“ஜெயலலிதாவை பெல்காம் சிறைக்கு மாற்ற வேண்டும்..”-கன்னட நடிகையின் கோரிக்கை..!

“ஜெயலலிதாவை பெல்காம் சிறைக்கு மாற்ற வேண்டும்..”-கன்னட நடிகையின் கோரிக்கை..!

சொத்துக் குவிப்பு வழக்கால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருக்கும் ஜெயலலிதாவால், தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவே கெடும் சூழல் இருக்கிறது..!

இந்த நேரத்தில் வளர்ந்து வரும் கன்னட நடிகையான ஸ்வேதா பண்டிட் தனது முகநூல் பக்கத்தில், "ஜெயலலிதாவை மகாராஷ்டிரா எல்லையிலுள்ள பெல்காம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றிவிட்டால், எல்லை பிரச்சினையில் கர்நாடகாவுக்கு நியாயம் கிடைப்பதுடன் அங்கு சுற்றுலாவும் வளர்ச்சியடையும்..." என்று தைரியமாக விமர்சித்து கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார்.

ஸ்வேதா பண்டிட் தனது முக நூல் செய்தியில், "ஜெயா அம்மாவை பெலகாமிலுள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம், அடுத்த நான்காண்டு காலத்திற்கு அங்கு சுற்றுலா துறை நன்கு வளர்ச்சியடைந்து கர்நாடக சுற்றுலா துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து ஒரேநாளில் வந்துவிட்டு திரும்பிவிடுகின்றனர். பெல்காம் சிறை என்றால் அவர்கள் வந்து செல்ல இரண்டு, மூன்று நாட்கள் தேவைப்படும். அப்போது அம்மாவின் தொண்டர்கள் செய்யும் செலவு நமது மாநிலத்து வியாபாரிகளுக்கு ஆதாயமாக மாறும்.

நாட்டிலுள்ள பெரும்பான்மை ஊடகங்கள் பெல்காமில் குழுமி ஜெயலலிதா குறித்த செய்திகளை ஒளிபரப்புவார்கள். இதனால் பெல்காம் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது நாட்டு மக்களுக்கு அழுத்தமாக பதியும். இதன் மூலம், வருங்காலங்களில் மராட்டியர்கள் கலாட்டா செய்தாலும், தேச மக்களும், பத்திரிகைகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிடுவார்கள்..." என்று பெரிதாக எழுதியிருந்தாராம்..

ஏற்கெனவே பெல்காம் மாவட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்கும் இடையில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. பெல்காம் மாவட்டம் தனக்கு சொந்தமானது என்று மகாராஷ்டிரா அரசு சொல்லி வருகிறது. கர்நாடக அரசு இதை மறுத்து வருகிறது..

பெல்காமை கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் காட்டுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு சட்டசபை கட்டிடத்தை உருவாக்கியது கர்நாடக அரசு. ஆண்டுக்கு ஒரு முறை அங்குதான் கர்நாடக சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் வரும் நவம்பர் 1-ம் தேதி, கர்நாடக மாநிலம் உதயமான தினத்தில், பெல்காமின் பெயரை, 'பெலகாவி' என்று சுத்த கன்னட பெயராக மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தொட்டுப் பேசுவதுபோல ஜெயலலிதாவையும் பெல்காமில் கொண்டு வந்து சிறை வைக்க வேண்டும் என்று பேசிவிட்டாராம் நடிகை ஸ்வேதா பண்டிட்.

இதைப் படித்தவுடன் நிறைய பேர் இதனை ஷேர் செய்தும், லைக் செய்தும், வாக்குவாதங்கள் செய்தும் கொண்டிருக்க சில மணி நேரங்கள் கழித்து, தனது நெருங்கிய நண்பர்களின் ஆலோசனைப்படி அந்த நிலைத் தகவலை அழித்துவிட்டாராம் ஸ்வேதா பண்டிட்..!

என்னமோ சொல்வாங்களே.. ஆடு இளைச்சா..... அந்தக் கதைதான்..!