அடங்க மறு – சினிமா விமர்சனம்

அடங்க மறு – சினிமா விமர்சனம்

ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இவர் படத்தின் நாயகனான ஜெயம் ரவியின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஜெயம் ரவியும், ராஷி கண்ணாவும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, மைம் கோபி, அழகம் பெருமாள், ஸ்ரீரஞ்சனி, மீரா வாசுதேவன், பஞ்சு சுப்பு, கஜராஜ், மாத்யூ வர்க்கீஸ், நிதின் மேத்தா, பரத் ராஜ், ஷபீர், விஜய் விக்டர். ராஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம் – கார்த்திக் தங்கவேல், தயாரிப்பு நிறுவனம் – ஹோம் மூவி மேக்கர்ஸ், தயாரிப்பாளர் – திருமதி. சுஜாதா விஜயகுமார், இணை தயாரிப்பு – ஆனந்த் சாய், கள தயாரிப்பாளர் – அனுஷா விஜய்குமார், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.சுதர்சன், இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, பாடல்கள் – யுகபாரதி, லோகன், சாம் சி.எஸ்., வசனம் – விஜி, சண்டை இயக்கம் – ஸ்டன் சிவா, நடன இயக்கம் – தினேஷ், ஆடை வடிவமைப்பு – ஜே.கவிதா, காஸ்டிங் இயக்குநர் – நித்யா ராம், தயாரிப்பு மேற்பார்வை – நாகராஜன், ஒப்பனை – எஸ்.ஏ.சண்முகம், உடைகள் – கே.சாரங்கன், நிழற்படம் – எஸ்.முருகதாஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, விளம்பரம் – ஷியாம், விளம்பர வடிவமைப்பு – என்.டி.பிரதுல்.

பிரபல விநியோகஸ்தரான கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V.சத்தியமூர்த்தி இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்.   

தன் குடும்பத்தைப் படுகொலை செய்த அதிகாரத்தில் இருப்பவர்களின் வாரிசுகளை திட்டம் போட்டு படுகொலை செய்யும் ஒரு முன்னாள் சப்-இன்ஸ்பெக்டரின் கதைதான் இத்திரைப்படம்.

சுபாஷ் ரவி என்னும் ஜெயம் ரவி புதிதாக வேலையில் சேர்ந்துள்ள சப்-இன்ஸ்பெக்டர். அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அவரது எல்லைக்குட்பட்ட ஒரு இடத்தில் பல மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்பே மேலிருந்து தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணையில் கண்டறிகிறார் ஜெயம் ரவி.

ஆனால் இந்தப் பெண்ணின் கொலையை தற்கொலை என்று சொல்லி கேஸை முடிக்கிறார் இன்ஸ்பெக்டர் மைம் கோபி. இதனை தட்டிக் கேட்க முடியாத கோபத்தில் இருக்கிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் இந்தக் கொலையைச் செய்ததே நாங்கள்தான் என்று மிகப் பெரிய பணக்காரரான பாபு ஆண்டனியின் மகன் அபிஜித்தும் அவனது மூன்று நண்பர்களும் சேர்ந்து சொல்கிறார்கள். அதற்கான ஆதாரமாக வீடியோவையும் காட்டுகிறார்கள்.

ஜெயம் ரவி கோபப்பட்டு அவர்களை அடித்து, உதைத்து ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து லாக்கப்பில் அடைக்கிறார். உடனேயே சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு ஓடி வருகிறார்கள். வருபவர்களில் ஒருவர் மாவட்ட கலெக்டர்.

உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் துணை கமிஷனர் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டவர்களை தன்னுடைய உத்தரவின்பேரில் விடுவிக்கிறார். ஜெயம் ரவியை சஸ்பெண்ட் செய்கிறார் இன்ஸ்பெக்டர் மைம் கோபி.

இந்தச் சோகத்துடன் வீடு திரும்பும் ஜெயம் ரவிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அன்றைக்குத்தான் குடியேறிய புத்தம் புது வீட்டில் அவரது அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அவர்களின் ஒரு பெண் குழந்தை ஆகிய ஐவரும் எரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதைச் செய்தது பாபு ஆண்டனியின் மகனது ஆட்கள்தான் என்பது ஜெயம் ரவிக்குத் தெரிகிறது.

ஆனால் இந்த அதிகார வர்க்கத்தையும், பணக்காரர்களையும் எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறார் ஜெயம் ரவி. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து “அந்த நால்வரையும் அவர்களது பெற்றோர்கள் கையாலேயே சாகடிக்கிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்…” என்று துணை கமிஷனர் சம்பத்ராஜிடம் சவால்விட்டுவிட்டு தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்கிறார் ஜெயம் ரவி.

