“பயன்படுத்திய துணிகளை தானமாக அளிக்காதீர்கள்…” – நடிகை சுஹாசினி மணிரத்னம் வேண்டுகோள்..!

“பயன்படுத்திய துணிகளை தானமாக அளிக்காதீர்கள்…” – நடிகை சுஹாசினி மணிரத்னம் வேண்டுகோள்..!

சென்னை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பலரும் முன்வரும் நிலையில் அவர்களில் சிலர், தாங்கள் பயன்படுத்திய, அதே சமயம் பிடிக்காத, பழைய துணிகளையும் கொடுத்து வருகிறார்களாம்.

இதைச் சுட்டிக்காட்டி நடிகை சுஹாசினி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று எழுதியுள்ளார்.

அது இங்கே :

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் கொடுப்பது துணிமணிகள், உணவுப் பொருட்கள் என்று எதுவாக இருந்தாலும் அதனை பாதுகாப்பான நிலையில் செய்யுங்கள், கண்ணியமாகக் கொடுங்கள், உங்கள் வீட்டில் பீரோவை இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறதே என்றெண்ணி அந்தப் பொருட்களை எடுத்துக் கொடுக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காத உடைகளை அப்புறப்படுத்த, இந்த வெள்ளத்தை ஒரு காரணமாக தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். நீங்கள் பயன்படுத்திய பழைய உடைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கும் முன், ஒரு நிமிடம் யோசியுங்கள்.

நான் ரேகா பயன்படுத்திய உடைகளை பயன்படுத்தியிருக்கிறேன். வாணி கணபதி பயன்படுத்திய உடைகளை எடுத்துக் கொண்டுள்ளேன். என் ஜீன்களை என் சகோதரிகளான நந்தினியும், சுபாஷினியும் பயன்படுத்தியுள்ளார்கள். எனது ஷிபான் சேலைகளை பயன்படுத்த உமா பத்மநாபன் ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் தி.நகரைச் சேர்ந்த ஒரு கலையரசியும், முகப்பேரைச் சேர்ந்த பொன்மொழியும், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மனோன்மணியும் எனது சேலைகள், நான் பயன்படுத்திய உள்ளாடைகளை போட்டுக் கொள்ள என்ன தேவையிருக்கிறது..?

அவர்களுக்கு ஏன் நாம் புதுச் சேலைகள் வாங்கித் தரக் கூடாது..? கடைகளில் 120 ரூபாய்க்கு சேலைகள் இல்லையா..? ஓரளவு நல்ல நிலையில் உள்ள கொஞ்சம் புதிதான உடைகளோ, அல்லது பயன்படுத்திய உடைகள் என்றால் அவற்றை உங்களது உறவினர்கள், சகோதரிகளுக்குக் கொடுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய துணிகளைக் கொடுங்கள்.

உங்கள் பீரோவையோ, அலமாரிகளையோ காலியாக்கி நீங்கள் உதவத் தேவையில்லை. உண்மையான பாதுகாப்பான நோக்கத்துடன் உதவுங்கள்..” என்று எழுதியுள்ளார்.

suhasini-2

சுஹாசினியும், மணிரத்னமும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறார்கள்.

manirathnam-1

இதற்காக 10 கிலோ அரிசி, 3 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய், உப்பு, மிளகாய் பாக்கெட்டுகள், மசாலா பொடி பாக்கெட், 10 கிலோ வெங்காயம், 10 கிலோ உருளைக்கிழங்கு, பால் பவுடர் பாக்கெட், சானிட்டரி நாப்கின், டெட்டால் போன்றவைகள் அடங்கிய பெரிய பார்சல்களை தயார் செய்து இன்று பல இடங்களில் விநியோகம் செய்துள்ளனராம்.  இந்தப் பணி நாளையும் தொடருமாம்.




error: Content is protected !!