமா..?’ என்று அவரது அம்மாவிடம் ஆர்த்தி கேட்பார். அந்த அளவுக்கு அவரை அதட்டி வைத்து இருந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் அவர் அடங்கியே இருந்தார்.

நான் இந்தப் படத்தில் கதையை நம்பியதைவிடவும் இயக்குநர் கார்த்திக்கைத்தான் அதிகம் நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார்.  இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில்  இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்…” என்றார்.

இந்தச் சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், கலை இயக்குநர் லால்குடி என்.இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், ஆடை வடிவமைப்பாளர் கவிதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
error: Content is protected !!