பதவியை ராஜினாமா செய்த அடுத்த இரண்டு நிமிடங்களில் மாவட்ட கலெக்டரின் மகன் துணை கமிஷனர் அலுவலகத்தின் வாசலில் இருந்த காருக்குள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிறான்.

ஆதாரம் இல்லாததால் ஜெயம் ரவியை ஏதும் செய்ய முடியாத சூழலாலும், ஜெயம் ரவி இதைத் தொடர்ந்து தலைமறைவாகிவிட்டதாலும் அவரைப் பிடிக்க முடியாமல் தவிக்கிறார் துணை கமிஷனர் சம்பத்ராஜ். அதே சமயம் தன்னுடைய குடும்பத்தை அழித்த மீதமுள்ள நண்பர்கள் மூன்று பேரையும் பழி வாங்கத் துடிக்கிறார் ஜெயம் ரவி.

தனது சபதத்தை நிறைவேற்றினாரா.. இல்லையா..? எப்படி அவர்களை பழி வாங்கினார்..? போலீஸார் என்ன செய்தார்கள்..? என்பதெல்லாம் இடைவேளைக்கு பின்னான கதை..!

இந்திய சினிமாவில் தற்போதைய டிரெண்ட்டான பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது என்றாலும் ஜெயம் ரவி குடும்பத்தினரின் படுகொலைதான் படத்தின் மையக் கருத்தாக இருக்கிறது.

கோபம், வீரம், சோகம் என்று தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற் போன்று நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அவரது நடிப்பு இல்லாமல் அனைத்துமே ஆக்சன் பிளாக்குகளாக இருப்பது படத்தின் மிகப் பெரிய குறை. மிகச் சாதாரணமான சப்-இன்ஸ்பெக்டராக அறிமுகமாகி பின்பு தொழில் நுட்பத்திலும், வேதியியலிலும், அறிவியலிலும் சிறந்து விளங்கும் அறிவாளியாகவும் மாறிவிடுகிறார் ஜெயம் ரவி.

தன் காதலி ராஷி கண்ணாவிடம் மோதிரத்தைக் கொடுத்து “என்னை கல்யாணம் செஞ்சுக்குறியா..? என்று கேட்க, ராசி கண்ணாவோ, “கல்யாணத்தைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம். இந்த மோதிரம் நல்லாயிருக்கு. அதுனால இதை நான் வைச்சுக்கிறேன்…” என்று சொல்ல.. இப்படி பல்பு வாங்கும் காட்சியில்தான் யூத்தான ஜெயம் ரவியைப் பார்க்க முடிந்தது. மற்றபடி அனைத்துக் காட்சிகளிலும் வீர, தீர, பராக்கிரம ஜெயம் ரவியைத்தான் பார்க்க முடிகிறது.

தன்னை விசாரணை செய்யும் சம்பத் ராஜிடம் “எவிடென்ஸ் இருக்கா..?” என்று அவர் பாணியிலேயே திருப்பிக் கேட்கும் தோரணையிலும் கொஞ்சம் கவர்ந்திழுக்கிறார் ரவி. மற்றபடி அவர் எப்போதும் போலவே இருக்க.. கதையும், திரைக்கதையும் அவரை படம் முழுவதும் ஓட வைத்திருக்கிறது.

நாயகி ராசி கண்ணா.. நல்லவேளை காதலுக்கு முன்னோட்டமெல்லாம் இல்லாமல் நேரடியாக காதலியாகவே காட்டிவிட்டார்கள். நேரம் மிச்சமாகிவிட்டது போலும். நடிப்புக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசிவரையிலும் இருந்து நாயகனுக்கு அவர் செய்யும் வீரப் போராட்டத்திற்கு உதவி செய்கிறார்.

சம்பத் ராஜூம், மைம் கோபியும், அழகம் பெருமாளும், முனீஸ்காந்தும்தான் ஜெயம் ரவியுடன் அதிக நேரம் பேசுகிறார்கள். நடித்திருக்கிறார்கள். அதிலும் அழகம் பெருமாளுக்கு ஒரு ஸ்வீட் பொக்கே பார்சல். நடு இரவில் நட்ட நடு ரோட்டில் பாபி ஆண்டனியின் மகனது காரை போலீஸ் செக்கிங்கிற்காக ஜெயம் ரவி மறித்ததை பார்த்து பதறியடித்து ஓடிப் போய் சமாளிக்கும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் அழகம் பெருமாள்.

இதேபோல் சம்பத் ராஜ் பல காட்சிகளில் ஒரிஜினல் வில்லனாகவே மாறிவிட்டார். கடைசியாக உச்சக்கட்ட டென்ஷனில் ஜெயம் ரவியிடம் விசாரிக்கும்போது பாவமான நிலைமைக்கே தள்ளப்படுகிறார். இதேபோலத்தான் மைம் கோபியும். “இந்த ஸ்டேஷன்ல நான் இன்ஸ்பெக்டரா.. இல்ல நீ இன்ஸ்பெக்டரா..?” என்று கேட்டு மிரட்டியபடியே கேஸை குளோஸ் செய்யும் மைம் கோபி… கடைசிவரையிலும் உடன் இருந்து வில்லத்தனத்தை செய்திருக்கிறார். முனீஸ்காந்த் ஜெயம் ரவியிடம் போலீஸ் துறையின் யதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லி நண்பராக இருக்க முனைந்திருக்கிறார்.

இவர்களைத் தாண்டி ஜெயம் ரவியின் அப்பா பொன்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சனி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணி மீரா வாசுதேவன் ஆகியோர் சில காட்சிகளில் நடித்துள்ளனர். இவர்களுக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை.

சத்யன், சூரியனின் ஒளிப்பதிவுக்கு ஒரு ஷொட்டு. இரவு நேரக் காட்சிகளிலும், கிளைமாக்ஸ் காட்சிகளிலும் ஒரு பரபரப்பைக் கூட்டுவதை போல கேமிரா கோணங்களை அமைத்து பரபரப்பாக படமாக்கியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டை காட்சியும், ஜெயம் ரவியை விசாரணை செய்யும் காட்சிகளும் கொஞ்சம் டென்ஷனாகவே இருப்பது ஒளிப்பதிவாளரின் தயவால்தான். பாராட்டுக்கள்.

கலை இயக்குநர் லால்குடி என்.இளையராஜா பெரிதும் பாராட்டுக்குரியவராகிறார். எந்தக் காட்சியிலும் எதையும் பிளான்க்காக விட்டு வைக்காமல் கேமிராவின் காட்சிக்கு இருப்பிடங்களை அழகுபடுத்தியிருக்கிறார். இயக்குநரின் எழுத்துத் திறமைக்கேற்றவாறு வேதியியல் பொருட்களையும் கச்சிதமாகப் பொருத்தி தன் வேலையைத் திறம்பட செய்திருக்கிறார்.

சி.எஸ்.சாமின் இசையில் ‘ஓ சாயாலி’ பாடல் மட்டும் கேட்க வைக்கிறது. பாடலைவிடவும் பாடல் காட்சிகளில் லயித்துப் போனதால் பாடலை தனியாகக் கேட்டுத்தான் ரசிக்க வேண்டும். ‘கார் இருள்’ பாடலைப் பாடிய ஹரிச்சரண் பாடலைக் கடித்துத் துப்பியிருக்கிறார். இது போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பாடல்களையெல்லாம் எப்படி பாட வேண்டும்..? எப்படி பாட வைக்க வேண்டும் என்பதை முந்தைய கால பாடல்களை பார்த்தாவது தெரிந்து கொண்டால் நல்லது.

ஸ்டன் சிவாவின் வழிகாட்டுதலில், தொழில் நுட்பத்தின் உதவியோடு.. சண்டை காட்சிகளை மிக பயங்கரமாக படமாக்கியிருக்கிறார்கள். இயக்குநர் ராதா மோகனின் ஆஸ்தான வசனகர்த்தாவான விஜி படத்தில் வசனம் எழுதியிருந்தும் லேண்ட்மார்க்காக ஒரு வசனமும் சிக்காமல் போனது நமது துரதிருஷ்டம்தான்..!

படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கப் போகிறது என்பது சின்னக் குழந்தைக்கே தெரியக் கூடியாத இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனமாகிவிட்டது. அதோடு திரைக்கதையில் பலவித லாஜிக் எல்லை மீறல்களை வைத்து தமிழக போலீஸ் எதையுமே செய்ய முடியாமல் போகிறது என்பதாகவும் திரைக்கதை அமைத்திருப்பது சிறுபிள்ளைத்தனம்.

மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பெரும் பணக்காரர்களே கூட்டணி வைத்திருப்பதால் ஒரே குண்டு.. சுட்டுத் தள்ளிவிட்டுப் போயிருந்தால் கதையே முடிந்து போயிருக்குமே..? ஹீரோ வந்துதான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஜெயம் ரவி என்ற மார்க்கெட் உள்ள ஹீரோவுக்காக திரைக்கதையை மாற்றியிருப்பதால் இதுவொரு சாதாரணமான  கமர்ஷியல் படமாக மாறிவிட்டது.

ஜெயம் ரவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்யாமல் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து கொண்டே அவர்களை பழி வாங்குவதுபோல செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அதிலும் அவர் ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரியாக இருக்கும்பட்சத்தில் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதுதான் அவரது வேலையே தவிர.. அவர்களை கொலை செய்வதல்ல.. கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாதே.. பின்பு விசாரணை எதற்கு..? நீதிமன்றங்கள் எதற்கு..?

உயரதிகாரிகள் இந்தக் கொலைக்கு உடந்தை என்றால் அதையும் மறைமுகமாக அவர் வெளிப்படுத்தும்விதத்தில் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தானே அவர்களை படுகொலை செய்வதாகச் சொல்லிவிட்டுச் செய்வதெல்லாம் படத்தின் நாயகனின் இமேஜை காலி செய்துவிட்டது.

நால்வரையும் கடத்திச் செல்லும் மர்மக் கதைகளை மறைத்துவிட்டு கடத்தப்பட்ட பின்பு நடப்பதுதான் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் காட்சிகளை திரைக்கதைக்கு ஏற்றாற்போன்று மிக எளிதாக்கியிருக்கிறார் இயக்குநர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சில சபாஷ்களும் படத்தில் இல்லாமல் இல்லை. துவக்கத்தில் டாஸ்மாக் கடை வாசலில் போராடும் மாணவர்களை மறைமுகமாகத் தூண்டிவிட்டு போராட்டத்தைப் பெரிதாக்கி கடைசியாக அவர்களுக்கு நல்லதாகவே பிரச்சினை முடிய உதவி செய்யும் திரைக்கதை பாராட்டுக்குரியது.

அதேபோல் இறந்து போன பெண்ணின் பெற்றோரை தூண்டிவிட்டு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அவர்களை அமர வைத்து விசாரணையை நடத்த வைக்கும் தந்திரத்தையும் ஜெயம் ரவியே செய்கிறார். இவ்வளவு செய்பவரை, இதே போஸ்ட்டிங்கில் இருந்து கொண்டே அவர்களை வேறு வழக்குகளிலாவது சிக்க வைத்து பிடிப்பது போல திரைக்கதையை மாற்றி எழுதியிருக்கலாமே..?

இதேபோல் விமான நிலையத்தில் மைம் கோபி ஜெயம் ரவியைக் கைது செய்ய வரும்போது சட்டென்று துப்பாக்கியை வெளிப்படுத்தி அதைச் சுட்டுக் காண்பித்து தனது கைதை ஊரறியச் செய்யும் திரைக்கதை அபாரம்.

மேலும் ஒரு வில்லனை விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் மாட்டிவிடும் திட்டமும் பலே. கடைசியாக அபிஜித்திற்கு வைத்திருக்கும் கொலை டெக்னிக்கும் வித்தியாசம்தான்.. இப்படி இயக்குநர் நான்கு பேருக்கும் நான்குவிதமான திட்டங்களுக்கு ரொம்பவே யோசித்துதான் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

எல்லாம் முடிந்து ஜெயம் ரவிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் சொன்ன பிறகு ஐ.பி.எஸ். முடித்து அதே பகுதிக்கு துணை கமிஷனராகப் பொறுப்பேற்க வருகிறார் ஜெயம் ரவி. இத்தனை வேகமாகவா திரைக்கதை அமைக்க வேண்டும்..? இப்படியொரு பிரச்சினையில் சிக்கியிருந்தால் ஐ.பி.எஸ். நேர்முகத் தேர்வுக்கே போக முடியாது என்பது இயக்குநருக்குத் தெரியுமா..?

நாயகப் பிம்பத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக படத்தின் கதையை இப்படி முடித்திருக்கிறார் போலும். இத்தனை கொலைகளையும் சர்வசாதாரணமாகச் செய்துவிட்டு “பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறதே என்ன செய்யப் போறீங்க..?” என்று பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு “சட்டம் தன் கடமையைச் செய்யும்..” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போகிறார் ஜெயம் ரவி.

கொலைக்குக் கொலை சரியாகாது.. போலீஸே ரவுடிபோல் படுகொலைகளை செய்துவிட்டு கொஞ்சமும் வருத்தம் இல்லாமல் போலீஸ் பணியில் சேர்வதுபோல காட்சிப்படுத்துவது படுகொலைகளை ஆதரிப்பது போலாகும்.. இயக்குநர் செய்திருக்கும் மிகப் பெரிய தவறு இதுதான்..! படமே தவறான ஒரு கருத்தைக் கொண்டுள்ளது..!

எப்படியிருந்தாலும் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்கிற கோட்பாடுக்குள் இந்தப் படமும் அடங்குகிறது என்பதைத் தயங்காமல் சொல்லலாம்.
error: Content is protected !!